பாஜகவின் வெற்றிக்கு கைகொடுக்குமா பிரதமரின் பல்லடம் வருகை?

பிரதமர் நரேந்திர மோடியின் பல்லடம் வருகை மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு கைகொடுக்குமா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
பாஜகவின் வெற்றிக்கு கைகொடுக்குமா பிரதமரின் பல்லடம் வருகை?

~ஆர்.தர்மலிங்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் பல்லடம் வருகை மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு கைகொடுக்குமா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்' நடைப்பயண நிறைவு விழா மாநாடு திருப்பூரை அடுத்த பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.27) நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக பாஜக சார்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசவுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பாஜகவைப் பொருத்தவரை கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரமாக இந்த மாநாடு நடைபெறுவதாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த மாநாட்டை உற்று நோக்கத் தொடங்கியுள்ளனர்.

மூன்றாவது முறையாக பிரதமர் வருகை: கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக திருப்பூர் மாவட்டத்துக்குத் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகை தரவுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் அருகில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த பிரதமர் மோடி இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

தற்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்' நடைப்பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேச இருக்கிறார்.

இஎஸ்ஐ மருத்துவமனை திறப்பு பாஜகவுக்கு சாதகமா?:

பின்னல் நகரான திருப்பூரில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனை இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது.

இது தொடர்பாக பல்வேறு தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 2019-ஆம் ஆண்டு திருப்பூருக்கு வந்த பிரதமர் மோடி திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டியிருந்தார். எனினும், நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மருத்துவமனை கட்டும் பணிகள் தாமதமாகவே நடைபெற்று வந்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தன.

இதையடுத்து, கடந்த சில மாதங்களாக மருத்துவமனை கட்டும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ரூ.81.34 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட இஎஸ்ஐ மருத்துவமனையை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துள்ளார்.

இது, தொழிலாளர்கள் அதிகம் உள்ள திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்கும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மாற்றுக் கட்சி பிரமுகர்கள் இணைய வாய்ப்பு: மாதப்பூரில் நடைபெறும் பாஜக மாநாட்டில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலர் பிரதமர் மோடி முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொழிலாளர்களின் இஎஸ்ஐ கோரிக்கையை நிறைவேற்றி இருப்பதையடுத்து, திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான அடுக்குமாடி குடியிருப்புகள், கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது.

பல்வேறு கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் இணைதல், தொழிலாளர் நலன்களுக்கான அறிவிப்புகள் ஆகியவை விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பாஜகவின் வெற்றிக்கு கைகொடுக்கும் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com