தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

டிராக் ரெகார்ட்! 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் - முதல்வர் விஜய் சொன்னதும் செய்ததும்!

தேர்தல் வாக்குறுதிகளில் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் தொடர்பாக த.வெ.க. தலைவரும் தமிழக முதல்வருமான சி. ஜோசப் விஜய் சொன்னதும் செய்ததும் பற்றி...

News image

முதல்வர் விஜய்

Updated On :19 ஜூன் 2026, 11:00 am IST

பதவியேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் விஜய் கையொப்பமிட்டார்.

அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா முதல்வர் விஜய்?

வாக்குறுதி

தவெக தேர்தல் வாக்குறுதிகளில் கட்டணமில்லா மின்சாரம் பற்றி என்ன சொல்லியிருந்தார்கள்? தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், “தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Story image

மே 10 ஆம் தேதி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், இதன்படி, “இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்” என்ற அரசாணை கோப்பில் கையொப்பமிட்டார்.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 500 யூனிட்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்தும் நுகர்வோருக்குத் தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவச சலுகை என்ன ஆனது? என்று பதவியேற்ற அதே நாளில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து மே 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பில், “தகுதியுள்ள அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கவும், பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்யவும், மக்களின் நிதி நெருக்கடியைக் குறைக்கவும், சாமானிய மக்கள் மீதான சுமையைக் குறைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு, மொத்தம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும் இதற்காக ஆண்டுக்கு ரூ.1,730 கோடி கூடுதல் மின் கட்டண மானியத்தை அரசே ஏற்கவும் அரசு ஆணையிடுகிறது.

இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட, தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டண கட்டமைப்பே தொடர்ந்து அமலில் இருக்கும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வரவேற்பும் எதிர்பார்ப்பும்

இவ்வாறான சூழலில், “தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்” என்று கூறிவிட்டு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்குவது ஏன்? என்று மின்நுகர்வோரும், எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

கட்டணமில்லா மின்சாரம் குறித்த விவாதங்களுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டுப் பிரச்சினை பலரையும் அதிருப்திக்குள்ளாகியிருக்கிறது.

கட்டணமில்லா மின்சாரம், கலக்கத்தை ஏற்படுத்தும் மின்வெட்டு - இவற்றுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் முதல்வர் விஜய் என்ற சூழலுக்கு மத்தியில், கடந்த கால வரலாறு என்ன சொல்கிறதென்று சற்றுத் திரும்பிப் பார்க்கலாம்.

மின் விநியோகமும், மின்தடையும் தமிழ்நாடு அரசியல் களத்தின் முடிவைத் தீர்மானிப்பதில் மிகப் பெரிய பங்கு வகித்து வருகிறது. மின்சாரத்தில் கை வைப்பது போலத்தான் மின்வெட்டுப் பிரச்சினையும் தமிழகத்தில் சில முடிவுகளைக் கொடுத்திருக்கின்றன. 2006-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற திமுக தலைவர் மு. கருணாநிதியின் ஆட்சியில் மாநிலம் முழுவதும் மின்வெட்டுப் பிரச்சினையால் மக்கள் அவதியடைந்தனர் (மறைந்த ஆர்க்காடு நா. வீராசாமிதான் மின்துறை அமைச்சர்). இந்தக் கடும் மின்வெட்டுப் பிரச்சினை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அப்போது திருப்புமுனையாகவும் அமைந்தது.

2006 முதல் 2011 வரை தமிழ்நாடு சந்தித்த மின் பற்றாக்குறை, பொதுமக்களையும், சிறு குறு தொழில்களையும் கடுமையாகப் பாதித்தது. கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் தொழிற்சாலைகள் முடங்கின.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அதிமுக பொதுச் செயலர் ஜெ. ஜெயலலிதா, “மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன்” என்ற ஒற்றை முழக்கத்தை முதன்மையாக வைத்துப் பிரசாரம் செய்தார். அதன்படியே, அவர் ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் பேசுகையில், “எங்கள் மீது நம்பிக்கை வைத்து, என் மீது நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்திருப்பதால், உங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. இத்தனைக் காலம் பொறுத்துவிட்டீர்கள். விரைவில் மின் நிலைமை சீரடையும்” என்றும் அவர் பேசியிருந்தார்.

கடந்த தேர்தலில் திமுக, அதிமுக தவிர்த்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தை மக்கள் தேர்வு செய்திருக்கின்றனர். தேர்தல் வெற்றிக்குப் பின்னர் திருச்சி நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் விஜய்யும், “100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் திமுக கொடுத்தது கிடையாது. மேடம் ஜெயலலிதா இருந்தபோது செய்தது” என்று தெரிவித்திருந்தார்.

மாதந்தோறும் மின் கட்டணம் எடுக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். எந்தவித சிக்கலுமின்றி, தடையில்லா மின் விநியோகம் மற்றும் மின்வெட்டு குறித்து முதல்வர் விஜய்யும் அறிவிப்பாரா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

அல்லாமல், தேர்தல் பிரசாரத்தில் தவெக அளித்த வாக்குறுதிப்படி மக்களுக்கு மாதந்தோறும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? பொறுத்திருக்கலாம்...

Summary

The first file Vijay signed approved the rollout of 200 units of free electricity for domestic consumers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.