புது தில்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களையும் அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆண்களைப் போல, அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவும் கேரள அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், கேரளாவில் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
சபரிமலை அய்யப்பன் கோயிலின் பாரம்பரிய வழிபாட்டு முறையை பாதுகாக்க வேண்டும் என்று கோரியும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருப்புனிதுரா, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திருனாக்கரா ஆகிய இடங்களில் நேற்று அய்யப்ப பக்தர்கள் பேரணி நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதில்லை என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்த நிலையில், சபரிமலை கோயிலுக்கு ஆபரணங்களை அளித்து வரும் பந்தளம் அரண்மனை பிரதிநிதிகள், சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கேரள அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்யாவிட்டால், தாங்களே சீராய்வு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் பந்தளம் அரண்மனை கூறியதாக தகவல் வெளியானது. இந்த விவகாரத்தில் சுமுக முடிவு எடுக்கவும், சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கவும் பந்தளம் அரண்மனை, தேவசம் போர்டு மற்றும் அய்யப்பன் கோயில் தந்திரிகளுக்கு முதல்வர் பிரனாயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், பந்தளம் அரண்மனை நிர்வாகிகளும், அய்யப்பன் கோயில் தந்திரிகளும் முதல்வரின் அழைப்பை நிராகரித்தனர்.
இந்நிலையில், தேசிய அய்யப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் ஷியாலாஜா விஜயன் இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், எந்தவொரு மதத்தின் வழிபாட்டு முறையிலும் தலையிடக் கூடாது என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை என்பதால் இந்த தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் 10 வயது முதல் 50 வரையிலான பெண்கள் ஐயப்பன் கோவிலில் வழிபடலாம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தீர்ப்பை வழங்க வேண்டும். மேம்போக்காக இந்த உத்தரவை பிறப்பிக்காமல், அறுதியிட்டு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. அந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சபரிமலை வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சமீபத்தில் ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது ரஞ்சன் கோகாய் புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ள நிலையில், சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குரைஞர் தமிழ் மணி என்பவர் கூறுகையில், ஏற்கனவே, உள்ள வழக்கில் பிரதிவாதியாக இல்லாத ஒரு புதிய அமைப்பு வழக்கு தொடர்ந்திருப்பதால், இதை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா என்பது சந்தேகம் என்றார்.
வழக்கில் பிரதிவாதியாக இருந்த தேவசம் போர்டு, இந்த வழக்கில் சீராய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மெட்டாவில் ஆள்குறைப்பு நடவடிக்கை: ஊழியர்களுக்கு அதிகாலையில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் - பின்னணியில் என்ன?

மனித உரிமை செயல்பாட்டாளர்களை மண்டியிடச் செய்த இஸ்ரேல் அமைச்சர்: வலுக்கும் கண்டனம்!

இன்றைய செய்திகள்! - நேரலை

அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: காங்கிரஸ்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



