மாணவி ஸ்ரீமதி மரணம்: விசாரணைக்கு பள்ளி தாளாளர் உள்பட மூவர் ஆஜர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
மாணவி ஸ்ரீமதி மரணம்:  விசாரணைக்கு பள்ளி தாளாளர் உள்பட மூவர் ஆஜர்
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர், செயலாளர் மற்றும் பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான மாணவி ஸ்ரீமதி 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13-ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, ஜூலை 17-ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது.

அப்போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அதில், பள்ளி பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், பள்ளிகளில் பெரும்பாலான பொருட்கள் சூறையாடப்பட்டது. இதனால், அப்பகுதியில் பெரும் அசாதாரண நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மாணவி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரி பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலை தூண்டுதல், பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தனர்.

இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்டம் முதன்மை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் 1,152 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில் மாணவி ஸ்ரீமதியின் கொலைக்கான காரணம் எதுவும் இல்லை. தற்கொலைக்கான முகாந்திரமே உள்ளது. பள்ளி தாளாளர், செயலாளர், ஆசிரியர்களின் துன்புறுத்தல் எதுவும் இல்லை என சாட்சிகள் கூறியதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் மாணவி இறப்புக்கு காரணம் இல்லை என சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டை உலுக்கிய இச்சம்பவம், இன்று காற்றில் தூவப்பட்ட பொறி போல இந்த வழக்கு காணாமல் போய் உள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தில் அவரது உடல் புதைக்கப்பட்ட மயானத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு, மணிமண்டபத்தில் "உன்னோடு சேர்ந்து நீதியும் உள்ளே புதைந்து உள்ளது.." என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு, கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று (மே 14) விசாரணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான பள்ளி தாளாளர், செயலாளர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோரைக் கண்டு, ஸ்ரீமதியின் தாயார், நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்.

வழக்கினை விசாரித்த நீதிபதி, வழக்கினை மே 28-ஆம் தேதி ஒத்தி வைப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com