சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘கற்கடி’ வெயில் கால ரத்த அழுத்தத்தை குறைக்குமா? 

வெறும் நீர்சத்துக்கு மட்டும் வெள்ளரிக்காய் அல்ல. வெய்யில் காலத்தில் வெள்ளரியை பயன்படுத்த நிச்சயம் கோடையும் குளிர்ச்சியாகும்.
வெள்ளரி
வெள்ளரி

கோடைக்கால வெயில் 105 டிகிரி வெப்பத்தைக் கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. குடித்த நீர் முழுதும் தோல் மூலமாக வியர்வையாக வெளியேறிவிடுகிறது. லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தாலும் வெளியேறும் சிறுநீர் அளவு மில்லி லிட்டர் கணக்கில் தான். சிறுநீர் பாதை எரிச்சல், நீர்க்கடுப்பு, உடல் சோர்வு, அசதி போன்ற பல குறிகுணங்கள் அதிக வெப்ப தாக்குதலால் ஏற்படும். இளம் வயதினருக்கே இந்த நிலைமையை சமாளிப்பது கடினம் என்றால், வயதானவர்களின் நிலைமையும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய் உள்ளவர்களின் நிலையும் மிகக் கவலை தான்.

கோடைக்காலத்தில் சித்த மருத்துவம் கூறும் வாத, பித்த, கப குற்றங்களில் பித்த குற்றம் அதிகரிப்பதே கோடைக்கால நோய்களுக்கு முதன்மைக் காரணம். “பித்தம் அடங்கிடின் பேசாதே போய் விடு” என்கிறது சித்த மருத்துவம். அதாவது பித்த குற்றம் அடங்கி விட்டால், உடலின் சூடு முழுதும் நீங்கி குளிர்ச்சி அடைந்துவிட்டால் மரணம் நிச்சயம் என்கிறது சித்த மருத்துவம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பித்த குற்றத்தை சரியானப்படி பேணிக்காப்பது அவசியம். 

முக்கியமாக கோடைக்காலத்தில் பித்தத்தை சரிபடுத்துவது மிக அவசியம். இல்லையெனில் அளவு கடந்த பித்தத்தால் தலை சுற்றல், வாந்தி, மயக்கம், சிறுநீர் பாதை எரிச்சல், நீர்க்கடுப்பு, தொடர்ந்த நீர்ச்சுருக்கினால் கல்லடைப்பு போன்ற பல தொந்தரவுகள் ஏற்படக்கூடும். 

மேலும் கோடை வெப்பத்தில் அதிகமாகும் பித்தமானது, நம் உடலில் சப்த தாதுக்களில் இரண்டாவதான ரத்த தாதுவை பாதிக்குமானால் ‘ரத்த பித்தம்’ என்ற நோய் நிலையை உண்டாக்கும். இந்த நிலை, ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதால் ‘அதிக ரத்த அழுத்தம்’ ஏற்படும் என்று சித்த மருத்துவம் கூறுகின்றது.

ஆக, இந்த கோடைக்காலத்தில் சித்த மருத்துவம் கூறும் பித்தத்தையும் குறைத்து, அதனால் அதிகரிக்கும் ரத்த அழுத்தத்தையும் மற்றும் பிற குறிகுணங்களையும் குறைத்து, உடலின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் மூலிகை சார்ந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். 

அந்த வகையில் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க உதவும் எளிய சித்த மூலிகை தான் ‘கற்கடி’ அல்லது ‘வெள்ளரிக்காய்’. இதன் பெயர்காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், இதற்கு சிறுநீரை பெருக்கும் செய்கை உடையதால், சிறுநீர் பாதை கற்களை கரைக்கும் தன்மையுடையதால் ‘கற்கடி’ என்ற பெயரை பெற்றதாக தெரிகிறது.  

வெள்ளரிக்காய் உடல் அசதி, தாகம், சோர்வு, மலச்சிக்கல், உடல் வறட்சி, சிறுநீர் பாதை எரிச்சல், நீர்ச்சுருக்கு போன்ற பொதுவான வெயில் கால உபாதைகளை போக்கும் தன்மை உடையது. இதன் இலையை காய்ச்சி, அதில் சீரகம் சேர்த்து குடிக்க உடல் வெப்பத்தை தணிக்கும். இதன் விதைக்கு சிறுநீரை பெருக்கும் தன்மையும், சிறுநீர் பாதை கற்களை உடைக்கும் தன்மையும் உடையதால், காயுடன் சேர்த்து விதையை சாப்பிட நல்ல பலனை தரும். 

டானின்கள், கார்டியாக் கிளைகோசைடுகள், டெர்பீனாய்டுகள், கார்போஹைட்ரேட், ரெசின்கள், சபோனின்கள் மற்றும் பைட்டோஸ்டீரால்கள் போன்ற பல்வேறு தாவர வேதிப்பொருட்கள் வெள்ளரியில் உள்ளது.

வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்களுக்கு α-லினோலெனிக் அமிலம், காஃபிக் அமிலம், சிட்ருலின், அமிரின், சிட்டோஸ்டெரால், குக்குர்பிடின், போன்ற பல்வேறு வேதிப்பொருட்கள் காரணமாக உள்ளது.

வெள்ளரிக்காய் சாலட்

மேலும் வெள்ளரிக்காயில் நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து போன்ற தாதுஉப்புக்களும், ஏ, சி, கே போன்ற அத்தியாவசிய விட்டமின்களும் உள்ளது. 95 சதவிகிதம் நீர்சத்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அஸ்கார்பிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் ஆகியவை வெள்ளரியில் உள்ள இரண்டு முக்கிய வேதிக்கலவைகள். அவை நீர்தேக்கத்தை ஏற்படுத்தும் தன்மையுடையன. இதனால் தான் வெள்ளரியை வறண்ட கண்கள், தீக்காயங்கள் மற்றும் தோல் அழற்சிக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படுகின்றன.

சாதாரணமாக கோடைக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வெள்ளரிக்காய், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து செயல்படும் கிருமிக்கொல்லியாகவும், குடலில் உள்ள வாயுவை அகற்றும் தன்மையும், பித்தத்தை குறைப்பதால் இயற்கை ஆன்டசிட் ஆகவும், பெருங்குடல் புண்ணிற்கு எதிரான செயல்பாடும், கோடைக்காலத்தில் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும், ரத்ததில் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மையும், காயங்களை ஆற்றும் தன்மையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பினை குறைக்கும் தன்மையும், வெயில் கால தோல் சுருக்கத்தை போக்கும் தன்மையும், பிளவனாய்டு உள்ளதால் புற்றுநோயை தடுக்கும் தன்மை உடையதாகவும் உள்ளது.

‘உள்ளிருக்கும் அவ்விதையை கண்டாலும் நீர் இறங்கும்’ என்கிறது அகத்தியர் குணவாகடம் எனும் நூல். இதன் மூலமும் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை உடையது.

வெள்ளரிக்காய் பித்தத்தை குறைக்கும் தான். ஆனால் கபத்தையும், வாதத்தையும் அதிகரிக்கும். ஆதலால் ஆஸ்துமா போன்ற கப நோய் உடையவர்களும், மூட்டு வலி போன்ற வாத நோய் உடையவர்களும் அதிகம் சேர்ப்பது நல்லதல்ல. ஏனெனில் அவர்களின் குறிகுணத்தை அதிகரிக்கும் தன்மை உடையது. வெள்ளரி பிஞ்சிக்கே, உடல் நலத்தை தரும் அனைத்து மருத்துவ குணங்களும் உண்டு.

சாலட்களில் வெள்ளரிக்காயை ஏக்கமுடன் பார்த்து ருசிக்க துடிக்கும் நாம், தெருக்களில் காணும் வெள்ளரியை ஒதுக்குவது கூடாது. ஆக, வெறும் நீர்சத்துக்கு மட்டும் வெள்ளரிக்காய் அல்ல. வெய்யில் காலத்தில் வெள்ளரியை பயன்படுத்த நிச்சயம் கோடையும் குளிர்ச்சியாகும்.

பருவகால பழங்களும், காய்கறிகளும் இயற்கை அன்னை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம். அவற்றை பயன்படுத்தி வாழ்ந்தால், வாத, பித்த, கபக் குற்றங்களை காலத்திற்கேற்ப சமப்படுத்தி நோய்களை தடுத்து நலமாக வாழ முடியும். 


மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com