செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற ஆடவர், மகளிர் அணிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹங்கேரியில் நடைபெற்று வந்த 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி இரண்டுமே தங்கம் வென்று அசத்தின.
செஸ் ஒலிம்பியாட் போட்டி வரலாற்றில் இந்திய அணிகள் தங்கம் வென்றுள்ளது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன், இந்திய ஆடவா் அணி இரு முறையும் (2014, 2022), மகளிா் அணி ஒரு முறையும் (2022) வெண்கலம் பதக்கம் வென்றுள்ளன.
சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: இரண்டு தங்கப் பதக்கங்கள், ஒரு நாடு. 2024 ஆம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதலிடம் பெற்று அசத்திய ஆடவர், மகளிர் அணிகளுக்கு எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த முறை சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.