/

பொருளாதார நெருக்கடி: ஒரு பகுதி தங்கத்தை ஆர்பிஐ விற்றிருக்கலாம்! ப்ளூம்பெர்க் அறிக்கை

பொருளாதார நெருக்கடிக்கு இடையே அந்நியச் செலாவணியை பலப்படுத்தும் வகையில், ஆர்பிஐ ஒரு பகுதி தங்கத்தை விற்றிருக்கலாம் என ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியீடு

News image

தங்கக் கட்டிகள் - பிரதி படம் - ANI

Updated On :3 ஜூன் 2026, 12:31 pm IST

மேற்காசிய போரால் ஏற்பட்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளால், குறைந்து வரும் அந்நியச் செலாவணிக் கையிருப்பை வலுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி, கையிருப்பில் இருந்த தங்கத்தை குறைந்த அளவில் விற்றிருக்கலாம் என ப்ளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியானது அமெரிக்க டாலரில் 12 பில்லியன் மதிப்புள்ள தங்கத்த்தை மே 22ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களக்குள் விற்பனை செய்து, 7.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு பணங்களை வாங்கியிருக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் மேற்காசிய போர்களால், உள்நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார அழுத்தத்திலிருந்து நாட்டின் அந்நியச் செலாவணி சொத்துகளைப் பாதுகாக்க, இந்திய ரிசர்வ் வங்கி தனது தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்றிருக்கலாம் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.

ப்ளூம்பெர்க் பொருளாதாரவியல் மூத்த இந்திய நிபுணர் அபிஷேக் குப்தா தெரிவித்திருக்கும் கருத்தில், மே 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில், ரிசர்வ் வங்கியானது, சுமார் 7.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள அந்நியச் செலாவணி சொத்துகளை வாங்கிய அதே வேளையில், ஏறத்தாழ 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை விற்றிருக்கக்கூடும் என்கிறார்.

மத்திய அரசு, தங்கத்தின் மீதான இறக்குமதி வரிகளை உயர்த்திய பிறகு, குறிப்பிடத்தக்க வகையில், தங்கக் கையிருப்பில் ஏற்பட்ட சரிவு சாதாரணமாகத் தோன்றவில்லை. இறக்குமதி வரி உயர்வு நடவடிக்கை வழக்கமாக ரிசர்வ் வங்கியின் தங்கம் மற்றும் டாலர் சொத்துக்களின் மதிப்பை அதிகரித்திருக்கவே வேண்டும். எனவே இதுதான், மத்திய ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட பகுதி தங்கத்தை விற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்க விற்பனை குறித்து, கருத்து தெரிவிக்குமாறு ப்ளூம்பெர்க் விடுத்த கோரிக்கைக்கும் ரிசர்வ் வங்கி உடனடியாகப் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது அமெரிக்க தாக்குதல், அதன் தொடர்ச்சியாக ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டது போன்றவற்றால், மூலதன வெளியேற்றம் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகள் குறித்து கொள்கை வகுக்கும் வட்டாரங்களில் கவலைகள் அதிகரித்ததன் காரணமாக இந்த தங்க விற்பனை நடந்திருக்கலாம் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ளூம்பெர்க் அறிக்கையில், நாட்டில் அதிகரித்து வரும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு மத்தியில் ரூபாயின் மீதான அழுத்தம் தீவிரமடைந்து வருவதால், இந்திய ரிசர்வ் வங்கி தனது உடனடி வெளிநாட்டுக் கையிருப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த மே 20-ஆம் தேதி இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைத் தொட்டது. அதுமுதல், பெரும்பாலான ஆசிய நாணயங்களை விட சிறப்பாகச் செயல்பட்டு வரும் ரூபாயின் மதிப்பு இழப்பைக் கட்டுப்படுத்த, அந்நியச் செலாவணி சந்தைகளில் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் உதவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக உள்ள இந்தியா, மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் போர் நெருக்கடியால், எரிசக்தி செலவுகள் அதிகரித்து, அந்நியச் செலாவணிக்கான தேவையும் அதிகரித்துள்ளதால் இந்த அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த பொருளாதார அழுத்தத்தை சமாளிக்கவே, கடந்த இரண்டு வாரங்களாக எரிபொருள் விலை உயர்வு மற்றும் தங்கம் இறக்குமதி வரி உயர்வு போன்றவை கொண்டுவரப்பட்டது.

அண்மைக் காலத்தில், வெளிநாடுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நாட்டின் கையிருப்பு தங்கம், அங்கிருந்து பத்திரமாக உள்நாட்டுக்குள் கொண்டு வருவதில் மத்திய அரசு முனைப்புக் காட்டி வந்தது. மேற்கத்திய நாடுகளில் ரஷிய சொத்துகள் முடக்கப்பட்டதன் காரணமாக, மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

RBI may have sold some gold to strengthen foreign exchange amid economic crisis, says Bloomberg report

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.