புகைப்படக்காரர் தானிஷ் சித்திகி கொலை? அதிர்ச்சி தகவல்

இந்திய புகைப்பட பத்திரிகையாளர் தானிஷ் சித்திக்கி மோதலில்  பலியாகவில்லை என்றும் பத்திரிகையாளர் என தெரிந்தே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க செய்தி நிறுவனம் நேற்று (வியாழக்கிழமை) செய்தி வெளியிட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்தியப் புகைப்பட பத்திரிகையாளா் தானிஷ் சித்திக்கி உயிரிழந்ததாகக் கூறப்பட்டுவந்தது. ஆனால், அவர் மோதலில் பலியாகவில்லை என்றும் பத்திரிகையாளர் எனத் தெரிந்தே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்ட கட்டுரையில்,  "ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் ஆப்கன் ராணுவத்தினருக்கும்  தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல் குறித்த  செய்திகளை சேகரிப்பதற்காக ஆப்கன் தேசிய பாதுகாப்பு படையினருடன் ஸ்பின் போல்டக் பகுதிக்கு சித்திகி சென்றுள்ளார்.

சுங்கச் சாவடிக்கு அருகே சென்றபோது, தலிபான் படை தாக்குதல் நடத்தியது. அதில், ஆப்கன் படை பிரிந்து இரு வேறு திசையில் சென்றது. மீதமுள்ள பாதுகாப்பு படை வீரர்களுடன் சித்திகி பிரிந்து சென்றார்.

இதற்கு மத்தியில், சித்திக்கிக்கு குண்டடிபட்டது. அதிலிருந்து தப்பித்து அருகில் இருந்து மசூதிக்கு சென்ற அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. மசூதியில் பத்திரிகையாளர் இருப்பதாக தகவல்கள் கிடைத்த பின்பும் தலிபான்கள்  தாக்குதல் நடத்தினர். குறிப்பாக, சித்திக்கி இருப்பதாக அறிந்துகொண்ட பின்பு அங்கு தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்

சித்திக்கியை தலிபான்கள் பிடித்தபோது, அவர் உயிருடன்தான் இருந்தார். இறுதியாக, சித்திக்கி யார் என அறிந்துகொண்ட பின்னரே  அவர் கொல்லப்பட்டார். அவரைக் காப்பாற்றவந்த ஆப்கன் பாதுகாப்பு படை  வீரர்களும் கொல்லப்பட்டனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தியை சேகரித்த செய்தியாளர் மைக்கேல் ரூபின்  கூறுகையில், "பொதுவெளியில் வெளியான சித்திகியின் புகைப்படங்கள் தெளிவாக உள்ளன. அவற்றில் உள்ள அவரின் முகத்தைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம். சித்திகியைத் தலிபான்கள் தாக்கியதால் அவரின் தலையில் காயம் உள்ளது. உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது" என்றார்.

சித்திகியைக் கொன்று அவரின் உடலை சிதைத்திருப்பது சர்வதேச போர்  விதிகளுக்கு எதிரானது என்றும் அமெரிக்க செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  பத்திரிகையாளர் என தெரிந்தும் சித்திகி கொல்லப்பட்டிருப்பதாக வெளியான செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், மோதல் நடந்த இடத்தில் சித்திகி இருந்தது தங்களுக்குத் தெரியாது என தலிபான்கள் முன்னதாக விளக்கம் அளித்திருந்தனர்

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித், “மோதல் நடைபெற்ற பகுதியில் பத்திரிகையாளர் இருந்தது எங்களுக்குத் தெரியாது. இத்தகைய நிகழ்வுகளில் செய்தியாளர்கள் இருப்பதை எங்களுக்கு முறையாக தெரிவித்தால் மட்டுமே  அவர்களை பாதுகாக்க முடியும்” எனத் தெரிவித்திருந்தார்.

ரோஹிங்கியா அகதிகள் அனுபவிக்கும் சித்திரவதைகளைப் புகைப்படம் மூலம் கண் முன் நிறுத்தியதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு, சிறந்து விளங்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது தானிஷ் சித்திக்கிக்கு வழங்கப்பட்டது. கடினமான சூழலிலும் ஆப்கானிஸ்தான் போர், ஹாங்காங் மனித உரிமை போராட்டங்கள் உள்பட பல செய்திகளை அவர் நேரடியாக சென்று சேகரித்துள்ளார். 

சித்திக்கியை கெளரவிக்கும் வகையில் அவர் படித்த ஜமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தானிஷ் சித்திக்கி, தில்லியிலுள்ள ஜமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா். அவரின் தந்தையும் அந்தப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com