உணவு, குடிநீரின்றி 65,000க்கும் மேற்பட்டோர் தவிப்பு: ஐ.நா.

வடக்கு காஸாவில் மனிதாபிமான உதவிகள் தடுக்கப்பட்டுள்ளதால், தவிக்கும் 65,000க்கும் மேற்பட்டோரைப் பற்றி..
காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் வழங்கப்படும் இலவச உணவுக்காக காத்திருக்கும் பாலஸ்தீனியர்கள்.
காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் வழங்கப்படும் இலவச உணவுக்காக காத்திருக்கும் பாலஸ்தீனியர்கள்.
Published on
Updated on
1 min read

காஸா: காஸாவின் வடக்கு பகுதியினுள் வெளியிலிருந்து நுழையும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தினால் தடுக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான காஸா மக்கள் அத்தியாவசிய உதவிகளின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 6 முதல் இஸ்ரேல் ராணுவம் வடக்கு காஸாவில் தரைவழித் தாக்குதல் நடத்தி அப்பகுதிகளைக் கைப்பற்றிவருகிறது. இதனால் அப்பகுதிகளுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தால் தடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 66 நாட்களாக இஸ்ரேல் கைபற்றிய காஸாவின் வடக்கு பகுதிகளான பெயிட் லஹியா, பெயிட் ஹனொன் மற்றும் ஜபாலியா ஆகிய இடங்களில் வாழும் 65,000 முதல் 75,000 பாலஸ்தீனர்கள் உணவு, நீர், மின்சாரம் மற்றும் மருத்துவம் ஆகிய அடிப்படை உதவிகளின்றி தவித்து வருவதாகவும், 5,500க்கும் மேற்பட்டோர் பெயிட் லஹியாவிலிருந்து வலுக்கட்டாயமாக இடமாற்றப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவரங்களின் கூட்டமைப்பான ஒசிஎச்ஏ தெரிவித்துள்ளது.

மேலும் அங்கு நிலவும் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி அந்த கூட்டமைப்பு கூறுகையில் மொத்தமாக காஸாப்பகுதியில் ஐநாவைச் சார்ந்த வெறும் நான்கு உணவுக்கிடங்குகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுப்பற்றி, காஸா நகரத்துக்கான ஐநாவின் மனிதாபிமான மற்றும் புனரமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்ரிட் காக் நேற்று (டிச.10) பத்திரிகையாளர்களிடம் ரகசியமாக கூறியதாவது:

காஸாவில் பொதுமக்கள் உயிர்வாழும் சுழல் முற்றிலும் அழிவுகரமானதாக உள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது அங்கு நிலைமையை இன்னும் மோசமானதாக ஆக்கியுள்ளது. இதனால், ஐநா உள்பட பல உதவி நிறுவனங்கள் காஸா மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்க முடியாத சூழலில் உள்ளதாக, அவர் கூறினார்.

மேலும், தான் உள்பட பல்வேறு ஐநா அதிகாரிகளும் வடக்கு காஸா பகுதிகளில் கான்வாய்கள் மற்றும் வணிகப்பொருட்களை அனுமதிக்கவும், தெற்கில் எகிப்து நாட்டிலிருந்து ரஃபா எல்லை மீண்டும் திறக்கவும் அதன் வழியாக இருமுறை பயன்படக்கூடிய பொருட்களை அனுமதிக்கவும் தொடர்ந்து பலமுறை இஸ்ரேலிடம் கேட்டுக்கொண்டிருப்பதாக சிக்ரிட் காக் கூறியுள்ளார்.

காக்கின் கருத்துக்களுக்கு தங்களிடம் எந்தவொரு பதிலும் இல்லை என்று இஸ்ரேலின் ஐ.நா தூதர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இஸ்ரேலின் தாக்குதல்களினால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் பாலஸ்தீனர்களுக்கு, தற்போது உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியங்களும் தடுக்கப்பட்டிருப்பது, அம்மக்களுக்கு இஸ்ரேலால் எற்பட்டுவரும் துயரத்தை இன்னமும் அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com