Enable Javscript for better performance
விசாரணையில் நடந்தவை என்ன? பேரறிவாளன் அதிர்ச்சித் தகவல்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    விசாரணையில் நடந்தவை என்ன? பேரறிவாளன் அதிர்ச்சித் தகவல்கள்

    By ததாகத்  |   Published On : 20th May 2022 05:48 PM  |   Last Updated : 20th May 2022 05:53 PM  |  அ+அ அ-  |  

    perarivalan

    பேரறிவாளன்

     

    ராஜீவ் கொலையையொட்டிக் கைது செய்யப்பட்டதும் நடந்தவை என்ன? தமக்கு எத்தகைய அநீதிகள் இழைக்கப்பட்டன? தான் எந்த வகையில் நிரபராதி என விரிவாகத் தெரிவித்துள்ளார், தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன்.

    2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில்,  மரணதண்டனை வேண்டாம், கேட்பது  உயிர்ப் பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதியைத்தான்  என்று குறிப்பிட்டு வேலூர் சிறையிலிருந்தபோது, பேரறிவாளன் எழுதிய 'தூக்குக்  கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடலில்' இதுபற்றிக் குறிப்பிட்டுள்ள தகவல்கள் இங்கே:

    "ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுத் தற்போது உச்ச நீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலைத் தங்களுக்கு அனுப்புகிறேன்.

    இதையும் படிக்க.. பேரறிவாளன் விடுதலை: என்ன சொல்கிறார் முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன்?

    எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் மனிதநேய அமைப்பினர், சட்டமறிந்த வழக்கறிஞர்கள் என்ற முறையில் உங்களோடு எனது காவல் துறை துன்பங்கள், வாக்குமூலத்தில் என் கையொப்பம் பெறப்பட்ட முறையை, எனது மனநிலையை, சிறைக் கொடுமைகளை, வாழ்கின்ற தன்மையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

    அக்கறையோடும், உள்ளன்போடும் படித்தறிந்து எனது தரப்பு நியாயத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு இம்முறையீட்டின் மூலம் உங்களது மனதை நான் வென்றுவிட வேண்டும் என்றே ஆசை கொள்கிறேன். அதுவே எனது நீதிக்கான போராட்டத்தில் வெற்றியின் படிக்கல்லாக கருதுகிறேன்.

    கைது செய்யப்பட்டதன் பின்னணி

    1991ஆம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.50. ஈவெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர் என்னை விசாரணைக்கென சிபிஐ அதிகாரிகள், ஆய்வாளர்கள் கங்காதரன், இராமசாமி மற்றும் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அப்போது பெரியார் திடல் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.

    இதையும் படிக்க.. பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை...!

    ஏற்கெனவே 10-6-1991 மற்றும் 11-6-1991இல் எமது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் (வேலூர் மாவட்டத்தில்) தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், திராவிடர் கழகத்தவர் வீடுகளில் விசாரணை மேற்கொண்டபோது எமது இல்லத்திற்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்போது என்னைப் பற்றியும் கேள்வி எழுப்ப, எனது பெற்றோர் நான் சென்னை பெரியார் திடல், விடுதலை அலுவலகம் கணினிப் பிரிவில் பணியாற்றும் விவரத்தையும், அங்கு தங்கியுள்ள விவரத்தையும் கூறி அழைத்து வந்தனர்.

    சட்டவிரோதக் காவல்

    என்னை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, நாளை காலை, அதாவது 12-6-1991 அன்று அனுப்பிவைப்பதாக வாக்குறுதி, கூறியே அழைத்துச் சென்றனர். நேரே மாடியில் உள்ள ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு துணை தலைமை ஆய்வாளர் ராஜு, காவல்துறை கண்காணிப்பாளர்கள் தியாகராசன், சலீம் அலி மற்றும் பலர் இருந்தனர். என்னைப் பற்றியும் எனது கல்வி, குடும்பப் பின்னணி பற்றியும் விசாரித்தனர்.

    எனது கல்வித் தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் என்று கூறியவுடன், துணைத் தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டுவிட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன். அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே, இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே, என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் என்னைச்  சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வேன் என்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

    இதையும் படிக்க.. கை கொடுத்த பேரறிவாளன்; தோள் கொடுத்த மு.க. ஸ்டாலின்

    கீழ்த் தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன் மற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங் கையினால் அடித்தனர். ஒருவர் ஷூ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென ஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு த் துன்புறுத்தினர்.

    அடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என அழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ், மாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டேன். இவர்கள்தான் அப்போது மல்லிகையில் துன்புறுத்தலில் பெயர் பெற்றிருந்தனர். அங்கு சென்றவுடன் எனக்குக் குடிக்க நீர் மறுக்கப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது, சிறுநீர் கழிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

    ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர் (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்றுகொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூற வேண்டும். அவை கூறுவதற்கும் கூசக் கூடியவை என்பதால் அவற்றைக் குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

    காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகைச் சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிட முடியாததாக இருந்தது.

    இதையும் படிக்க.. 'அவ்விய நெஞ்சத்தான்..'  திருக்குறளுடன் பேசத் தொடங்கிய பேரறிவாளன்

    ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷூ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.

    சிபிஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒருநாள் ஓர் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், ஏன்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான் என்றார். உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பிவிட்டனர்.

    இதை ஏன்? கூறுகிறேன் என்றால், நான் யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார்? என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத் துன்புறுத்திக் குற்றவாளிகளாக்கிப் பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.

    மல்லிகையின் கீழ்த் தளத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் அலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 அல்லது 3 மணிக்குதான் அழைப்பார். எதையாவது கேட்பார். நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் அடிப்பார். இதுபோல உடல் ரீதியான, மன ரீதியான இன்னல்களைக் கொடுத்தனர்.

    ஒரு மனிதனை எந்தளவிற்குக் கேவலமான முறையில் நடத்த முடியுமோ, பேச முடியுமோ அவ்வாறு நடத்தினர், பேசினர். விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச் சென்று, நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19 ஆம் தேதி வரை என்னைக் குளிக்கவும் பல் தேய்க்கவும்கூட அனுமதிக்கவில்லை. 19 ஆம் தேதி ஆய்வாளர் ரமேஷ் என்னருகில் வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க முடியாமலே குளிக்க அனுமதித்தார். மேலும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததாலும் அனுமதி வழங்கப்பட்டது.

    குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தர மாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாள்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.

    இவ்வழக்கில் எவ்வாறு பல நிரபராதிகள் குற்றம் சாட்டப்பட்டனர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கூற முடியும். எனது சட்டவிரோத காவலின்போது ஒருநாள் துணை தலைமை ஆய்வாளர் சிரிகுமார் என்பவர் என்னிடம் வந்து, டேய், உன் ஊருக்கு பக்கத்தில் உள்ள கோலார் தங்கவயல்தான் எனது ஊரும். நான் கூறும் மூன்று பொருட்களில் ஒன்றை இருக்கும் இடம் கூறு. உன்னை விடுதலை செய்துவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் எதை சார் கேட்கிறீர்கள் என்றேன். அவர் கூறினார், ஒன்று ஏ.கே. 47 துப்பாக்கி அல்லது ஒயர்லெஸ் கருவி அல்லது தங்கக் கட்டிகள் புதைத்து வைத்துள்ள இடம், இவற்றில் ஒன்றைக் கொடுத்துவிட்டால் விட்டுவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் இருந்தால்தானே கொடுப்பேன். இல்லாமல் எவ்வாறு கொடுப்பது என்று கேட்டேன். அப்படியானால் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

    இந்தத் துணைத் தலைமை ஆய்வாளர்தான் கோடியக்கரை சண்முகம் கொலையான சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டவர் என்பதையும், லண்டனில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களைத் திருட விட்டுவிட்டேன் என்று கூறியவர் என்பதையும் இங்கு தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    இரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும்கூட கைகளில் விலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையைத் தளர்த்தி விடுவர். படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும். இவ்வாறான கொடுமைகள் புரிந்தனர். மேலும் பல அதிகாரிகள் பல மாறுபட்ட பாணியில் துன்புறுத்தினர். அனைவரின் துன்புறுத்தலும் கடுமையானதாக, இரக்கமற்றதாக இருந்தது.

    இதையும் படிக்க.. பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    இந்த நேரத்தில் என்னை சட்டவிரோதக் காவலில் வைத்திருந்ததற்கான சில அத்தாட்சிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, புலனாய்வு அதிகாரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் தனது சாட்சியம் பக்கம் 942-ல், 11.6.1991 அன்று எனது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் உள்ள எனது வீட்டில் சோதனை செய்து, எட்டு பொருட்களைக் கைப்பற்றியதை ஒப்புக் கொள்கிறார். 11.6.1991 அன்று என்னைப் பற்றி விசாரணை செய்ய அதிகாரிகளை அனுப்பியதாகவும் பக்கம் - 451ல் கூறுகிறார். 13.6.1991 அன்று எனது தாயார், மல்லிகைக்கு எனது மாற்றுடை கொண்டுவந்தபோது, அவரைச் சந்திக்க அனுமதி தராமல் துணியை மட்டும் பெற்றுக் கொடுத்தனர் என்பதையும் அவர் மறுக்கவில்லை.

    இவற்றுக்கெல்லாம் மேலாக எனது ஒப்புதல் வாக்குமூலம் என்பதில் 11.6.1991 அன்றைய சம்பவத்திற்குப் பின் 19.6.1991 வரை எந்த விவரமும் காணப்படவில்லை. மேலும், வாக்குமூலப்படி என்னை 18.6.1991 அன்று கைது செய்ததாக உள்ளது. ஆனால் காவலறிக்கையில் 19.6.1991 அன்று காலை 9.00 மணிக்கு பெரியார் திடல் அருகில் கைது செய்ததாக உள்ளது.

    இவையே என்னை எவ்வாறு எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து துன்புறுத்தி, பொய் வழக்குத் தொடுத்தனர் என்பதற்கு சான்றாக உள்ளது.

    முதல் நீதிமன்ற ஆஜர்படுத்தல்

    இவ்வாறு மறுநாள் காலை விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம் என்று பொய் கூறி அழைத்துவந்து எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு கடுமையான சித்ரவதைகளுக்குப் பின்னர் 19.6.1991 அன்று செங்கல்பட்டு நோக்கி என்னையும், எமது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை அனுபவிக்கும் இராபர்ட் பயஸு என்பவரையும் அழைத்துச் சென்றனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் இக்பால், ரமேஷ் மற்றும் சிலர் உடன் வந்தனர். அப்போது நான், இன்றுடன் என்னை விடுதலை செய்துவிடப் போகிறார்கள். தொல்லைகள், சித்ரவதைகள் முடிந்தன என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம், அப்போது எனக்கு எந்த சட்டமும் தெரியாது. அதற்கு முன்னர் எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் தெரியாது.

    இந்த நிலையில் செங்கை நீதிமன்றத்தினுள் எமது வேன் நுழைந்தது. அப்போது மேற்சொன்ன அதிகாரிகள் நீதிமன்றத்தில் எங்களை வாய் திறக்கக் கூடாது என்றும் அவ்வாறு அமைதியாக இருந்தால் விட்டுவிடுவதாகவும், இல்லையென்றால் மீண்டும் மல்லிகை அழைத்துச் சென்று துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர். எனவே நாங்கள் மிரண்ட நிலையில் இருந்தோம். பின்னர் உள்ளே அழைத்துச் சென்றனர். நீதிபதி எமது பெயர்களை கூறி அழைத்தார். பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமனிடம் ஏதோ கூறினார். எம்மை அங்கு இருந்த வேறு அறைக்குள் அனுப்பி விட்டனர். பின்னர் நீதிமன்றக் கூண்டிலேறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஏதோ வாதம் புரிந்தார். பின்னர் மீண்டும் நீதிபதி முன்பு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது அவர் எனக்கு 18.7.1991 வரை காவல் நீட்டிப்பு கொடுப்பதாகக் கூறினார். எனக்குக் காரணம் புரியவில்லை. மீண்டும் மல்லிகை சித்ரவதைக் கூடத்திற்கே அழைத்து வரப்பட்டோம்.

    அந்த ஒரு மாத காலத்தில் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு சித்ரவதைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. காயம் ஏற்படாவண்ணம் உள்ளங்கால்களில் கம்பால் அடிப்பர், பின்னர் குதிக்கச் சொல்வர். இவ்வாறு சித்ரவதைகள் தொடர்ந்தன.

    இரண்டாவது நீதிமன்ற ஆஜர்படுத்தல்

    இரண்டாம் முறையாக உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருந்த தடா நீதிமன்றத்தில் நீதிபதி திரு. சித்திக் முன்பு நான், ராபர்ட் பயஸ், கோடியக்கரை சண்முகம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டோம். அப்போது எனது உறவினர்கள் 200 பேர் அல்லது 300 பேர் வெளியே கூடியிருந்தனர். என் பெயர் கூறி அழைத்தனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன் மற்றும் சில ஆய்வாளர்கள் வந்திருந்தனர். மேல் மாடியில் நீதிபதி அமர்ந்திருந்த அறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டோம். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இருவரும் எம்மிடம் நீதிபதி முன்பு அமைதியாக நின்றுவிட்டு அவர் கூறுவதைக் கேட்டு தலையசைத்துவிட்டு வரவேண்டும் என்றும் தவறினால் மீண்டும் தங்கள் வசம் ஒப்படைக்கும்போது துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர்.

    நாங்களும் ஒவ்வொருவராக ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி 16.8.1991 வரை காவல் நீட்டிட்பு செய்திருப்பதாகக் கூறியதைக் கேட்டு அமைதியாக வெளியேறினோம். ஒரு அரை வினாடி கூட எமக்கு அங்க நிற்க அவகாசமிருக்கவில்லை. நீதிபதி எம்மை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனவே பயத்தின் காரணமாகவும், நீதிபதி எவ்வித விசாரிப்புகளும் செய்யாததாலும் எம்மால் எந்த முறையீடும் செய்ய முடியவில்லை.

    பின்னர் மல்லிகை அலுவலகம் அழைத்து வந்த பின்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் என்னிடம் நீதிமன்ற வளாகத்தின் வெளியே கூடியிருந்த கூட்டம் யார்? 200, 300 பேர் இருந்தனரே, அவர்கள் யார்? நீ வரச் சொன்னாயா? என்றார். எனக்குத் தெரியாது என்றும் எனது உறவினர்களாக இருக்கலாம், என்னால் சரியாகப் பார்க்க அவகாசமில்லாததால் கூற முடியாது என்றும் சொன்னேன். மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக என்னை உங்கள் காவலில் வைத்திருக்கும்போது நான் எவ்வாறு வரச் சொல்ல முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆத்திரமுற்று எனது கன்னத்தில் அறைந்தார். பக்கத்தில் இருந்த ஆய்வாளர்களிடம் என்னை அடிக்குமாறு கூறினார். எனது உறவினர்கள் எனக்கு ஆதரவாக வந்ததுகூட பொறுக்காமல் துன்புறுத்தினார்.

    மூன்றாவது நீதிமன்ற ஆஜர்படுத்தல் மற்றும் வாக்குமூலத்தில் கையொப்பம் பெற்ற முறை

    மூன்றாம் முறையாக நாங்கள் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்ட பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையிலேயே நீதிமன்ற அமர்வு நடந்தது. அந்தக் கிளைச் சிறை வளாகம் சிபிஐ துறையினரால் தத்தெடுக்கப்பட்டு எங்களை அடைத்து வைத்துத் துன்புறுத்தப் பயன்படுத்தப்பட்டது. என்னை மல்லிகையிலிருந்து 3.8.1991 அன்று கொண்டு சென்று பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் அடைத்தனர். அன்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன்தான் பொறுப்பிலிருந்தார். தினமும் அதிகாரிகள் முறைவைத்து துன்புறுத்துவர்.

    இதையும் படிக்க.. பேரறிவாளன் விடுதலையை கொண்டாடிய தமிழ்த் திரை இயக்குநர்கள்

    அங்கிருந்த அலுவலகத்தில் (அப்போது அது சித்ரவதைக் கூடம்) வைத்துதான் சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன் என்னைத் துன்புறுத்தி எழுதிய பல பக்கங்களில், பல நாட்களைக் குறிப்பிட்டுக் கட்டாய கையெழுத்துகள் பெற்றார். அப்போது உடன் சில ஆய்வாளர்களும் துன்புறுத்தினர். அதில் என்ன இருக்கிறது எனப் படித்தறிய அனுமதிக்கவில்லை. கையெழுத்திட்டால் என்னை விட்டுவிடுவதாகவும் கூறினர். எனக்கும் தடா சட்டம் தெரியாது. எனக்கு மட்டுமன்று தமிழகத்திற்கே அன்று தடா சட்டம் புதிதானது. இந்த நிலையில் துன்புறுத்தல் தாங்காமல் எனது உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் கூறியபடி கையொப்பமிட்டேன். ஆனால் பரிதாபம் என்னவெனில் அவருக்கும் தடா பற்றி ஏதும் தெரியாது. சாதாரண சட்டமுறைகளை அறிந்தவர் என்ற ரீதியிலேயே அவர் கூற்று இருந்தது.

    எனவே, தடா சட்டம் தெரியாது; ஒப்புதல் வாக்குமூலம் தெரியாது; அதன் சட்ட ரீதியான தாக்கம் தெரியாது, என்றாலும் கையெழுத்திட்டு விட்டேன். கையெழுத்திடக் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

    எந்த அறையில் என்னைத் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்றனரோ அதே அறையில் 16.8.1991 அன்று நீதிபதி அமர்வு நடத்தினார். முழுக்க முழுக்க சிபிஐ-யினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி அது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்துமுன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு என்னை எச்சரித்தனர்: நீ ஏதும் துன்புறுத்தியது பற்றிக் கூறினால், மீண்டும் உன்னைக் கொடுமைப்படுத்துவோம், சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பி ஓடியதால் சுட்டோம் என்றுகூட கணக்குக் காட்டிவிடுவோம் என்று மிரட்டினர். இவ்வாறான மிரட்டல்களுக்கு அஞ்சியும், கிளைச்சிறை இருந்த சூழலும், அச்சமும், சட்ட அறியாமையும் எனது வாயை அடைத்து விட்டன.

    வாக்குமூலம் பற்றிய எனது முறையீடுகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்புரையும்

    அன்றே நானும், ராபர்ட் பயஸும் செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு தண்டனைச் சிறைவாசிகள் அணியும் வெள்ளுடை தரப்பட்டது. வேறு எந்த உடையும், பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. ஓலைப் பாயும், தலையணையும், போர்வையும் மட்டுமே தரப்பட்டன. இவை அனைத்தும் ஒரு மரண தண்டனை சிறையாளிக்கான நடத்தை விதிகள் என்பதைப் பின்னரே அறிந்தோம். அப்போது எமக்கு சிறை விதிகள் தெரியாது.

    சிபிஐ அதிகாரியான காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் ஒவ்வொரு விசாரணை சிறைவாசியைக் கொண்டு வரும்போதும் எமது அடைப்பிற்கு வந்து வழக்கு பற்றி விசாரணை மேற்கொள்வார். அப்போது எமக்கு அவ்வாறு விசாரிக்க போலீஸ் அதிகாரிக்கு அதிகாரமில்லை என்பது தெரியாது. எனவே சிபிஐ-யின் காவலில் இருப்பது போன்ற உணர்வு இருந்தது. சிறை என்ற உணர்வே இல்லை.

    இந்தக் கொடுமைகள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கே நீண்ட நாட்கள் பிடித்தன. அவ்வாறு மீண்டு, தடா சட்டம் பற்றி, வாக்குமூலங்கள் பற்றி அறிய நேர்ந்தபோது நான் கையெழுத்திட்ட முறையை, எனக்கு நேர்ந்த துன்புறுத்தல்களை விளக்கி 11.2.1992 தேதியிட்டு மனு கொடுத்து, அது கு.ப. மனு எண்.137/92 என தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு எமக்கு ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பனவற்றின் பிரதிகள் தரப்பட்டவுடனே மனு ஒன்றைச் சமர்ப்பித்தேன். அதிலும் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்ற விவரத்தையும், எனவே அவற்றை ஏற்கக் கூடாது எனக் கோரியும் கொடுத்தேன். இது 26.8.1992 ஆம் தேதியில் என்னால் தரப்பட்டு கு.ப. மனு எண்.582/92 என தடா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுள்ளது.

    இந்த இடத்தில் ஒரு வருத்தத்திற்குரிய விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். உச்சநீதிமன்ற நீதியரசர் வாத்வா அவர்கள் பக்கம் 87-ல்,

    “ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது எவ்வகையிலும் மூன்றாம் தர முறையைப் பயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின் உளவியலைப் பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் முன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை.”

    என்று தெள்ளத் தெளிவாகவே நாம் புகார் கூறவில்லை என்று கூறுகிறார். உண்மையில் 11.2.1992 மற்றும் 26.8.1992 ஆகிய தேதிகளில் மனுக்களாகவும், சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசனிடம் குறுக்கு விசாரணை செய்யும்போதும், 313 குற்றவியல் நடைமுறைச் சட்டம். கேள்விகளின்போதும் எவ்வாறு துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்துப் பெற்றனர் என்பதைக் கூறியுள்ள நிலையில் நீதியரசர் இவற்றைக் கவனத்தில் கொள்ளாமை எமக்கு மிகுந்த வேதனை தருகிறது.

    சிறைத் துன்பங்கள்

    1.9.1991 அன்று எனது மூத்த சகோதரியின் திருமணம் நடந்தது. அதில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன். ஒரே சகோதரனான எனது தேவை மிகுதியாக இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டது. வேதனைகளைச் சுமந்துதான் அவரது திருமணம் நடந்தது.

    எம்மைப் பொறுத்தளவில், சிறையில் நாம் சாதாரண சிறைவாசிகளாக பார்க்கப்படவில்லை. எமது சிறை நடவடிக்கைகள் எதுவும் கணக்கிலெடுக்காமல், வழக்கில் இறந்துபோன நபர்களின் சமூக அந்தஸ்து மட்டுமே கணக்கிலெடுக்கப்பட்டது. எமக்காகப் புதிய விதிகள் இயற்றப்பட்டன.

    உதாரணமாக, இன்றளவும் நாம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது, ஒரு மரணதண்டனை சிறைவாசியைக்கூட தனிமைப்படுத்திவிடக் கூடாது என்று உச்சநீதிமன்ற ஆணைகள் இருந்தும்கூட, ஏற்கெனவே தனிமைச் சிறையில் இருந்த ஒரே காரணத்தினால் மரணதண்டனை இரத்து செய்யப்பட்ட முன் உதாரணங்கள் உள்ள நிலையிலும் நாம் மட்டும் கடந்த எட்டரை ஆண்டுகளாக தனி அடைப்பில், தனிமைச் சிறையில் வதைக்கப்படுகிறோம். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு (எண் 13359/91) தாக்கல் செய்தோம். சில பரிகாரங்கள் கிடைத்தும் அவை நடைமுறையில் கிடைக்காவண்ணம் தடுக்கப்பட்டன.

    1992ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இரத்த உறவினர்கள் மட்டுமே (அதாவது பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, பிள்ளைகள் மட்டுமே) பார்க்க அனுமதி உண்டு என்று ஆணையிட்டது அரசு. எனது தாத்தா, பாட்டிகள்கூட பார்க்க அனுமதி மறுத்தனர். எனது பாட்டி என்னைச் சந்திக்க அரசிடம் அனுமதி கேட்டு எத்தனையோ மனுக்கள் கொடுத்து போராடினார். பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தால் அந்த அரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பு வந்த பின்னரே பார்க்க முடிந்தது.

    என்னைப் பார்க்க எனது பெற்றோர், நெருங்கிய உறவினர்களே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் மிகுந்த தொல்லைகள் தரப்பட்டன. இந்த தொல்லைகளுக்கு அஞ்சியே பலரும் வருவதைத் தவிர்த்தனர். அவ்வாறு எனது பெற்றோர் என்னைப் பார்க்க வந்தாலும் கண்ணாடி கூண்டினுள்தான் பார்க்க வேண்டிய பரிதாப நிலை. காரணம் பார்வையாளர் அறை கண்ணாடி இழைத் தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகப் பேச முடியாத நிலை. சைகையால் மட்டுமே பேச முடிந்தது. தனது மகனின் விரல்களைக் கூட தாயினால் அன்போடு தொட முடியாத கொடுமை.

    இந்தக் கண்ணாடிக் கொடுமை எமது உறவினர்க்கு மட்டுமல்ல, எம்மைப் பார்க்க வரும் எமது வழக்குத் தொடர்பான வழக்கறிஞர்களுக்கும் இருந்தது. இதனால் எமது வழக்கை நாங்கள் விளக்க முடியாமல் தவித்தோம். இதுகுறித்து சிறப்பு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தோம். எந்த ஒரு சிறைவாசிக்கும் இந்த சட்டரீதியான அடிப்படை உரிமை, தனது வழக்கறிஞருடன் சுதந்திரமாகப் பேசும் உரிமை மறுக்கப்பட்டிருக்காது என்று என்னால் கூற முடியும். உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் எமது வழக்கறிஞருடனான ஒருவருக்கொருவர் படித்துக் காட்டும் வசதி கடைசி வரை மறுக்கப்பட்டே வந்தது.

    1993ஆம் ஆண்டு எம்மை பூவிருந்தவல்லி சிறையில் அடைத்த பின்னர், எக்காரணமிட்டும் சிறைவளாகத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என அரசு ஆணையிட்டது. இதனால் பல துன்பங்களை எதிர்கொண்டோம். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்கூட நீண்ட சட்ட போராட்டங்கள் நிகழ்த்த வேண்டியிருந்தது.

    சிறை மதிலை ஒட்டியே நீதிமன்றம் என்பதால் நாம் மற்ற சிறைவாசிகளைப் போல வீதிகளை கூட பார்க்க முடியாமல் முடக்கப்பட்டோம். சிறை மாற்றங்கள், மருத்துவ பரிசோதனை என்பனவற்றுக்காக 7 முறை மட்டுமே 8 ஆண்டுகளில் நாம் வீதிகளை, மக்களைப் பார்த்துள்ளேன்.

    பூவிருந்தவல்லி சிறைவளாகம் முழுக்க மேலே இரும்பு கம்பிகளால் போர்த்தப்பட்டும், கீழே காங்கிரீட் தளம் போடப்பட்டும் இருந்தது. வெயில் காலங்களில் சொல்லொணா வேதனைகளுக்கு உள்ளானேன். தூக்கத்தை இழந்தேன். மனஅழுத்தத்திற்கு உள்ளானேன். இந்த அழுத்தமே 24வது வயதிலேயே எனக்கு உயர் ரத்த அழுத்த நோயை பரிசாகக் கொடுத்தது. தற்போது மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இந்த நோய் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டில் கேளா ஒலி அலைக் கதிர் பகுப்பாய்வு பரிசோதனையும் 1997ஆம் ஆண்டில் எதிரொலி இதய பகுப்பாய்வு பரிசோதனையும் செய்துள்ளேன். தற்போது மாத்திரைகளுடன்தான் உயிர்வாழ்வு. இது பற்றி தேசிய மனித உரிமை கமிஷனுக்கு முறையிட்டுள்ளேன். 1996ல் திரு. சர்மா என்ற கமிஷன் அதிகாரி சிறை நிலையைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

    கடந்த 15 ஆண்டுகளாக எனது துன்பத்திற்கும் மேலாக எனது பெற்றோர் எனது நிலையால் மிகுந்த துன்பம் அனுபவிக்கின்றனர். 20 வயதே நிரம்பாத (பிறந்த நாள் 30-7-71) தங்களது ஒரே மகனை சட்டத்தின் காவலர்கள் என்று நம்பி விசாரணைக்கு என சி.பி.ஐ.யிடம் தாங்களே முன்வந்து ஒப்படைத்து விட்டு இன்று துன்பத்தைச் சுமந்து நிற்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக அவர்களது வாழ்விலும் இன்ப நிகழ்வுகள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. அவர்கள் மட்டுமல்ல 26 வயது நிறைவடைந்த கணினியியல் பொறியாளர் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இன்று தனது திருமணத்தை எனது விடுதலைக்காக ஒத்திவைத்திருக்கும் எனது இளைய சகோதரியின் வாழ்வும் துயரத்தில் நிற்கிறது.

    ஒப்புதல் வாக்குமூலத்தின் நம்பகத் தன்மை

    ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டது மட்டுமல்ல, என்னைச் சார்ந்த அனைவருக்குமே இதே தண்டனை தரப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இவற்றிற்கு காரணம் என்ன? ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுகிற காவல் அதிகாரிகள் எழுதி எம்மிடம் துன்புறுத்திப் பெற்ற கையொப்பங்களை நம்பி அளிக்கப்பட்ட தண்டனை அல்லவா காரணம்.

    இன்று தடா சட்டப்படி நாம் குற்றமேதும் இழைக்கவில்லை. இவ்வழக்கிற்கு தடா பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம் இந்த கொடூரச் சட்டத்தின் ஒரு அங்கமான காவல் அதிகாரி பெறும் வாக்குமூலம் செல்லுபடி ஆகும் என்ற பிரிவை மட்டும் செல்லாததாக அறிவித்து அதனடிப்படையில் தண்டனை, அதிலும் மரண தண்டனை என்பதுதான் வேதனை அளிக்கிறது.

    இன்று நடைமுறையில் இல்லாத, எமது வழக்கிற்கு பொருந்தாது எனக் கூறப்பட்ட இச்சட்டத்தினால் 60 நாட்கள் போலீஸ் காவல் (அதிலும் 30+30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஓராண்டு காலம், பிணையில் விடாமை, உயர்நீதிமன்ற வாய்ப்பு பறிப்பு, மூடிய அறை விசாரணை, ரகசிய சாட்சிய முறை, போலீஸ் அதிகாரி முன் கொடுக்கும் வாக்குமூலம் செல்லும், குற்றமற்றவர் என நிரூபிக்கும் பொறுப்பு என எத்தனை அடிப்படை உரிமைகளை நாங்கள் இழந்துவிட்டோம். இவற்றை யாரால் எமக்கு திருப்பி அளிக்க முடியும்?

    இருந்தாலும் இவை அனைத்தையும் நீதி அரசர்கள் கட்டாயம் மறுசீராய்வு மனுவில் கணக்கில் எடுப்பார்கள், திறந்த மனதுடன் பார்ப்பார்கள், தடா சட்டமே பொருந்தாது என கூறியவர்கள் இதையும் தெளிந்த மனதுடன் ஆராய்ந்து எமக்கு நீதி வழங்குவார்கள் என்று நம்பினேன். முடிவில் மிக மோசமாக ஏமாற்றப்பட்டேன்.

    இந்த நேரத்தில் எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று கூறப்படுவதன் நம்பகத் தன்மை பற்றி சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.

    1. 60 நாட்களுக்கும் மேலான காவலின் பின்பு 14.8.1991 மற்றும் 15.8.1991 அன்று, அதாவது போலீஸ் காவல் முடியப் போகும் 16.8.1991 அன்றைக்கு முந்தைய நாளில் வாக்குமூலம் எடுத்ததாகக் கூறுவதை எவ்வாறு நம்புவது? இவ்வழக்கில் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படும் 17 பேரும் காவல் முடியும் ஒரு நாளுக்கு முன்புதான் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    2. ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கவென அமைக்கப்பட்ட குழுவில் (சிபிஐ / எஸ்.ஐ.டி) அங்கமாகச் செயல்பட்ட சாட்சி 52 காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் சாட்சியம் எவ்வாறு ஏற்கத்தக்கது? (நீதியரசர் தாமஸ் பக்கம் 35)

    இந்த இடத்தில் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகச் சாட்சியளித்த சாட்சி 52 தியாகராசனின் சாட்சியம் ஏற்கத்தக்கதா என்பதற்கு, அவர் தொடர்புடைய வேறு வழக்கு பற்றிக் கூறிட விரும்புகிறேன். கேரள மாநிலத்தில் நடந்த அவ்வழக்கு பற்றியும், அவ்வழக்கில் சாட்சி 52 நடந்து கொண்ட முறை பற்றியும் பிரண்ட் லைன் ஏட்டில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவே சாட்சி 52 தியாகராசனின் நம்பகத்தன்மையை எடுத்துக் கூறுமென நம்புகிறேன். இவ்வாதத்தை நான் எனது 313. குற்றவியல் நடைமுறைச் சட்டம். பதிலுரையில் தாக்கல் செய்துள்ளேன்.

    3. சாட்சி 52 தியாகராசன் தனது சாட்சியத்தில் 14.8.1991 அன்று இரவு 11 மணிக்கு சற்று முன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறைக்கு வந்து எதிரி ராபர்ட் பயஸ் என்பவரிடம் வாக்குமூலம் தொடர்பான முதல்நாள் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறுகிறார். இந்த நடவடிக்கை அரை மணி நேரம் நீடித்தது என்றும் கூறுகிறார்.

    ஆனால் இவரே வேறு இடத்தில் எனது வாக்குமூலம் தொடர்பாக சாட்சியமளிக்கும்போது, 14.8.1991 அன்று இரவு 11.30 மணிக்குச் சற்று முன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறை வந்து எனது வாக்குமூலம் தொடர்பான முதல்நாள் நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறுகிறார்.

    இதிலிருந்தே இவர் முன்பே தயார் செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு இயந்திரத்தனமாக சாட்சியமளித்துள்ளது தெரிகிறது.

    4. எனது ஒப்புதல் வாக்குமூலம் எனப்படுவதன் முதல் நாள் நடவடிக்கையின் இறுதியில் எனது பெயருக்கு பதிலாக ராபர்ட் பயஸ் பெயர் எழுதப்பட்டுள்ளது. என்னை முன்னிலையில் வைத்துக் கொண்டு முறையாக இந்த ஆவணம் தயார் செய்யப்பட்டிருந்தால் பெயர் மாற்றம் வருமா?

    5. ஒப்புதல் வாக்குமூலப்படி 3.5.1991, 4.5.1991 ஆகிய நாட்களில் நான் சென்னையில் இருப்பதாக உள்ளது. ஆனால் சாட்சி 75 வசந்தகுமார் என்பவரின் சாட்சியப்படி 3 அல்லது 4ம் தேதி அவருடன் நான் திருச்சியில் இருப்பதாக உள்ளது.

    6. எனது வாக்குமூலத்தின்படி ஹரிபாபுவிற்கு நான் படச்சுருள் கொடுத்ததாகவும், பாக்கியநாதனின் வாக்குமூலத்தில் அவர் கொடுத்ததாகவும், சாட்சி 72 இராமமூர்த்தி என்பவரின் 164-குற்றவியல் நடைமுறைச் சட்டம் வாக்குமூலப்படி சுபா சுந்தரம் கொடுத்தார் எனவும் உள்ளது. சம்பவ இடத்தில் ஹரிபாபு பயன்படுத்தியது ஒரு படச்சுருள் என்று கூறப்படுகிறது. இறுதியில் என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. எப்படி?

    7. வாக்குமூலத்தின்படி நான் மே மாதம் முதல் வாரம் இரண்டு 9 வோல்ட் மின்கலம் வாங்கியதாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே என் மீது மே மாதம் முதல் வாரம் எனக் குறிப்பிட்டு குற்றச்சாட்டு வரையப்படுகிறது. நீதியரசர் வாத்வா பக்கம் 300) ஆனால் சாட்சி 91 மொய்தீன் என்ற கடைக்காரர் சாட்சியப்படி மே மாதம் இரண்டாம் வாரம் என்றுள்ளது.

    8. வாக்குமூலத்தில் சிவராசன் அந்த இரண்டு மின்கலங்களையும் குண்டு வெடிக்கச் செய்யப் பயன்படுத்தியதாகக் காணப்படுகிறது. ஆனால் நிபுணர்களான சாட்சிகள் 252 சீனிவாசன், 257 மேஜர் சபர்வால், 280 சந்திரசேகரன் ஆகியோர் சாட்சியப்படி ஒரு பேட்டரிதான் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    9. சாட்சி 75 வசந்தகுமார் சிவராசனின் நெருங்கிய கூட்டாளி என்று வாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் அவரோ தனக்கு சிவராசனின் பெயர்கூடத் தெரியாது என சாட்சியமளித்துள்ளார்.

    10. 22.5.1991 அன்று பாக்கியநாதன் வீட்டிலிருந்து எனது பொருட்களை கொண்டு சென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் விசாரணை அதிகாரி சாட்சி 288 இரகோத்தமன் சாட்சியம், சான்றாவணம் 1344 என்பவற்றில் 24.5.1991 என்று காணப்படுகிறது.

    11. எனது வாக்குமூலப்படி 23.5.1991 அன்று ஹரிபாபுவின் உடலை எடுப்பது தொடர்பாக சுபா சுந்தரத்திடம் கூறுமாறு சிவராசன் கேட்டுக் கொண்டதாக உள்ளது. ஆனால் பாக்கியநாதனின் வாக்குமூலப்படி ஹரிபாபுவின் வீட்டு முகவரியை அறிவதற்காக சுபா சுந்தரத்திடம் சென்றதாக உள்ளது. மேற்சொன்னவை சில உதாரணங்களே. இதுபோல் பலவும் உண்டு. காரணம், நடந்தவற்றை எழுதியிருந்தால் முரண்பட வாய்ப்பில்லை.

    வாக்குமூலத்தில் உள்ள அனைத்துமே பொய் என்று கூறிவிட முடியாது. ஒரு சில உண்மைகளைக் கொண்டு தங்களது வழக்கிற்கு ஏற்ப எழுதிய கதைதான் இந்த வாக்குமூலங்கள். இத்தனை முரண்பாடுகளைக் கொண்ட வாக்குமூலத்தை நம்பித்தான் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    சாதகமாய்ப் பேசும் ஆவணக் குறிப்புகள்

    எமது கடுமையான மறுப்பிற்குப் பின்னரும், வாக்குமூலங்கள் ஏற்கப்பட்டாலும் கூட ஒரு வாதத்திற்காக அவற்றை ஏற்றுக்கொண்டாலும் எனக்குச் சாதகமான சங்கதிகள் பலவும் அதில் உள்ளன. அவற்றைத் தங்களது பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

    1. வாக்குமூலத்தில் உள்ளபடி நான் எல்.டி.டி.ஈ.க்காக மாதச் சம்பளத்திற்கு வேலை செய்கிறேன். பல எல்.டி.டி.ஈ. உறுப்பினர்களுக்கு வேலை செய்ததாகவும், சிவராசன் ஒரு சீனியர் எல்.டி.டி.ஈ. ஆள் என்பதால் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன் என்றும் காணப்படுகிறது. எங்கும் கொலைச் செயலுக்கு ஒப்புக் கொண்டு வேலை செய்ததாகக் காணப்படவில்லை.

    2. எக்ஸ்.பி.392 என்ற 7.5.1991 தேதியிட்ட கம்பியில்லாச் செய்தியின்படி சிவராசன், சுபா, தனு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும் என்ற உள்ளது. இதை நீதியரசர்களும் ஒப்புக் கொள்கின்றனர். எனது வாக்குமூலப்படி நான் 7.5.1991க்கு முன்பு தான் சிவராசனுக்கு மோட்டார் சைக்கிள், கார் பேட்டரி, 9 வோல்ட் பேட்டரி ஆகியவை வாங்கித் தருகிறேன். எனவே உள்நோக்கம் தெரிந்து வாங்கித் தர நியாயமில்லை.

    3. 21.5.1991 அன்று இரவு 9.30 மணிக்கு அதாவது சம்பவம் நடைபெறும்போது பாக்கியநாதனுடன் சினிமா பார்க்கச் சென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது. உண்மையில் எனக்கு சம்பவத்தின் விவரம் முன்பே தெரிந்திருந்தால், சதியாளனாக இருந்தால், குற்றம் நடக்கும் நேரத்தில் நண்பருடன் சினிமா பார்க்க முடியுமா? (சினிமா பார்த்துவிட்டுத் திரும்பி வரும் வழியில்தான் ராஜீவ் கொலை பற்றி அறிந்ததாக வாக்குமூலத்தில் உள்ளது.)

    4. 23.5.1991 அன்று காலை சம்பவ விவரங்களை சிவராசன் கூறுவதாகவும், மாலை நளினி விவரித்தார் எனவும் வாக்குமூலத்தில் காணப்படுகிறது. உடனே நான் பாக்கியநாதன் வீட்டில் தங்கியிருப்பது உசிதமாகப் படவில்லை என்று கருதி இடம் மாறிச் சென்றுவிடுவதாக உள்ளது. எனவே சம்பவத்தைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் 21.5.1991க்கு முன்பே வேறு இடம் சென்றிருப்பேன். சிவராசன், நளினி ஆகியோர் மூலம் 23.5.1991 அன்று தெரியவந்ததால்தான் அன்று இடம் மாறுவதாக உள்ளது.

    5. அவ்வாறு பாக்கியநாதன் வீட்டிலிருந்து நான் எனது சொந்த ஊரான சோலையார் பேட்டையில் உள்ள எனது வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவே வாக்குமூலத்தில் காணப்படுகிறது. நான் குற்றம் இழைத்திருந்தால், குற்ற மனப்பான்மையோடு இருந்திருந்தால் சொந்த வீடு செல்லாமல் வேறு மறைவிடம் நோக்கித்தானே சென்றிருப்பேன்.

    6. இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு பற்றி எந்தப் புலனாய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இதை நீதிபதி ஜெயின் கமிசனும் குறிப்பிட்டு இன்று அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு கண்காணிப்புக் குழு இது குறித்து ஆராயக் கோரப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் வெடிகுண்டு பற்றி புலனாய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டு நான் நிரபராதி எனத் தெரிந்தால்  எனது நிலை என்ன?

    இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு தொடர்பான புலனாய்வில் எத்தனை ஓட்டைகள் உள்ளன என்பது குறித்து இந்தியா டுடே, மே 21, சூன் 5, 1996 (தமிழ்) இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதையும் நான் எனது 313- குற்றவியல் நடைமுறைச் சட்டம் பதிலுரையில் தாக்கல் செய்துள்ளேன்.

    மேற்சொன்னவை மட்டுமே என்னை நிரபராதி என எடுத்துக்கூற போதுமானது எனக் கருதுகிறேன்."

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp