தேர்தல் 2024: மோடிக்கு எதிராக நிறுத்தப்படுகிறாரா மம்தா?

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க.வின் நரேந்திர மோடிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸின் மம்தா  பானர்ஜி நிறுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.
தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த மம்தா பானர்ஜி
தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த மம்தா பானர்ஜி

2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸின் மம்தா  பானர்ஜி நிறுத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.

இரண்டாவது முறையாகவும் வென்று மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்து வரும் பாஜகவை வருகின்ற மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க தற்போது இருந்தே எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணியை அமைக்கும் தேவை எழுந்துள்ளது.

மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அனைத்து அரசியல் கட்சிகளின் பார்வையும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு பல அரசியல் சந்திப்புகளும் திருப்பங்களும் நடைபெற்று வருகின்றன.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பும், தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்முறையாக தில்லி சென்ற மம்தாவின் பயணமும் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தோ்தல் உத்திவகுப்பாளா் பிரசாந்த் கிஷோருடனான ஆலோசனைக்கு பிறகு, பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் தில்லியில் சரத் பவாரின் தலைமையில் ஜூன் 22ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, சமாஜ்வாதி கட்சியைச் சோ்ந்த கன்ஷியாம் திவாரி, ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவா் ஜெயந்த் சௌதரி, ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த சுஷீல் குப்தா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த வினய் விஸ்வம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த நிலோத்பல் பாசு, தேசிய மாநாட்டு கட்சியின் ஃபாருக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

ஆனால், கூட்டத்தை நடத்திய சரத் பவார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திரிணமூல் காங்கிரஸ் தலைவா் யஷ்வந்த் சின்ஹா என்னை அணுகி, எதிா்க்கட்சித் தலைவா்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தித் தருமாறு கேட்டுக் கொண்டாா். நானும் கூட்டத்தை நடத்த சம்மதித்தேன். இது யஷ்வந்த் சின்ஹாவின் ராஷ்டிர மஞ்ச் அமைப்பு சாா்பில் நடைபெறும் கூட்டமாகும். கூட்டத்தை தேசியவாத காங்கிரஸ் நடத்தவில்லை” என்றாா்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 21 ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் கட்சி அனுசரித்து வரும் தியாகிகள் தினத்தன்று தேசிய அரசியலில் நுழையும் முதல் படியை மம்தா எடுத்து வைத்திருக்கிறார்.

காணொலி மூலம் நடைபெற்ற தியாகிகள் தின விழாவில் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்புடன், அனைத்து மாநிலங்களின் பிராந்திய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார் மம்தா.

அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த அதேவேகத்தில் தில்லிக்கு மூன்று நாள்கள் பயணம் மேற்கொண்டு, முகாமிட்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடனான சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விவாதித்தோம். சோனியா காந்தியும் அதையே விரும்புகிறார். எதிர்காலத்தில் நல்ல முடிவு வரும் என நினைக்கிறேன். 

பாஜகவைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைவது அவசியம். தனியாக, நான் ஒன்றும் செய்ய முடியாது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் ஒரு தலைவர் அல்ல, அடிமட்டத்திலிருந்து வந்த ஒரு சாதாரண தொண்டர்” எனத் தெரிவித்தார்.

இந்த பயணத்தின்போது, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் தலைவர்கள் கமல்நாத், ஆனந்த் சர்மா, அபிஷேக் மனு சிங்கி, திமுக கனிமொழி உள்ளிட்டோரையும் மம்தா பானர்ஜி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும், அடுத்தகட்டமாக சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்  உள்ளிட்ட மாநில கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க  மம்தா திட்டமிட்டுள்ளார்.

மேற்குவங்கப் பேரவைத் தேர்தலின்போதே ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை உள்ளிட்ட கட்சிகள் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பெகாஸஸ் ஒட்டுக்கேட்பு, பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட நாட்டின் முக்கியப் பிரச்னைகளை விவாதிக்கவும் ஆளும் கட்சி முன்வரவில்லை.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் ஒன்றுகூடிய காங்கிரஸ், திரிணமூல், திமுக உள்ளிட்ட 14 பிரதான கட்சிகள் ஆளும் அரசுக்கு எதிராக கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தொடர்ந்து ஜூலை 28ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஆலோசனையும் நடத்தினர்.

இந்நிலையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையை ஏற்குமா? அல்லது மம்தா தலைமையை ஏற்குமா? அல்லது மூன்றாவது அணி உருவாகுமா? என்ற கேள்வி நாடு முழுவதும் அனைவரது மனதிலும் நிலவி வருகின்றது.

மேலும், இவற்றில் எது நடந்தாலும், கூட்டணியில் இருக்கும் பெரிய பிரச்னையாக கருதப்படுவது மத்தியில் ஒன்றிணையும் கட்சிகள் மாநிலங்களில் எதிரெதிரே அரசியல் செய்து வருவது. உதாரணமாக மேற்கு வங்கத்தில் திரிணமூலுக்கு எதிராக காங்கிரஸ் - இடதுசாரியும், கேரளத்தில் இடதுசாரிக்கு எதிராக காங்கிரஸ் அரசியல் செய்வது மக்களிடையே குழப்பமான மனநிலையை உருவாக்கியுள்ளது.

இதற்கெல்லாம் தீர்வு கண்டு, மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக 2022 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட பேரவைத் தேர்தல்களில் ஒன்றிணைந்த கூட்டணி வெற்றி பெறுவது அவசியமாக பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் புதிய முயற்சிகளை எதிர்கொள்ளும் வகையில், ஆளும் பாஜகவும் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ததுடன் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்துள்ளது. மேலும், மாநிலங்களிலும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

பலமான ஆளும் கட்சியை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவது இயல்பு என்றாலும், கூட்டணிகளுக்கிடையே வரும் பிரச்னைகளை சமாளித்து அடுத்து வரும் ஆண்டுகளில் ஒற்றுமையுடன் பயணம் செய்து இலக்கை எட்டுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com