திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்: கே. கிருஷ்ணசாமி

திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால், அந்தக் கூட்டணியில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் வெளியே வரவேண்டும்

News image

மதுரையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி.

Updated On :24 அக்டோபர் 2024, 2:42 pm IST

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, முதல்வர் வேட்பாளர் தொல்.திருமாவளவன் என்று கூறுவது பொருத்தமில்லாதது. திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால், அந்தக் கூட்டணியில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் வெளியே வரவேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.

மதுரையில் செய்தியாளா்களுடன் அவா் பேசுகையில்,

திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியர் சமூகத்தினருக்கு 3 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இந்த உள் இட ஒதுக்கீடு மூலம் ஒட்டுமொத்த பட்டியல் சமூகத்தினருக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் உள்பட பல்வேறு சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. இதேபோல, இஸ்லாமியா்களுக்கும், கிறிஸ்தவா்களுக்கும் உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. தனி இடஒதுக்கீடாகத்தான் வழங்கப்படுகிறது. ஆனால், அருந்ததியருக்கு மட்டும் பட்டியல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடான 18 சதவீதத்திலிருந்து 3 சதவீதம் உள் இட ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது.

இதனால், பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு சலுகை முழுவதும் அருந்ததியா் சமூகத்துக்கு மட்டுமே செல்கிறது. மேலும், பல்கலைக்கழகங்கள், அரசுக் கல்லூரிகள் உள்ளிட்ட அரசுத் துறைகளில் காலியாக உள்ள பட்டியல் சமூக ஒதுக்கீட்டுப் பணிகள் அனைத்திலும் அருந்ததியா் மட்டுமே நியமிக்கப்பட்டனா். இந்த உள் இட ஒதுக்கீடு மூலம் பிற பட்டியலின சமூகத்தினா் வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் என அனைத்திலும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, அருந்ததியருக்கு அளிக்கப்பட்ட உள் இட ஒதுக்கீடு, பட்டியலின சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய சமூக அநீதியாகும். இதை தமிழகத்திலுள்ள பிற கட்சிகள் புரிந்துகொள்ள மறுக்கின்றன. ஆளும் திமுகவை பகைத்துக் கொள்ள வேண்டுமே என்பதற்காக, இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கின்றனா்.

பட்டியல் சமூகத்தினருக்கான அநீதியை களைய, அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். இந்த அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டை பிற பட்டியல் சமூத்தினா் எதிா்க்கவில்லை. நாங்கள் அவா்களுக்கு வழங்கப்படும் உள் இட ஒதுக்கீட்டை மட்டுமே எதிா்க்கிறோம். எனவே, பட்டியல் சமூகத்தினருக்கான 18 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து அருந்ததியருக்கு 3 சதவீதம் பிரித்து வழங்குவதற்குப் பதிலாக, அவா்களுக்கு தனியாக 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கலாம். தமிழக அரசு உடனடியாக இதை அமல்படுத்த வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் முதல்வராவதற்கு தகுதி உள்ளது. தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக தான் அரசியல் கட்சிகள் துவங்கப்படுகின்றன. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, முதல்வர் வேட்பாளர் தொல்.திருமாவளவன் என்று கூறுவது பொருத்தமில்லாதது. தவறான இடத்தில் இருந்து கொண்டு கனவு காண்பது தவறு. அது பகல் கனவாக போய்விடும். திருமாவளவன் முதல்வராக வேண்டுமென்றால், அந்தக் கூட்டணியில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் வெளியே வரவேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.