காலமானார்: ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன்

ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன் காலமானார்
ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன்
ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன்


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால முன்னோடியும்  மூத்த தணிக்கையாளருமான சி.என். ஜெயச்சந்திரன் (92), இன்று (19.01.2024) காலை 8  மணியளவில் பெங்களூரில் காலமானார்.

பெங்களூரில் அவருடைய பேரன் வீட்டில் தங்கியிருந்த அவர், முதுமை காரணமாகக்  காலமானார். அவருடைய உடல் சென்னை கொண்டுவரப்படுகிறது.

சென்னை, அம்பத்தூர், திருவேங்கட நகரிலுள்ள இவருடைய சகோதரர்  கார்ல்  மார்க்ஸின் மகள் இல்லத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில்  இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால முன்னோடிகளில் ஒருவர்  ஆடிட்டர் சி.என். ஜெயச்சந்திரன். இவர் மோகன் குமாரமங்கலம், கே.பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், வழக்கறிஞர் என்.டி. வானமாமலை போன்றோருடன் இணைந்து பணியாற்றியவர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இவரும் மறைந்த இந்திய கம்யூ. தலைவர் தா. பாண்டியனும்  வகுப்புத் தோழர்கள். மறைந்த கோபிச்செட்டிபாளையம் சி. சுப்பிரமணியமும் இவரும் இணைந்துதான் தென்னக ஆய்வு மையத்தைத் தொடக்கினர்.

ஜெயச்சந்திரனின் மறைவு பற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல்  செய்தியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் மற்றும் அதன்  இணைப்பு அமைப்புகளின் நீண்ட கால தணிக்கையாளராகப் பணியாற்றியவர். இளம் தணிக்கையாளர்களை உருவாக்கியதில் குறிப்பிடத்தக்கவர் என்று தெரிவித்துள்ளார்.

ஜெயச்சந்திரனின் மறைவு பெரும் வேதனையளிக்கிறது. அவர் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தணிக்கையாளர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்றும் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com