1986 நவம்பர் 1, 15 தேதியிட்ட 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழ்களில் எண்ணத்தை எழுதுகிறேன் என்ற தொடரில் இயக்குநர் பாரதிராஜா எழுதிய பகுதி... அவருடைய நினைவாக...
என்னுடைய பெரும்பாலான திரைப்படங்கள் கிராமிய சூழ்நிலையை மையமாகக் கொண்டு அமைந்துவிடுவதன் காரணம் என்ன என்று சிலர் கேட்கிறார்கள்.
இந்தியாவின் ஜீவனே நம்முடைய கிராமங்களில்தான் இருக்கின்றன என்று ஒரு சமயம் அண்ணல் காந்தி அடிகள் சொன்னார். இப்போதெல்லாம் மேடையில் நம்முடைய பண்பாடு, நாகரிகம் கலாச்சாரம்... என்றெல்லாம் நிறையப் பேசுகிறோம். இந்தப் பண்பாடும், நாகரிகமும் நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில்தான் அதிகமாக வேறூன்றி உள்ளன.
நம்முடைய பண்பாடு, பழக்க வழக்கங்கள், மொழியின் சிறப்பு, வழிபாட்டு முறை, கலை, கலாச்சாரம்... இவையெல்லாம் நமது மண்ணின் பெருமை. மற்ற நாடுகளுக்கும், நமக்குமுள்ள மிகப் பெரிய வித்தியாசம் - காலம் காலமாக நம்முடைய மண்ணுக்கு உள்ள பெருமை. இந்த அடிப்படையில் - நம்முடைய nativity-க்கு ஏற்ப கிராமியக் கதைகளை எழுதி, கிராமியக் கதாபாத்திரங்களை சிருஷ்டிக்கும்போது மக்களின் மனங்களில் அவை நிரந்தரமாக நிற்க முடிகிறது.
எனது கற்பனையில் உருவான கதாபாத்திரங்களை - சொந்த சிருஷ்டிகளை ஒரு முரட்டுத்தனமான இளைஞன் வீரண்ணனை, முத்துப் பேச்சியை, ஒரு சப்பாணியை, மயிலை, பாஞ்சாலியை, பரஞ்ஜோதியை, சின்னப்பதாஸை... படைத்த ஒரு மென்மையான உள்ளம் ஒரு கிராமத்துப் பெரிய மனிதர் மயில்சாமியை... இனி மறப்பது என்பது முடியாத காரியம். அவை அழியாத ஓவியங்களாக - சாசுவதச் சின்னங்களாக சதா நம் கண் முன் காட்சி அளித்துக் கொண்டே இருக்கிறார்களே!
பெரிய மனிதர் மயில்சாமியாக நடித்தவர் நம்முடைய நடிகர்திலகம் அவர்கள்.
கலை உலகத்தின் தலைமகனான் சிவாஜியுடன் இணைந்த சங்கமமே ஒரு சினிமா சரித்திரம்.
நடிகர் திலகத்தை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது நான் பல காலமாக கண்டு வந்த கனவு. அந்தக் கனவு இவ்வளவு சீக்கிரத்தில் பலிக்கும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
சிவாஜி அவர்களைப் பற்றி சிலர் ஆரம்பத்தில் சொன்னதற்கும், பின்னால் நிஜமாய் நடந்த நிகழ்ச்சிகளுக்கும் கிஞ்சித்தும் சம்பந்தம் கிடையாது.
மாலை ஆறு மணிக்கு மேல் அவர் 'ஒர்க்' பண்ண மாட்டார் என்று சொன்னார்கள். ஆனால் அவரோ இரவு பத்து மணி வரை உற்சாகத்துடன் 'ஒர்க்' பண்ணியதை இப்போது நினைத்துக் கொண்டாலும் பிரமிப்படைந்து போகிறேன்.
கொள்ளேகாலில் படப்பிடிப்பு. 'மேக் - அப்'போ, அவருக்கு 'விக்'கோ கிடையாது. ஆனால் படப்பிடிப்பின் ஆரம்ப நாளன்று இலேசாக 'மேக்-அப்' போடச் சொல்லி, 'விக்' வைக்க ஏற்பாடு செய்தேன்!
" 'மேக்கப்', 'விக்' அவருக்கு வேண்டாம் என்றல்லவா முடிவு செய்திருந்தீர்கள்?" என்று என் உதவியாளர்கள் கேட்டார்கள்.
"முதல் நாளன்று இருக்கட்டும், அப்புறம் சொல்லிக் கொள்ளலாம்!" என்று கூறிவிட்டு, முதல் நாள் 'விக்'குடன் படப்பிடிப்பை நடத்திவிட்டு, அடுத்த நாள் சிவாஜியிடம் "'மேக்-அப்', 'விக்' வேண்டாண்ணே!" என்று நான் சொன்ன போது, "இதை நேத்தே ஏன் சொல்லலே? எது எப்படியிருந்தாலும் நீ என்ன நினைக்கிறியோ அதைச் செய். எது கரெக்ட்டுன்னு தோணுதோ அதைச் செய்யத் தயங்கக் கூடாது!" என்று என்னிடம் சொன்னார் அந்த நடிப்புலக மாமேதை.
★
ஒரு ஷாட்டில் ராதா அருமையாக நடித்தார்! எல்லோரும் பாராட்டினார்கள்! அப்போது "ராதா! நீ நடிச்சாலும் அல்லது நானே நடிச்சாலும்... நம்மை நடிக்க வச்சது நம்ம பாரதியல்லவா!" என்று சொன்னவர் அந்த கலைஉலகின் நிறைகுடமான - நடிகர் திலகம். 'முதல் மரியாதை'யில் நடிகர் திலகத்துடன் பணியாற்றியதை பொன்னான வாய்ப்பாக- பூர்வஜென்ம புண்ணியத்தின் பயனாக நான் நினைக்கிறேன்.
★
சமீப காலமாக வித்தியாசமான படங்களுக்கு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட படங்களுக்கு மக்கள் ஆதரவு அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயம். இது தொடர வேண்டும். இத்தகைய புதுமையான சிந்தனைகள், மாற்றங்கள் மக்கள் மனங்களில் வலுப்பெற வேண்டும்.
யார் நடித்திருந்தாலும், யார் இயக்கியிருந்தாலும் வித்தியாசமான முயற்சிகளுக்கு மக்கள் கை கொடுக்கத் தயங்கக் கூடாது.
என்னுடைய 'காதல் ஓவியம்' வெற்றி பெறவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போதுகூட என்னுடைய சிறந்த சிருஷ்டிகளில் ஒன்றாக 'காதல் ஓவிய'த்தைக் கருதுகிறேன். அந்தப் படம் கமர்ஷியலாக வெற்றி பெறாமலிருந்திருக்கலாம்.
ஆனால், எனது தயாரிப்புக்களில் தனி மகிழ்ச்சியைத் தந்த படங்களில் ‘காதல் ஓவியம்' ஒன்று என்று இன்றும் நான் கோடிட்டுக் கூறுவேன்!
எந்த விழாவில் என்னைப்பேச அழைத்தாலும் "என் இனிய தமிழ் மக்களே!" என்று மக்களை அழைத்துத்தான் பேசுகிறேன்.
அதற்குக் காரணம் இந்த பாரதிராஜாவை நம்பி, எனது படத்தைப் பார்த்து, ரசித்து, அதை வெற்றிகரமாக ஓடச் செய்து, என்னை சந்திக்கும்போதெல்லாம் புதுத் தெம்புடன் எனக்குக் கை கொடுப்பவர்கள் மக்கள். என்னை உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, உளமார ஆதரிப்பவர்கள் மக்கள். அந்த மக்களால்தான் நான் இன்று மரியாதை பெற்றிருக்கிறேன். அந்த மக்களால்தான் இன்று பெருமை பெற்றிருக்கிறேன். 'முதல் மரியாதை' படம் மாநில அளவில் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் மக்கள் அளித்த பேராதரவினால்தான்! எனவே தான் 'என் இனிய தமிழ் மக்களே' என்று நான் அவர்களை அழைக்கிறேன்.
எனது படங்களில் பெரும்பாலும் காதலைப் பற்றியே சொல்லுகிறேன் என்று சிலர் கூறுகிறார்கள்...! நான் காதலைப் பற்றிப் படங்களில் சொல்லுகிறேன். ஆனால் ஒரே மாதிரி சொல்லுவதில்லை. ஒவ்வொன்றிலும் வித்தியாசமாகச் சொல்லுகிறேன்.
கல் உடைப்பவனானாலும், விஞ்ஞானியானாலும், வேறெந்தத் துறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும் மனிதனுக்கு காதல் இல்லாமல் வாழ்க்கை பரிமளிப்பதில்லை.
காதல் என்பது பீச்சுக்கோ, சினிமாவுக்கோ, பூங்காவுக்கோ சென்று, அங்கு வளர்வதாகக் கூறப்படுகிற 'காதல்' அல்ல!
காதலைக் கொச்சைப்படுத்திவிடக் கூடாது. காதல் என்பது கொச்சையான வார்த்தையும் அல்ல. அது ஒரு புனிதமான வார்த்தை ஆகும்.
இன்னொன்றையும் தெளிவாகச் சொல்ல வேண்டும். என் கதைகளில் காதல் இருக்கிறது. ஆனால் 'காதலே வாழ்க்கை' என்ற விதத்தில் நிச்சயமாக இருக்காது. காதல் என்பது வாழ்க்கையில் ஒரு சுவையான அங்கம். சில நேரங்களில் காதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க நேர்கிறது, கதையின் போக்குக்கு ஏற்றவாறு !
நான் எழிலுடன் காணும் மலையையும் ரசிக்கிறேன். அழகுடன் ஓடும் ஆற்றையும் ரசிக்கிறேன். இனிய தென்றல் காற்றின் சுகத்தையும் அனுபவிக்கிறேன்! பெண்கள் பட்டுச்சேலை கட்டி நடந்து செல்லும்போது 'சரசர'வென்று வரும் அந்த சப்தத்தையும் ரசிக்கிறேன்! ரசிப்பதை, ரசித்ததை கதையாகச் சொல்லி வருகிறேன். வாழ்ந்த மண்ணின் சுகத்தை யதார்த்தமாகச் சொல்லி வருகிறேன்.
'முதல் மரியாதை'க்காக என்னை பாராட்டி விழா நடத்தியவர்களும் அந்த விழாவில் பேசியவர்களும் நான் தொடர்ந்து சிறந்த படங்களை இயக்கி தர வேண்டும் என்றும், 'தங்கத் தாமரை ' பரிசு பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
அவர்களுக்கு நான் கூறும் பதில், ”தமிழ் மண்ணின் பெருமை கூறும் தமிழ்த் திரைப்படங்களை எடுத்து அகில இந்திய அளவில் 'தங்கத் தாமரை ' பரிசைப் பெறுவேன். நமது பண்பாட்டை, நாகரிகத்தை, கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கதையெழுதி, நமக்குப் பெருமை தரும் வகையில் படங்களை இயக்கித் தருவேன். எனது முயற்சிகளுக்கு உங்களது முழு ஆதரவு என்றைக்கும் உண்டு என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்.''
நன்றி : சினிமா எக்ஸ்பிரஸ் (1986 நவம்பர் 1, 15)
Summary
The first part of the series written by director Bharathiraja for Cinema Express magazine.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈகோ இல்லாத மனிதர் பாரதிராஜா! இளம் இயக்குநர்களைப் பாராட்டிய இமயம்!

இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா?
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!
ஸ்ரீதர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 56
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!




