/

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும்: ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார்.

News image
பாமக நிறுவனர் ச.ராமதாஸ்
Updated On :8 ஆகஸ்ட் 2024, 8:13 am

DIN

விழுப்புரம்: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். 2023 - ஆம் ஆண்டில் துபை சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 6100 கோடி மூதலீடு ஈர்க்கும் வகையில் கையெழுத்திட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3440 கோடிக்கு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை.

சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டு மூலம் எவ்வளவு முதலீடு வந்தது என தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று தெரிவிக்கவேண்டும்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டில் திமுகவின் துரோகத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட தகவல்கள் திரிக்கப்பட்டவையாகும். தகவல்களின் கால அவகாசம் ஒரே மாதிரியாக இல்லை. இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த திமுக அரசு, தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆகஸ்ட் 13 ஆம் தேதி கூடும் தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கவேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இதை உச்ச நீதிமன்றமும், பாட்னா உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

தமிழகத்திலுள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்ற சட்டத்தை வணிகர்கள் மதிக்கவேண்டும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எச்சரித்தும் அதை யாரும் பொருள்படுத்தவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் பெயர் பலகை தமிழில் வைக்கப்பட்டு உள்ளதை அரசு உறுதி செய்யவேண்டும்.

காவிரி ஆற்றிலுள்ள மணல் குவாரிகளை மூடவேண்டும். மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டும் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராததற்கு மணல் கொள்ளையே காரணமாகும். பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரில் 19 பேரை விடுதலை செய்த இலங்கை 3 பேருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இலங்கை அரசின் இந்த தண்டனை கண்டிக்கதக்கதாகும். எனவே இரு நாட்டு மீனவர்களும் காலங்காலமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடிக்க இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

வன்னியர் இட ஒதுக்கீடு ஆணையத்துக்கு காலக்கெடு நிர்ணயித்து இருப்பது பம்மாத்து வேலையாகும் என்றார் அவர். அப்போது மாவட்டச் செயலர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.