சுகம் தரும் சித்த மருத்துவம்: கல்லீரலைக் காத்து, கண்பார்வையை அதிகரிக்குமா ‘கொடுப்பை’...?  

கண்களில் ஏற்படும் மாற்றம் காமாலை நோயில் மட்டும் என்பது இல்லை. பெரும்பாலான கல்லீரல் சார்ந்த நோய்நிலைகளில் கண் சார்ந்த பாதிப்புகள் உண்டாவது குறிப்பிடத்தக்கது. 
சுகம் தரும் சித்த மருத்துவம்: கல்லீரலைக் காத்து, கண்பார்வையை அதிகரிக்குமா ‘கொடுப்பை’...?  
Published on
Updated on
4 min read

தலைப்பை பார்த்தவுடன் கல்லீரலுக்கும், கண் பார்வைக்கும் என்ன தொடர்பு என்ற ஐயப்பாடு பலருக்கு தோன்றும். ஆக அதனைப்பற்றி தெரிந்துகொள்வது அவசியம். இன்று இளைய தலைமுறையினர் மிகவும் வித்தியாசமான, முரண்பாடான வாழ்வியல் முறையைப் பழகி, ஆரோக்கியத்தை இழப்பது வெளிப்படை. தூக்கமின்மை, இரவில் அதிகம் கண் விழித்தல், மது அருந்துதல் போன்ற ஆரோக்கிய சீர்கேட்டை உண்டாக்கும் பழக்கங்ககளால் கண்களில் இரத்தக்களரியை அனுபவிப்பவர்கள் இன்றைய வாழ்வியலில் அதிகம். 

நவீன வாழ்வியலில் மாறிவிட்ட உணவு பழக்கவழக்கத்தால் முதலில் பாதிக்கப்படுவது சீரண உறுப்புகள் தான். அதிலும் முக்கியமாக, சீரணத்தைத் தூண்டும் மிகப்பெரிய சுரப்பியான கல்லீரல் சார்ந்த உபாதைகள் இன்றைய நாளில் அதிகம். குடிப்பழக்கம் இல்லாதவருக்கும் உண்டாகும் என்.ஏ,எப்.எல்.டி (NAFLD) எனப்படும் கல்லீரல் கொழுப்பு நிலையானது இன்சுலின் தடை, சர்க்கரை வியாதி, ரத்தத்தில் அதிக கொழுப்பு போன்ற பல நோய்நிலைகளுடன் தொடர்புடையது.

இன்று அதிகரித்து விட்ட துரித உணவு முறைகளால் பாதிக்கப்படுவது சீரண உறுப்புகள் மட்டுமல்ல, கண்களும் தான் என்கிறது நவீன அறிவியல். இதை பல ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவம் கூறியிருப்பது சிறப்பு. நம் உணவு பழக்கவழக்கம் கண் பார்வையோடு அதிக தொடர்புடையது என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. நம் முன்னோர்கள் நளபாகம், பீமபாகம் போன்ற சமையல்கலையை பழகி பின்பற்றி வந்தது சுவைக்காக மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் தான். ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு அறுசுவை உணவு என்பதே தெரியாத நிலை உள்ளது. 

சித்த மருத்துவக் கூற்றுப்படி நம் உடலில் உள்ள 96 தத்துவங்கள் தான் அனைத்திற்கும் ஆதாரம். இந்த 96 தத்துவங்கள் தனது இயல்பான நிலையில் இருந்து திரிந்து, மாற்று நிலையை அடைவதே நோய்களுக்கு காரணம் என்கிறது நம் பாரம்பரிய மருத்துவம். இந்த மருவிய தத்துவங்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதாலேயே 'மருத்துவம்' என்ற பெயர் உண்டாயிற்று என்பதும் வியப்பளிக்கும்.

இத்தகைய 96 தத்துவங்களில் முக்கியமாக உள்ள மூன்று குற்றங்கள் வாதம், பித்தம், கபம் தான். சித்த மருத்துவம் நம் உடலில் உள்ள உறுப்புகளை இம்மூன்றின் சார்பாகவே வகைப்படுத்துகிறது. அந்த வகையில் பித்தத்தின் சார்பாக உள்ள உறுப்புகள் கண்களும், கல்லீரலும் தான். எவ்வாறு உணவு முறைக்கும், கண்களுக்கும் தொடர்பு உண்டு என்று இப்போது புரிய வரும்.

அதிகம் பயன்படுத்தும் அலைபேசி மற்றும் மின்னணு சாதனங்கள் இவற்றால் பெரியவர்கள் மட்டுமின்றி பெரும்பாலான குழந்தைகள் இளம் வயதிலேயே கண் பார்வை குறைவு ஏற்பட்டு கண் கூச்சம், கண் எரிச்சல் போன்ற குறிகுணங்களால் அவதியுறுவது இன்றைய கால கட்டத்தில் வருத்தமளிக்கும் ஒன்றாக உள்ளது. இது ஒருபுறமிருக்க, மதுப்பழக்கம், புகைபிடித்தல், சத்தற்ற உணவுகள், துரித உணவுகள், குப்பை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் இவற்றால் பாதிக்கப்படும் கல்லீரல் செயல்பாடுகள் கண்களையும் பாதிப்பதாக உள்ளது. 

காமாலை நோயில் கண்களை பரிசோதித்து பித்தம் அதிகரிப்பதை உணரும் முறையை காலம் காலமாக பழகி வருவது நாம் அறிந்ததே. இது கல்லீரலுக்கும், கண்களுக்கும் உள்ள தொடர்பை உணர்த்துகிறது. கண்களில் ஏற்படும் மாற்றம் காமாலை நோயில் மட்டும் என்பது இல்லை. பெரும்பாலான கல்லீரல் சார்ந்த நோய்நிலைகளில் கண் சார்ந்த பாதிப்புகள் உண்டாவது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு பஞ்ச பூதங்களில் தீ பூதத்துடன் தொடர்புடைய இரண்டு உறுப்புகளையும் காத்து, வருங்கால சந்ததியின் ஆயுட்காலத்தை நீட்ட வல்லது இயற்கையான சித்த மருத்துவ மூலிகைகள். அந்த வகையில் பித்தத்தைக் குறைத்து கல்லீரலைக் காத்து, கண் பார்வையை அதிகரிக்கும் மூலிகைகளில் முக்கிய இடம் பிடிப்பது 'கொடுப்பை கீரை' எனும் 'பொன்னாங்கண்ணி'.

கொடுப்பை என்பதன் பெயர்காரணத்தை சற்று ஆராய்ந்தால், பை என்றால் இளமை அல்லது அழகு என்றும், கொடு என்றால் கொடுக்க வல்லது என்பதாகவும் உள்ளது. அதாவது இளமையும்,அழகையும் கொடுக்க வல்ல கீரை என்று பொருள் விளங்குவது ஆச்சர்யம்.

பொன்னாங்கண்ணி என்பதன் பொருளை ஆராய்ந்தால் பொன்+ஆம்+காண்+நீ=பொன்னாகும் மேனி அதாவது தங்கம் போல் உடலை பளபளப்பாக்கும் என்ற பொருளையும் தருவதாக உள்ளது. இனிப்பு சுவையும் குளிர்ச்சி தன்மையும் உடையது கொடுப்பை கீரை. அதனால் ‘சீதை’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.அதாவது சீ+தை, சீதளத்தை (குளிர்ச்சியை) தரவல்லது என்பது பொருள் விளங்குகிறது.

பொன்னாங்கண்ணி கண் நோய்களுக்கு மட்டுமின்றி, புண்கள், வெட்டுக்கள் மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும், காய்ச்சல், கண்நோய், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், அசீரணம், மூல நோய், கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்கள் போன்ற நோய்களின் சிகிச்சையில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

பொன்னாங்கண்ணி கீரையில் வைட்டமின் சி மற்றும் ஈ இயற்கையாகவே உள்ளது. மேலும் இதில் உள்ள கரோட்டீனாய்டு, பாலிபீனால்கள் இதன் மருத்துவ தன்மைக்கு காரணம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதாகவும், கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், வயிற்றுப்புழுக்கொல்லியாகவும், கிருமிக்கொல்லியாகவும், வீக்கமுருக்கியாகவும் உள்ளது என நவீன ஆய்வுகள் கூறுகின்றன. மொத்தத்தில் பொன்னாங்கண்ணி கீரை போஷாக்கு நிறைந்ததாக உள்ளது.   

பொன்னாங்கண்ணி கீரையை நெய் விட்டு வதக்கி மிளகு, உப்பு சேர்த்து கற்ப முறைப்படி ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் எடுத்துக்கொள்ள உடலுக்கு அழகினை தரவல்லது. உடலுக்கு குளிர்ச்சியை தந்து, உடலை தேற்றும் தன்மையுடையது.  சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ‘பொன்னாங்கண்ணி நெய்’ என்னும் சித்த மருந்தினை எடுத்துக்கொண்டாலும் நற்பலன் தரும். ‘பொன்னாங்கண்ணி தைலம்’ என்ற சித்த மருந்தினை கொண்டு வாரம் இருமுறை எண்ணெய்க்குளியல் எடுத்துக்கொள்வதும் கண்ணிற்கு நற்பலன் தரும்.

புளியாரை நெய், நெல்லிக்காய் தைலம், சிறு சந்தனாதி தைலம் போன்ற பல சித்த மருந்துகளில் பொன்னாங்கண்ணி சேருவது குறிப்பிடத்தக்கது. பொன்னாங்கண்ணி கீரையை பொடித்து சூரணமாக்கி தினசரி 2 முதல் 3 கிராம் வரை எடுத்துக்கொண்டால் கல்லீரலைக் காத்து கண்ணுக்கு குளிர்ச்சி தந்து கண்நோய்கள் வராமல் தடுக்கும். பித்த நோய்களில் இருந்து நம்மை காக்கும்.

நம் முன்னோர்கள் 'உணவே மருந்து' என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தனர். இன்னும் சொல்லப்போனால் சோற்றுடன் வாழை இலையில் வைக்கும் தீயல், துவையல், வறுவல் போன்ற பதார்த்தங்களை முறையின்றி அமைக்காமல், இன்ன உணவுக்கு இன்ன பதார்த்தம் என்று சமையல் கலையை, ஆரோக்கியத்திற்கான பாதையாக மாற்றி பயன்படுத்தி பயனடைந்தும் வந்தனர். 

தமிழர்களின் உணவில் மட்டுமின்றி கலாச்சாரத்தில் கூட கீரைகளின் பங்கு அளப்பரியது. இன்றைய தலைமுறையினர் அதனை பயன்படுத்த மறந்ததாலோ என்னவோ ஆரோக்கியம் அவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ஆக, பொன்னாங்கண்ணி கீரையை மட்டுமின்றி பிற கீரைகளையும் வெறும் உணவுப்பொருளாக பார்க்காமல் ஆரோக்கியம் அளிக்கும் அமிர்தமாக எண்ணி பயன்படுத்த துவங்கினால் நலம் நம்மை நாடி வரும். நோய்கள் நம்மை விட்டு விலகும்.


மருத்துவரின் ஆலோசனைக்கு...  drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.