ஐந்து மாதங்களில் 6 உத்தரவுகளை திரும்பப் பெற்ற தவெக அரசு! ஆறாவது உத்தரவு என்ன தெரியுமா?

கடந்த ஐந்து மாதங்களில் தவெக அரசு பிறப்பித்த 6 உத்தரவுகளை திரும்பப் பெற்றுள்ளது பற்றி...

CM Vijay to lay foundation stone for Rs 3,108 crore Chennai water pipeline project today

முதல்வர் ஜோசப் விஜய் - IANS

Updated On :

தமிழ்நாட்டில், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை அரசு பிறப்பித்த 6 உத்தரவுகள் நடைமுறை சிக்கல்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஆறாவது உத்தரவு லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் திருக்கோயில்களில் செல்போன்களைக் கொண்டு செல்ல பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கோயில்களில் சுவாமியைக் காண கூட்டம் காணப்படும். வரிசையில் நின்று தரிசனம் செய்வார்கள், செல்போன் கொடுக்கவும், வாங்கவும் வரிசையில் நிற்பதற்குள் சாட்சாத் கடவுளே நேரில் வந்து தரிசனம் தந்துவிடுவார் போல இருப்பதாக பக்தர்கள் புலம்பி வந்த நிலையில், அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவெக அரசின் ஆறாவது திரும்பப் பெறும் உத்தரவு என்றால் மற்ற ஐந்து உத்தரவுகளும் என்ன என்று பலருக்கும் சந்தேகம் எழலம். சிலருக்கு சில திட்டங்கள் நினைவுக்கு வரும்.

முதல் ரத்து - சிறப்புப் பணி அலுவலர்

தவெக அரசு பொறுப்பேற்றதும், முதல்வர் விஜய்யின் நெருங்கிய நண்பரும் ஜோதிடருமான ரிக்கி ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்வரின் சிறப்புப் பணி அலுவலராக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், தனிப்பட்ட நண்பர்களுக்கு அரசுப் பதவி வழங்குவதா என்று அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிலரும் கேள்வி எழுப்பியதால் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது.

ஆர்டிஐ-யிலிருந்து விலக்கு

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து (ஆா்டிஐ) சட்டம்-ஒழுங்கு துறைக்கு விலக்கு அளிக்கும் அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு, அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் ரத்து செய்தது.

தமிழக சட்டத் துறை அமைச்சா் நிா்மல் குமாா் வெளியிட்ட அறிவிப்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 24 உள்பிரிவு (4)-இன் கீழ், தமிழக அரசின் பொது சட்டம் - ஒழுங்கு துறைக்கு விலக்கு அளித்து, மனித வள மேலாண்மைத் துறையால் வெளியிடப்பட்டிருந்த அரசாணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்த்து இடதுசாரி மாணவர் இயக்கங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கக் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டு, வழக்கம் போல அரசியல் மற்றும் மாணவர் அமைப்பிலிருந்து வந்த எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

திருவண்ணாமலையில் மெல்மா தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்கு நிலத்தைக் கையகப்படுத்த தவெக அரசு எடுத்த முடிவு, விவசாயிகளின் கடும் போராட்டத்துக்கு இடையே திரும்பப் பெறப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களை சேகரித்து சமா்ப்பிக்க வேண்டும் என ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவையடுத்து அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதம் எழுந்த நிலையில் திரும்பப் பெறப்பட்டது. இந்த சம்பவத்துக்கும் அரசுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது குறித்த விவாதம் நடந்து வருகிறது.

தொடர்ச்சியாக இதுபோன்ற உத்தரவுகள் வெளியிடப்படுவதும் எதிர்ப்பு எழுந்ததும் திரும்பப் பெறுவதும், நடைமுறைச் சிக்கல்களை முன்கூட்டியே கணிக்காமல், அறிக்கை வெளியிடுவது போன்றவை தவெக அரசின் நிர்வாகத்திறன் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திவிடும்.

ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தும் முன்பு, அனுபவம் வாய்ந்த அந்தத் துறை நிபுணர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, அனைத்து சிக்கல்களையும் எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் கண்டறிந்தபிறகே செயல்படுத்தினால் இதுபோன்ற திரும்பப்பெறும் நடவடிக்கைகள் குறையும்.

பெரிய பெரிய திட்டங்களை இன்னும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவில்லை. இவையெல்லாம் சாதாரண நடைமுறை அறிவிப்புகள், இதற்கே இத்தனை திரும்பப் பெறுதல் என்றால்... வரப்போகும் காலங்கள் எப்படி என்று மக்கள் எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால், இதனை அரசியல் ரீதியாக விமர்சித்தாலும், ஒன்றை தவறு என்று சுட்டிக்காட்டும்போது திரும்பப் பெற்றுக் கொள்வதும் நல்லாட்சியின் அழகுதான் என்று தவெகவினர் கூறலாம். மறுப்பதற்கில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.