/

பட்டப்பகலில் பீரோ பட்டறை உரிமையாளர் வெட்டிக் கொலை

சேலம் அருகே பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் பீரோ பட்டறை உரிமையாளர் ரௌடி கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

News image
கொலையுண்ட பீரோ பட்டறை உரிமையாளர் சரவணன்
Updated On :8 நவம்பர் 2024, 6:13 am

DIN

சேலம்: சேலம் அருகே பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் பீரோ பட்டறை உரிமையாளர் ரௌடி கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு பதட்டம் நிலவி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலம், சுக்கம்பட்டி அருகே உள்ள வெள்ளியம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பட்டறை சரவணன்(46). இவரது

மனைவி வனிதா (40). இவர்கள் வெள்ளாளம்குண்டத்தில் பீரோ பட்டறை நடத்தி வருகின்றனர். சரவணன் மீது காரிப்பட்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு கணவனும், மனைவியும் வெள்ளாளம்குண்டத்தில் உள்ள பட்டறையிலேயே தங்கிவிட்டு வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு தங்களுடைய சரக்கு ஆட்டோவில் வெள்ளியம்பட்டி வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் காலை 8.15 மணிக்கு வீட்டில் இருந்து வெள்ளாளம்குண்டம் பட்டறைக்கு செல்வதற்காக சரக்கு ஆட்டோவில் வந்துள்ளனர். சரக்கு ஆட்டோ அரூர் மெயின் ரோடு பனங்காடு பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த போது இவர்களின் வாகனத்திற்கு பின்னால் சொகுசு காரில் வந்த மர்ம கும்பல் சரக்கு ஆட்டோவை மறித்தனர்.

பின்னர் ஆட்டோவில் இருந்த பட்டறை சரவணனை சாலையில் இழுத்து போட்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காரிப்பட்டி போலீசார் சரவணன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிரபல ரௌடி கரட்டூர் ஆனந்தனின் ஆள்கள் இந்த கொலையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலையை அடுத்து மேட்டுப்பட்டி, சுக்கம்பட்டி, வெள்ளாளம்குண்டம் ஆகிய பகுதியில் பதட்டம் நிலவுவதால் அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.