மாறி மாறி அதிகம் எண்ணெய்யில் வறுத்த உணவுப்பொருட்கள், அதனால் ஏற்படும் கொழுப்பு கல்லீரல், மற்றும் மது பிரியர்களுக்கு ஏற்படும் சோர்ந்து போன கல்லீரல் இவற்றால் உண்ட உணவு செரிக்காமல், அசீரணம், பசியின்மை, வாந்தி, வாய்க்குமட்டல் போன்ற குறிகுணங்களால் பலரும் அவதிப்பட்டு தான் வருகின்றனர். துரித உணவு வகைகள் நோய்களையும் துரிதமாக ஏற்படுத்திவிட்டு பலரையும் மருத்துவத்தை நாட வைக்கின்றன.
‘டாக்டர் எனக்கு பித்தம் அதிகமாக இருக்கு, வாய்க்குமட்டலும் அடிக்கடி வாந்தியும் ஏற்படுகிறது. என்ன சாப்பிட்டாலும் பித்தம் குறையவே மாட்டேங்குது, சில சமயம் பித்தமாகவே வாந்தி வருது’ என்று பித்தத்தால், பித்து பிடித்தால் போல் புலம்பும் பலரும், மருந்து மாத்திரைகளை நம்பும் அளவுக்கு உணவு முறையில் அக்கறை காட்டுவதில்லை.
டீ, காபி இவை பித்தத்தை அதிகரிக்கும், அதை நிறுத்துங்கள் என்று சொன்னால், வேற என்ன வேணாலும் சொல்லுங்க டாக்டர், அதை குடிக்காமல் இருக்க முடியாது என்ற பதிலை பலரும் தருவார்கள். அதிகரித்த பித்தம் (பைல்) ரத்தத்தில் கலந்தால் ‘காமாலை’ நோய் ஏற்படும் என்று சித்த மருத்துவம் விளக்குகின்றது.
ஆகவே உடலின் அனைத்து வளர்ச்சிதை மாற்றத்தையும் அரங்கேற்றும் கல்லீரலுக்கு ஓய்வு தருவதென்பது அவசியம். கல்லீரல் செயல்பாடு அதிகரிப்பதால் பித்தம் அளவுக்கு அதிகமாக உற்பத்தி ஆகிறது.
சித்த மருத்துவத்தில் அதிகரித்த கல்லீரல் செயல்பாட்டை குறைத்து, பித்தத்தை குறைக்கும்படியான மூலிகை மருந்துகள் அதிகம் உள்ளன. அவற்றில் ஒன்று தான் நாம் தினசரி உணவில் பயன்படுத்தும் கீரை வகை ‘கொத்துமல்லி’.
கொத்துமல்லியும், அதன் விதையான தனியா-வும் நாம் அதிகம் பயன்படுத்தும் உணவுப்பொருள்கள். மிளகாய் தூள் அரைக்கும் போது பலரும் தனியாவை சரிபங்கு மேலாகவோ அல்லது சமமாகவோ சேர்த்து அரைப்பது நடைமுறை வழக்கம்.
மிளகாய் குடல் எரிச்சலை ஏற்படுத்தும் பொருள், பித்தத்தை கூட்டும் பொருள். அதை சமப்படுத்தவே தனியா எனும் பித்தத்தை சமனாக்கும் பொருள் சேர்க்கப்படுவது பலரும் அறியாத ஒன்று. தனியா என்ற சொல்லுக்கு பெயர்க்காரணம் தேடினால் ‘தணியாத பித்தத்தையும் தணிக்கும்’ என்ற பொருள்படும்படியாக உள்ளது ஆச்சர்யம்.
இதையே அகத்தியர் குணவாகடப் பாடலும் ‘கொத்துமல்லி கீரையுண்ணிற் கோர அரோசகம் போம், பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்’ என்று குறிப்பிடுகின்றது.
கொத்துமல்லி கீரையில் நோய் எதிப்புசக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ இவை இயற்கையாகவே உள்ளது. வேறு எந்த கீரையிலும் இல்லாத அளவுக்கு வைட்டமின்-ஏ வின் மூலப் பொருளாகிய கரோடீனாய்டுகள் இதில் அதிகம்.
கொத்துமல்லி கீரை
ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள பீனோலிக் வேதிப்பொருளாகிய குர்சிட்டின் போன்ற மூலப்பொருட்கள் அதிக அளவில் உள்ளது.மேலும் ஜின்க் சத்தும் வைட்டமின் பி-1 மற்றும் நார்ச்சத்துக்களும் கொத்துமல்லி இலையில் உள்ளன. இதன் விதையான தனியாவில் 85% நறுமண எண்ணெய் அதிகம் உள்ளது. இந்த எண்ணெய்க்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை அதிக அளவில் உள்ளது. இதில் பிளேவனாய்டுகள் உள்ளதால் புற்று நோய்களை வர விடாமல் தடுக்கும் தன்மையும் உடையது இது.
அசீரணம், வயிற்று உப்பிசம், வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்றவற்றால், பித்த நோய்களால் அவதிப்படும் பலரும், பித்தத்தை தணிக்க கொத்துமல்லியை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். இது பல்வேறு காரணங்களால் அதிகரித்த கல்லீரல் செயல்பாட்டை குறைத்து பித்தத்தை தன்னிலைக்கு கொண்டு வரும்.
வளர்ப்பித்த தீதலாது சத்தி அடாது என்று தேரையரின் நோய்களுக்கான முதல் காரணம் கூறுகின்றது. பித்தம் அதிகமாகாமல் வாந்தி (சத்தி) ஏற்படாது என்பது இதன் பொருள். ஆகையால் தனியா விதையுடன், சீரகம்,ஏலக்காய் சேர்த்து கஷாயமாக்கி கொடுத்தாலும் பித்தம் குறையும். கல்லீரல் குளிர்ச்சி அடையும். பாலுடன் இதை சேர்த்தும் காய்ச்சி குடிக்கலாம். இது சிறுநீரைப் பெருக்கும் தன்மையும் கொண்டுள்ளது.
ஆல்கஹால் பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி காமாலை நோயால் அவதிப்படும் பலரும் இந்த கொத்துமல்லி கீரையையோ அல்லது தனியா விதையோ உணவு வகைகளில் அடிக்கடி சேர்த்து வந்தால் கல்லீரல் சிதைவடையாமல் காக்கும்.
‘உணவே மருந்து’ என்ற சித்த மருத்துவ அடிப்படையை மறந்தால் நிச்சயம் நோய்களும், அதன் குறிகுணங்களும் அதிகமாகும். கொத்துமல்லி கீரையை தெரு வெளியில் கூவி கூவி விற்பதாலே என்னவோ! அதன் மருத்துவ மகிமை பலருக்கும் புரிவதில்லை.
இதையே பல்பொருள் அங்காடிகளில் பளிச்சிடும் தாழிகளில் அடைத்து விற்றால் அதன் மகிமை புரியுமோ என்னவோ? இனியாவது கொத்துமல்லி என்ற கூப்பாடு தெருக்களில் கேட்டல், கும்பிடு போட்டு வாங்கி பயனடையுங்கள். இது கல்லீரலை காக்கும் நம் நாட்டு வைத்தியம்.
மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com
சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘ஏலக்காய்’ஆறாத குடற்புண்ணை ஆற்றுமா?
சுகம் தரும் சித்த மருத்துவம்: கொலஸ்ட்ரால் கவலையை குறைக்குமா? - ‘கரிசலாங்கண்ணி கீரை’
சுகம் தரும் சித்த மருத்துவம் : புற்று நோயை தடுக்குமா 'எள் எண்ணெய்'..?
சுகம் தரும் சித்த மருத்துவம்: இருதய நோய் வராமல் காக்கும் ‘பூண்டு’
சுகம் தரும் சித்த மருத்துவம்: கொழுத்த உடலுக்கு உதவுமா ‘கொள்ளு’?
சுகம் தரும் சித்த மருத்துவம்: முடக்கும் மூட்டு வலியை சரி செய்யுமா 'நொச்சி'?
சுகம் தரும் சித்த மருத்துவம்: குளிர்கால ஒவ்வாமையை ஓட்டும் 'மஞ்சள்'
சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆஸ்துமாவை அடிபணியச் செய்யுமா ‘துளசி’?
சுகம் தரும் சித்த மருத்துவம்: சர்க்கரை நோய்க்கு குட்பை சொல்லுமா 'பாகற்காய்'?