சுகம் தரும் சித்த மருத்துவம்: கருப்பை பைப்ராய்டு கட்டிகளை ‘மரமஞ்சள்’ கரைக்குமா...?  

மஞ்சளுக்கு நிகரான மருத்துவ குணங்கள் இருப்பினும், மரமஞ்சள் போன்ற இன்னும் பல மூலிகைகள் அறியப்படாமல், காக்கப்படாமல் உள்ளது வருத்தத்திற்கு உரியது.
சுகம் தரும் சித்த மருத்துவம்: கருப்பை பைப்ராய்டு கட்டிகளை ‘மரமஞ்சள்’ கரைக்குமா...?  



நவீன வாழ்வியல் மாற்றங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும்சவாலாக மாறி உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது. இதனால் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த பல நோய்நிலைகள் அடுக்கடுக்காய் அதிகரித்தது தான் மிச்சம்.

அத்தகைய நவீன நாகரிக போர்வையில் அதிகரிக்கும் தொற்றா நோய்கள் ஒரு புறமிருக்க, பெண்களுக்கு உண்டாகும் ஹார்மோன் மாற்றக் கோளாறுகள் அதிகம். இந்த ஹார்மோன் சுழற்சி மாறுபட்டால் உண்டாகும் நோய்நிலைகளில் இன்று முக்கிய இடத்தை பிடித்திருப்பது கருப்பையில் உண்டாகும் ‘நார்தசைக்கட்டிகள்’ எனப்படும் ‘பைப்ராய்டு கட்டிகள்’ தான். 

நவீன வாழ்வியலில் அதிகரிக்கும் உடல் பருமனும், மனஅழுத்தமும் தான் பெண்களின் ஹார்மோன் சுழற்சி மாறுபாட்டிற்கு முக்கிய தோழமைகள். இவை இரண்டும் அணுக இயலாத அந்த காலத்தில், நிலத்தில் நாற்று நட்டு, களை பறித்து, வியர்வை சொட்ட சொட்ட வெயிலில் வேலை செய்து வந்த பெண்களுக்கு ஹார்மோன் சுழற்சி மாறுபாட்டிற்கோ, கருப்பை சார்ந்த கட்டிக்கோ வாய்ப்பே இல்லை என்கிறது நவீன அறிவியலும்.  காரணம் சாதாரணமாக வெயிலில் கிடைக்கும் வைட்டமின்-டி உடலில் குறைபாடு உண்டாகும் போது, இத்தகைய கட்டிகள் உண்டாக வாய்ப்புள்ளதை சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றது. கம்பங்கூழும், உளுந்து களியும் உணவாகி வந்த காலத்தில் வராத இத்தகைய கட்டிகள், காபிக்கு அடிமையான பின்பு அதிகரிக்க தொடங்கியதில் பாரம்பரிய வாழ்வியல் முறை ஆரோக்கியத்தை வென்றெடுக்கிறது எனலாம்.

தற்போதைய காலகட்டத்தில், நாற்பது வயதைக் கடக்கும் முன்னரே பெண்களுக்கு ஹார்மோன் சார்ந்த உடல் உபாதைகள் அதிகமாகிவிடுகிறது. இதனால் மெனோபாஸ் எனும் இறுதி மாதவிடாய் கூட விரைவில் நெருங்க துவங்குகிறது. இத்தகைய ஹார்மோன் மாற்றங்களால் எத்தனையோ உடல் மற்றும் மனம் சார்ந்த தொந்தரவுகளை பெண்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. 

அந்த வகையில் அதிகப்படியான கருப்பை சார்ந்த உடல் உபாதைகளை தரவல்லது ‘பைப்ராய்டு’ எனும் ‘கருப்பை நார்தசைக்கட்டிகள்’. சமீபத்திய ஆய்வுகளின் படி கிட்டத்தட்ட 70% பெண்களுக்கு இந்த கருப்பை பைப்ராய்டு கட்டிகள் தோன்றுவதாக, அதில் 30% பெண்களுக்கு மட்டும் குறிகுணங்கள் உண்டாவதாக உள்ளது என தெரிவிக்கின்றன. 30% பெண்களுக்கு இதனால் உண்டாகும் துன்பங்கள் அளவில்லாதவை.

மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு, மாதவிடாயின் போது தாங்க முடியாத அடிவயிற்று வலி, இடுப்பு வலி,  இல்லற உறவின் போது வலி, சிறுநீர் கழிக்க சிரமம், இளம் பெண்களில் கருத்தரிப்பதில் தாமதம், அதிகமான கருச்சிதைவு ஆகிய குறிகுணங்களை  உண்டாக்கி பெண்களின் வாழ்க்கைத் தரத்தை தீவிரமாக பாதிக்ககூடியதாக உள்ளது. நற்பேறாக, ஒரு பிரிவினருக்கு இந்த கட்டிகள் எத்தகைய குறிகுணத்தையும் உண்டாக்காமல் அமைதி காப்பதாகவும் உள்ளது.

கருப்பை பைப்ராய்டு கட்டியின் வளர்ச்சியானது பெண் இனப்பெருக்க ஹார்மோனாக கருதப்படும் ஈஸ்ட்ரோஜனால் தூண்டப்படுகிறது. பொதுவாக இனப்பெருக்கக் காலகட்டத்தில் பைப்ராய்டு கட்டிகளின் வளர்ச்சி துவங்குவதாகவும், கர்ப்ப காலத்தில் வளரும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. மற்றும் மாதவிடாய் நின்ற பிறகு கட்டிகளின் வளர்ச்சி பின்வாங்க துவங்குகிறது. ஆகையால் குறிகுணங்கள் இல்லாத நிலையில் பைப்ராய்டு கட்டிகளை பற்றிய வருத்தம் தேவை இல்லை எனவும் அறியக்கிடக்கின்றது.

இருப்பினும் கட்டியின் வளர்ச்சியைத் தடுத்து, பிற்காலத்தில் ஹிஸ்டரெக்டமி எனும் கருப்பை நீக்க அறுவைசிகிச்சைக்கு வழிவகுக்கும் பாதையை தடுத்து பெண்களுக்கு இயற்கையான வாழ்வினை அளிக்க பல்வேறு மூலிகைகள் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் அதிகம் பயனைத்தரக்கூடிய மூலிகை தான் ‘மரமஞ்சள்’. கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய இந்த மூலிகையானது, மஞ்சளை போன்று நிறத்திலும், குணத்திலும் ஒத்த தன்மையுடைய மரவகையை சார்ந்தது.

பாரம்பரியமாக சித்த மருத்துவத்தில் மரமஞ்சள் மூலிகையானது காது, கண் மற்றும் வாய் சார்ந்த நோய்களின் சிகிச்சைக்காகவும், காயங்களை விரைவாக குணப்படுத்துவதற்கும், மூலநோய், அசீரணம், வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, தோல் நோய்கள், எலும்பு தேய்மானம், மலேரியா காய்ச்சல், கருப்பை மற்றும் கருவாய் சார்ந்த நோய்நிலைகளில் சிகிச்சையளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், உடல் பருமனைக் குறைக்கவும், தேள் கடி மற்றும் பாம்புக்கடி சிகிச்சைக்கான மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மரமஞ்சள் பட்டையானது பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுவதாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பதாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், இயற்கை நிறமிகளை கொண்டுள்ளதால் புற்றுநோயை தடுப்பதாகவும், திசுக்கள் சிதைவதை தடுக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையும், ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதை தடுப்பதாகவும், உடல் வெப்பத்தை தணிப்பதாகவும், உடல் உரமாக்கியாகவும், பசியை தூண்டி குடல் இசிவை போக்கக்கூடியதாகவும், வயிற்றுப் புழுக்கொல்லியாக உள்ளதாகவும் நவீன ஆய்வுகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

மரமஞ்சள் மருத்துவ தன்மைக்கு  முக்கிய காரணம் அதில் உள்ள 'பெர்பெரின்' எனும் வேதிப்பொருட்கள் தான். இந்த மூலிகையானது பாரம்பரிய சீன வைத்திய முறைகளிலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. நம் சித்த மருத்துவத்தில் ‘மரமஞ்சள் குடிநீர்’ சுரத்தை போக்குவதில் சிறப்பு மிக்கது. இது சுரத்தைப் போக்கி, சுரத்திற்கு பின்னர் உண்டாகும் உடல் களைப்பையும் நீக்கி நன்மை பயக்கும்.

உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் இந்த பெர்பெரின் எனும் வேதிப்பொருட்களை கொண்டு நடைபெற்றுள்ளது. அதில் முக்கியமாக சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கும் தன்மை உடையதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. தற்காலத்தில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த தயாரிக்கப்படும் பல்வேறு மருந்துக்கலவைகளில் மரமஞ்சள் சேர்க்கப்படுவது சிறப்பு. 

கட்டிகளை உண்டாக்க காரணமாகும் கபத்தினை குறைக்க வல்லது என்று சித்த மருத்துவம் மரமஞ்சளை பற்றி கூறுகின்றது. இதையே, ஆய்வுகூட பரிசோதனையில் கருப்பைக் கட்டிகளின் வளர்ச்சிக்கு காரணமான நொதிகளை தடுத்து கட்டிகளின் வளர்ச்சியை தடுப்பதாக முதல் நிலை ஆய்வுகள் கூறுவதும் கூடுதல் சிறப்பு.

மஞ்சளுக்கு நிகரான மருத்துவ குணங்கள் இருப்பினும், மரமஞ்சள் போன்ற இன்னும் பல மூலிகைகள் அறியப்படாமல், காக்கப்படாமல் உள்ளது வருத்தத்திற்கு உரியது. ஆக, இயற்கை நமக்களித்த மூலிகை வளங்களைக் காத்து, பயனடையத் துவங்கினால், சவால் விடும் நோய்களை சாதாரணமாக கையாண்டு ஆரோக்கியத்தின் வாழ்வில் வெற்றியடைய முடியும்.

மருத்துவரின் ஆலோசனைக்கான இ-மெயில் முகவரி... drthillai.mdsiddha@gmail.com

Related Article

சுகம் தரும் சித்த மருத்துவம்: உடல் பருமனைக் குறைக்குமா ‘நத்தை சூரி’..?

சுகம் தரும் சித்த மருத்துவம்: தூக்கமின்மையை போக்கி, நினைவாற்றலை அதிகரிக்குமா 'வாடிகம்'..?

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஏஜிஈ-யைக் குறைத்து ஆயுளை நீட்டுமா ‘ஆமலகம்’?

சுகம் தரும் சித்த மருத்துவம்: புராஸ்டேட் கோளத்தின் நலனை காக்குமா ஆளி விதை?

சுகம் தரும் சித்த மருத்துவம்: நீரிழிவு நோயில் பாத எரிச்சலை ‘இலவங்கம்’ குறைக்குமா..?

சுகம் தரும் சித்த மருத்துவம்: உயிரணுக்கள் உற்பத்தியை அதிகரிக்குமா ‘நிதகம்’..?

சுகம் தரும் சித்த மருத்துவம்: இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து ஆயுளைக் கூட்டும் ‘மேகாரி’..?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com