மதுவைக் கலந்து சிறுமியிடம் பாலியல் கொடுமை, மசாஜ் மையத்தில் வதை: துபையில் மரண தண்டனையை எதிர்நோக்கும் குற்றவாளி

சோடாவில் மதுவைக் கலந்துகொடுத்துப் பதினைந்து வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஒருவர், துபையில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
மதுவைக் கலந்து சிறுமியிடம் பாலியல் கொடுமை, மசாஜ் மையத்தில் வதை: துபையில் மரண தண்டனையை எதிர்நோக்கும் குற்றவாளி
Published on
Updated on
2 min read

துபை: சோடாவில் மதுவைக் கலந்துகொடுத்துப் பதினைந்து வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன் துபை மசாஜ் மையத்தில் பாலியல் செயல்களைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

துபை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மசாஜ் மையத்தில் வேலை செய்வதற்கு ஓராண்டுக்கு முன்,  வங்கதேசத்திலிருந்து  ஐக்கிய அரபு  அமீரகத்துக்கு அவருடைய அத்தைதான் அழைத்துவந்திருக்கிறார்.

மசாஜ் செய்த பின்னர், வாடிக்கையாளர்களை அவர்கள் விருப்பத்துக்கேற்ப திருப்திப்படுத்த அந்த சிறுமி மறுத்ததைத் தொடர்ந்து, மீண்டும் வங்கதேசத்துக்கே அனுப்பிவிடுவதாகத் தெரிவித்து வீட்டிலேயே வைத்திருந்திருக்கிறார் அவர்.

இதுபற்றி சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

'குற்றம் சாட்டப்பட்டவர் என் மீது காதல் கொண்டிருப்பதாக என்னுடைய அத்தையிடம் தெரிவித்திருக்கிறார். அவருடன் உறவு வைத்துக்கொள்ள நான் மறுத்துவிட்டேன். அவர் என்னை ஒரு இரவுக் கேளிக்கை விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே எனக்குக் குடிப்பதற்கு சோடா வாங்கித் தந்தார். ஆனால், அந்த சோடாவில் மதுவைக் கலந்திருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் நினைவிழக்கத் தொடங்கிவிட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால், விழித்தெழுந்தபோது அந்த நபருடைய வீட்டின் படுக்கையறையில் நான் இருந்தேன்' என்று தன் வாக்குமூலத்தில் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்.

அதன் பிறகுதான், 36 வயதான வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த நபர், பாலியல் ரீதியாகத் தன்னுடன் உறவு கொண்டது தமக்குத் தெரியவந்தது என்று சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

அந்த நபருடன் உறவு வைத்துக்கொண்டால் தம்முடைய படிப்புக்கு அவர் செலவு செய்வார் என்று அத்தை தெரிவித்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

அதன் பிறகு ஒரு மாதத்தில் அந்தச் சிறுமியினுடைய அத்தை, விபசாரக் குற்றத்துக்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால், வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த நபருடனேயே சிறுமியும் தங்கியிருக்க நேரிட்டது.

மசாஜ் மையங்களில் வேலை செய்யுமாறு அந்த நபர் என்னைக் கட்டாயப்படுத்தி, பணத்தையெல்லாம் அவரே வாங்கிக் கொண்டார். அமைதியாகத் தான் சொல்வதைக் கேட்டு நடக்காவிட்டால் உணவு, தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று அச்சுறுத்திய அவர் ஒரு முறை பெல்டால்கூடத் தம்மை அடித்தார் என்றும் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்.

2019 ஆகஸ்டில் ஒரு மசாஜ் மையத்துக்குக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர், அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றபோது, உள்ளூர்ப் பெண் ஒருவரைச் சந்தித்து, தன் உடலில் ஏற்பட்டுள்ள காயங்களை அந்தச் சிறுமி காட்டியுள்ளார். மிகவும் வருத்தப்பட்ட அந்தப் பெண்தான், வாடகை கார் ஒன்றை வரவழைத்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அல் கொசாய்ஸ் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்துள்ளார் என அரபு காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

அல் நஹ்தா என்ற இடத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரைத் துபை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்தச் சிறுமியுடன் தவறான உறவு வைத்துக் கொண்டிருந்ததாகவும் மசாஜ் மையங்களில் பணிபுரிவதற்காக வங்கதேசத்திலிருந்து பெண்களை அழைத்துவருவதையும் விசாரணையில் அந்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சட்ட விரோதமாக ஆள்களைக் கடத்தி வருவதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியைப்  பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நபருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அரபு காவல்துறை முறையிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நபர், தற்போது கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அடுத்து மாரச் 19 ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.