Enable Javscript for better performance
ஜாக்டோஜியோ போராட்ட களத்தில் காவலர்களின் கேலிக்கூத்து!- Dinamani

சுடச்சுட

  

  ஜாக்டோஜியோ போராட்ட களத்தில் சப் இன்ஸ்பெக்டரை ஆசிரியரென நினைத்து அறைந்த இன்ஸ்பெக்டர்!

  By RKV  |   Published on : 09th May 2018 12:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jactto_geo

   

  தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர் கழக அமைப்புகளில் ஒன்றான ஜாக்டோ ஜியோ கடந்த சில தினங்களாக தங்களது ஓய்வூதியக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று இரவு 10 மணி முதல் அந்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்.

  தமிழக அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை ஒடுக்க அரசு, காவல்துறை உதவியுடன் மிகுந்த முனைப்போடு போராட்டக் காரர்களை அவர்கள் திரளும் இடங்கள், தங்கியிருக்கக் கூடிய இடங்களென சென்னை வாலஜா சாலையில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் முதல் கல்யாண மண்டபங்கள், பள்ளிகள், என அனைத்து இடங்களிலும் தேடுதல் வேட்டை நிகழ்த்தி இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள தென் தமிழகத்தில் இருந்து திரண்டிருந்த பல ஆசிரியர் குழுக்களைக் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த காட்சியை நேற்று முதலே பல்வேறு ஊடகங்களும் ஒளிபரப்பி வந்தன. ஆனால், காவல்துறையின் கடினமான அடக்குமுறையையும் மீறித் தங்களது உரிமைக்காக ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சார்ந்த போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகத்தின் முன் திரண்டு உரிமைக் குரல் கொடுக்கத் தவறவில்லை என்பதும் நிதர்சனம்.

  இதனால் கோபமுற்றை காவல்துறையினரில் மஃப்டியில் இருந்த சிலர் அந்தப் பகுதியில் இருந்த பேருந்து நிலையங்களில் பேருந்துக்குள் இருந்த கூட்டத்தினரிடையே போராட்டக் காரர்கள் இருக்கிறார்களா என விசாரணையில் ஈடுபட்டதோடு அங்கே பேருந்துக்காகவும், ஆட்டோவுக்காகவும் காத்திருந்தவர்களைக் கூட அவர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளத்தான் வந்திருக்கிறார்களா எனத் தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்ததாகத் தகவல்.

  இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களைக் கும்பலாகக் கைது செய்ய மஃப்டியில் சென்றிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை ஆசிரியர் எனக்கருதி கன்னத்தில் அறைந்து  இன்ஸ்பெக்டர் ஒருவர் காவல் வாகனத்தில் ஏற்றிய காட்சி அப்பகுதியில் இருந்த மக்களிடையே மிகுந்த வேடிக்கைக்குள்ளானது. பாதிக்கப்பட்ட  சப் இன்ஸ்பெக்டர், தானும் ஒரு காவலர் எனக்கூறியும் அவரது அடையாள அட்டையைப் பரிசீலித்த பிறகே இன்ஸ்பெக்டர் அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை விடுவித்தார் என ஆங்கில அச்சு ஊடகமொன்றில் இன்று செய்தி வெளியாகி இருக்கிறது. 

  இத்தனைக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராடுவது ஊதிய உயர்வுக்காக அல்ல, அவர்களிடமிருந்து மாதா, மாதம் சம்பளத்தொகையில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அரசு பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதை மறுத்து பழைய சிபிஎஸ் கமிஷன் திட்டத்தையே நடைமுறைப்படுத்துமாறு அரசை வலியுறுத்தியே அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். நியாயமாகப் பார்த்தால் அரசு அவர்களை அழைத்து மரியாதையுடன் அமர வைத்து அவர்களது கோரிக்கைகளை நிதானமாகப் பரிசீலித்து அவர்களது வேண்டுகோள்களை முடிந்த வரையில் நிறைவேற்றப் பார்ப்பது தானே முறை.

  நாட்டின் எதிர்காலமான மாணவ சமுதாயத்தை பண்புடன் உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பை சுமந்து கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களையும், அரசு ஊழியர்களையும் தீவிரவாதிகளைப் போல மிரட்டிக் காட்டத்துடன் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்ற வேண்டிய அவசியமென்ன வந்தது? இதில் சக காவலரையே அரசு ஊழியரென்றும், ஆசிரியரென்றும் நினைத்து காவல்வாகனத்தில் ஏற்றும் செயல் ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ , ‘காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்’ எனும் பழமொழிகளையே நினைவூட்டுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai