நான்கு மாணவிகள் தற்கொலை செய்த விவகாரம்: ஆசிரியர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள பனம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நால்வர் தற்கொலை செய்து கொண்ட விவகராத்தில் தமிழக அரசு ஆசிரியர்கள் மீதான தற்காலிக பணியிடை நீக்க உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ், தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சருக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

மாணவிகளின் இந்த முடிவு அனைவரையும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. ஆசிரியர்கள் பணியிடை நீக்க விஷயத்தில் அரசு தீர விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். யாரையோ சமாதானப்படுத்துவதற்காக ஆசிரியர்களை உடனடியாக தற்காலிக பணியிடை நீக்கம் என்று பலியாக்கினால், அவர்கள் எப்படி கற்றுத் தருவார்கள்.

ஐயா கண்களை மட்டும் விட்டுவிடுங்க மற்றப்படி படிக்கலனா நல்ல அடிங்க என்று கூறியது ஒரு காலம். அப்போது மாணவர்கள் படித்தனர். தற்கொலை இல்லை. மாணவர்களை அடிக்க கூடாது என்று சட்டம் போட்டார்கள். மாணவன் ஆசிரியரைஅடிக்க தொடங்கினான் , ஆசிரியரை கத்தியால் காயப்படுத்தினான். ஆனாலும் அவனுக்கு தண்டனையில்லை. அவன் மனம் நோகும்படி திட்டக்கூடாது என்றார்கள். ஆனால் அவன் ஆசிரியர்ஆசிரியைகளை காதுகளில் கேட்கமுடியாத வார்த்தைகளால் திட்டுகிறான். தண்டிக்கவும் முடியவில்லை, தட்டிக் கேட்கவும் முடியவில்லை.

தண்டிக்கவும் கூடாது , திட்டவும் கூடாது என்று பெற்றோரை அழைத்து வரச் சொன்னால் அதற்கும்  தண்டனையா என்றால் ஆசிரியர்கள் என்னதான் செய்வார்கள். இரவு வீட்டிற்கு தாமதமாக வரும் பிள்ளைகளை கேள்விகள் கேட்க பெற்றோருக்கு உரிமை உன்டு. ஆனால் பள்ளிக்கு தினம் தாமதமாக வரும் மாணவனை கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லை. தான் சொன்ன வேலையை செய்யாதப் பையனை தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு, ஆனால் தான் சொன்ன வீட்டுபாடத்தை தினம் தினம் செய்ய தவறிய மாணவனைக் கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை இல்லை.

ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் பையனை தட்டிக் கேட்க , தண்டிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு ,ஆனால் பள்ளியில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவனை தட்டிக் கேட்க ஆசிரியருக்கு உரிமை இல்லை. அவனது பாடம் தொடர்பான குறைகள், பள்ளியில் உள்ள ஒழுங்கீனத்தை பெற்றோரிடம் சொல்ல, அவர்களை அழைத்து வரச் சொன்னால் இது தான் தண்டனையா.

தினம் தினம் பல்வேறு சூழ்நிலைகளில் வரும் பிள்ளைகளுடன் ஆசிரியர்கள் படும் பாட்டை அரசு அறிய வேண்டும். தங்களது பிள்ளைகளை மறந்து, அனைத்து தரப்பு பிள்ளைகளுக்காக, அவர்களின் எதிர் காலத்திற்காக, உழைக்கும் ஆசிரியர்களை போற்ற விட்டாலும், தூற்றாமலாவாது இருக்க வேண்டும். இதே சூழ்நிலை தொடர்ந்தால், ஆசிரியர்கள் தங்களது வேலையைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களது கடமையான பாடத்தை மட்டும் நடத்திவிட்டு சென்று விடுவார்கள். எதிர்கால சமுதாயத்தின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கும்.

தமிழக அரசு பனம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் விஷயத்தில் உடனடியாக அவர்களது பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவர்களை பணியிடை மாற்றம் செய்து, தொடர்ந்து அவர்கள் பணிபுரிவதை உடனே உறுதி செய்ய வேண்டும் என காமராஜ் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com