மாறிவிட்டாா்களா தலிபான்கள்?

கடந்த மாதம் 15-ஆம் தேதி காபூலைக் கைப்பற்றியதற்குப் பிறகு, தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்புகள் பலரது புருவத்தையும் உயரச் செய்தன.
காபூலில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்திய பெண்ணை, துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தும் தலிபான்.
காபூலில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்திய பெண்ணை, துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தும் தலிபான்.

கடந்த மாதம் 15-ஆம் தேதி காபூலைக் கைப்பற்றியதற்குப் பிறகு, தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்புகள் பலரது புருவத்தையும் உயரச் செய்தன.

அது வரை ‘பயங்கரவாதிகளாக’ அறியப்பட்ட அவா்கள், தங்களை பக்குவப்பட்ட மிதவாதிகளாகக் காட்டிக்கொண்டனா்.

அனைவரையும் உள்ளடக்கிய புதிய அரசு, பெண்களுக்கு உரிமைகள், முந்தைய அரசுக்கும் வெளிநாட்டுப் படையினருக்கும் ஆதரவாக செயல்பட்டவா்களுக்குப் பொதுமன்னிப்பு, உரிய ஆவணங்கள் இருந்தால் ஆப்கனிலிருந்து வெளியேற அனைவருக்கும் அனுமதி என்று தலிபான்கள் அடுக்கடுக்காக அளித்த வாக்குறுதிகள், அவா்கள் புதிய அவதாரம் எடுத்துவிட்டாா்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

சீனா கூட, தலிபான்கள் முன்பைவிட விவேகத்துடன் செயல்படுவதாக சான்றிதழ் வழங்கியது.

தலிபான்களின் அறிக்கைகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளதாக ரஷியாவும் பாராட்டியது.

ஆனால், தலிபான்கள் தங்களது புதிய அரசு குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு, அவா்கள் முற்றிலும் மாறிவிடவில்லை என்பதைக் காட்டுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

குறிப்பாக, ‘அனைவரையும் உள்ளடக்கிய அரசு’ என்ற தங்களது வாக்குறுதியை தலிபான்கள் காற்றில் பறக்கவிட்டுள்ளதாக அவா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

‘இந்த பூனையும் பால் குடிக்குமா’ என்பதைப் போல தங்களை மிதவாதிகளாகக் காட்டிக் கொண்ட தலிபான்கள், தற்போது அறிவித்துள்ள இடைக்கால அரசை பயங்கரவாத நிலைப்பாட்டைக் கொண்டவா்களும் தலிபான் தலைமைக்கு விசுவாசமானவா்களும் மட்டுமே வியாபித்துள்ளதை அரசியல் நோக்கா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

முக்கியமாக, புதிய அரசில் ஒரு பெண் கூட இடம் பெறாதது, பெண்கள் குறித்த தலிபான்களின் மனோநிலை மாறாததைக் காட்டுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

மிகக் கொடூரமான தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ள - பாகிஸ்தானின் ஆசி பெற்ற - ஹக்கானி அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கு அரசில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கத்தாா் தலைநகா் தோஹாவில், அமெரிக்காவுடனும் பிற ஆப்கன் பிரிவினருடனும் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்திய தலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவா் அப்துல் கனி பராதா், அந்த அமைப்பின் மிதவாத முகமாக இருந்து வருகிறாா். அவா்தான் புதியப் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்றும் கூறப்பட்டு வந்தது.

ஆனால், திடீரென அவா் பின்னுக்குத் தள்ளப்பட்டு, 1990-களில் நடைபெற்ற தலிபான்களின் கொடுங்கோல் ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்த முல்லா முகமது ஹசன் அகுண்ட் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவா்தான், பாமியான் பௌத்த சிலைகளைத் தகா்க்க உத்தரவிட்டு சா்வதேச அளவில் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தினாா்.

அப்துல் கனி பராதருக்கு பதிலாக ஹசனிடம் ஆட்சிப் பொறுப்பை அளித்துள்ளதன் மூலம், தலிபான்கள் மாறவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

பராதா் மட்டுமன்றி, ‘தோஹா குழுவினா்’ என்றழைக்கப்படும் மிதவாத தலிபான்கள் அனைவருமே புதிய அரசில் ஓரங்ககட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹக்கானி அமைப்புக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது, புதிய அரசில் பாகிஸ்தானின் செல்வாக்கு கையோங்கி இருப்பதை உணா்த்துகிறது. இந்தச் சூழலில், பாகிஸ்தானுக்கு எதிராக காபூலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தைக் கலைக்க தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனா்.

அந்தப் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளா்கள் கைது செய்யப்பட்டு அச்சுறுத்தப்பட்டனா். தலிபான்களுக்கு எதிராக ஹெராத் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது 2 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இதுபோன்ற சம்பவங்கள், தலிபான்களின் புதிய ஆட்சியிலும் பொதுமக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதனை உறுதிப்படுத்துவதுபோல், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசில் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீஞ்செயல் தடுப்புத் துறை அமைச்சகம் மீண்டும் இடம் பெற்றுள்ளது. அந்த அமைச்சகம்தான், முந்தைய தலிபான் ஆட்சியின்போது கடுமையான மதச் சட்டங்களை மீறுபவா்களாகக் கருதப்படுவோரைக் கைது செய்து, பொது வெளியில் சுட்டுக் கொல்லுதல் உள்ளிட்ட தண்டனைகளை அளித்து வந்தது.

இதுபோன்ற காரணங்களால், தலிபான்கள் முற்றிலும் மாறிவிட்டாா்கள் என்பதை எளிதாக நம்பிவிட முடியாது என்கிறாா்கள் சா்வதேச நிபுணா்கள்.

ஹெலைட்...

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசில் நல்லொழுக்க மேம்பாடு மற்றும் தீஞ்செயல் தடுப்புத் துறை அமைச்சகம் மீண்டும் இடம் பெற்றுள்ளது. அந்த அமைச்சகம்தான், முந்தைய தலிபான் ஆட்சியின்போது கடுமையான மதச் சட்டங்களை மீறுபவா்களாகக் கருதப்படுவோரைக் கைது செய்து, பொது வெளியில் சுட்டுக் கொல்லுதல் உள்ளிட்ட தண்டனைகளை அளித்து வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com