கோவை: ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து கோவை மெட்ரோ திட்டத்தினை துரிதப்படுத்துமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மக்கள்தொகை அதிகரிப்பினாலும், வாகன நெரிசலாலும் நகரத்தின் முன்னேற்றத்திற்காகவும் கோயம்புத்தூரில் மெட்ரோ திட்டம் நடைமுறைக்கு வருவது மிகவும் அவசியமானது.
எனினும், கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னரும் மெட்ரோ திட்ட நடைமுறையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிக்க |தீபாவளி: சென்னை-மதுரைக்கு ஆம்னி பேருந்து கட்டணம் ரூ.4,900!
இந்த நிலையில், ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் தமிழக அரசு சமர்பிக்காததே தாமத்திற்கு காரணம் என தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
எனவே, கோவை நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வேண்டிய ஆவணங்களை சமர்ப்பித்து, கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்தை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.