பெண் தொகுப்பாளினி உடன் ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்துள்ளார்.
மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்ட ரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். இதற்குக் காரணம் சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுகிறது.
சமையல் நன்கு தெரிந்த குக்குகள், சமையம் தெரியாத கோமாளிகளுடன் சேர்ந்து சமைக்கும்போது நடக்கும் கலாட்டாக்களைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இந்த புதிய சீசனில் சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன் நடுவர்களாக பங்கேற்று உள்ளனர். ரக்ஷன் மற்றும் மணிமேகலை ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக உள்ளனர். குக் வித் கோமாளி 5-வது சீசனில் பிரியங்கா தேஷ்பாண்டே குக்காக பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில், தொகுப்பாளினி மணிமேகலைக்கும், பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மணிமேகலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன். நான் என்னுடைய 100% கடின உழைப்பையும், நேர்மை மற்றும் அர்ப்பணிப்பையும் இந்நிகழ்ச்சிக்காக கொடுத்து வந்தேன். ஆனால் சுயமரியாதையைவிட முக்கியமானது வேறு எதுவுமில்லை. நான் அதை வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் கடைபிடித்து வருகிறேன். புகழ், பணம், வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும், சுயமரியாதை என்று வரும்போது மற்றதெல்லாம் எனக்கு இரண்டாம்பட்சம்தான். அதனால்தான் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன்.
இந்த சீசன் முழுவதும் தொகுப்பாளினி ஒருவர், அவர் சமையல் கலைஞர் என்பதை மறந்து, தொகுப்பாளர் வேலையை செய்யவிடாமல் தடுப்பதும், எனது வேலையில் ஆதிக்கம் செலுத்துவதும், எனது வேலையில் குறுக்கீடு செய்வதுமாக இருந்து வந்தார்.
நான் தொகுப்பாளராக 15 ஆண்டுகளாக இருக்கிறேன். ஏற்ற, இறக்கங்கள் வரும், ஆனால், இதுபோன்று முதிர்ச்சியற்றவாறு நடந்துகொள்வதை என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தது இல்லை.
எனக்கு இதை செய்த நபருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்களைத் துன்பப்படுத்தாமல் இருக்க, கடவுள் அவருக்கு நிறைய நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும். அனைவருக்கும் நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.