9 வினாடிகள்.. கண்ணிலிருந்து மறைந்துபோகும் நொய்டா இரட்டைக் கோபுரங்கள்: முழு விவரம்

நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட, குதுப்மினாரையும் விட உயரமான அந்த இரட்டைக் கோபுரங்கள், வரும் ஞாயிறன்று தரைமட்டமாகக் காத்திருக்கின்றன.
நொய்டா இரட்டைக் கோபுரங்கள்
நொய்டா இரட்டைக் கோபுரங்கள்
Published on
Updated on
2 min read

நொய்டா: நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட, குதுப்மினாரையும் விட உயரமான அந்த இரட்டைக் கோபுரங்கள், வரும் ஞாயிறன்று தரைமட்டமாகக் காத்திருக்கின்றன.

நொய்டாவில், சட்டத்துக்கு விரோதமாக கட்டப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் இடிந்து நொறுங்கத் தயாராகி வருகிறது. வெறும் எலும்புக்கூடாகக் காட்சியளிக்கும் அந்தக் கட்டடத்துக்குள் வெடிபொருள்களை நிரப்புவதற்கான பணிகள் நிறைவடைந்துவிட்டன.

கட்டடத்தை இடிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தை குடியிருப்பு மக்கள் நாடியது முதல் தொடர்ந்து 9 ஆண்டுகள் சட்டப்போராட்டம் கோபுரங்களை இடிப்பதற்கே உத்தரவு பெற்றுத் தந்தது. 9 ஆண்டுகள்.. சட்டப்போராட்டம். தற்போதோ 9 வினாடிகளில் அந்த கட்டடம் தரைமட்டமாகிவிடும் என்கிறார்கள் இப்பணியை மேற்கொண்டு வரும் அதிகாரிகள்.

கட்டடத்தை இடிக்க 3,700 கிலோ கிராம் வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 20 ஆயிரம் இணைப்புகள் இந்த கட்டடத் தூண்களுக்கு இடையே கொடுக்கப்பட்டுள்ளன. ரிக்டர் அளவில் 4 புள்ளிகளில் பதிவாகும் நிலநடுக்கத்தில் பத்தில் ஒரு மடங்கு தாக்கம் அப்பகுதிகளில் உணரப்படும்.

சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட அந்த இரட்டைக் கோபுரங்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகலி வெடிபொருள் வைத்து தகர்க்கப்படவிருக்கின்றன. 

இந்த இரட்டைக் கோபுரங்களைத் தகர்க்க சுமார் 3,700 கிலோ கிராம் எடையுள்ள வெடிபொருள்கள், கட்டடத்தின் அடித்தளம் முதல் தூண்கள் வரை போடப்படும் 9400 துளைகளில் நிரப்பப்படவிருக்கிறது. இதனை வெடிக்கச் செய்வதன் மூலம், இரட்டைக் கோபுரங்களும் 9 வினாடிகளில் தரைமட்டமாகும்.

சட்டத்துக்கு விரோதமாகக் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முதலில் ஆகஸ்ட் 21ஆம் தேதி இடிக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், இதனை ஆகஸ்ட் 28ஆம் தேதி இடித்துத் தள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கட்டடத்தை இடித்துத் தள்ளுவதில் ஏதேனும் தொழில்நுட்ப அல்லது வானிலை மாறுபாடு போன்றவை காரணமாக இருந்தால் இடித்துத் தள்ளும் பணியை செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரட்டைக் கோபுரப் பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நொய்டாவில் செய்யப்பட்டிருக்கும் கடுமையான காவல்துறை பாதுகாப்புக்கு இடையே, போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்தக் கட்டடத்துக்குள் வெடிபொருள்களை நிரப்பும் பணி கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்தது. இந்தக் கட்டடத்துக்குள் வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு கடுமையான பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இடிப்பதற்கு முன்பு 30 வினாடிகளில் முழுக் கட்டடமும் பரிசோதிக்கப்படும். இந்த கட்டடத்தைச் சுற்றியிருக்கும் சாலைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மூடப்படும். நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேவும் 2.15 மணிக்கு மூடப்படும். கட்டடம் தரைமட்டமாகி, தூசுகள் அடங்கிய பிறகே சாலைகள் திறக்கப்படும். ஆனால் இது வெறும் அரைமணி நேரம்தான் நீடிக்கும் என்று அதிகாரிகள் கணிக்கிறார்கள்.

அனைத்து போக்குவரத்து மாற்றங்களும் கூகுள் மேப்பில் பதிவு செய்யப்படும். அதிக அனுபவம் வாய்ந்த போக்குவரத்துக் காவலர்கள் சாலைப் பாதுகாப்புப் பணியை மேற்கொள்வார்கள். முன்னதாக, கட்டடத்தின் முன் பகுதியிலிருக்கும் 500 மீட்டர் சாலை, பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது.

அனைத்து இறுதிகட்டப் பணிகளும் நிறைவடைந்துவிட்டதாகவும், அனைத்து தளங்களுக்கும் இன்று இணைப்புகளைக் கொடுத்துவிட்டு, 100 மீட்டர் தொலைவிலிருந்து  ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் கட்டடத்தை தரைமட்டமாக்கும் பணி நடக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகில் இருக்கும் கட்டடங்கள் கூட, சிறப்புத் துணியால் மூடப்பட்டு, தூசுகள் படியாத வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. 32 தளங்களைக் கொண்ட அபெக்ஸ், 29 தளங்களைக் கொண்ட சயானி ஒரு நீரூற்று போல ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு கண்ணிலிருந்து மறையப் போகிறது. கிட்டத்தட்ட 7.5 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட சட்டவிரோதக் கட்டடத்தின் இருப்பு, இல்லாமல் போகப்போகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com