
கேரளத்தில் செல்போன் மூலம் தலாக் கூறியதாக மனைவி அளித்த புகாரின் பேரில் அவரது கணவரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலப்புரம் மாவட்டத்தின் கொண்டோட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவனைப் பிரிந்து சுமார் ஒரு ஆண்டாக தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடுமையால் இவர் பிரிந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணுடைய தந்தையின் செல்போன் மூலம் பேசிய அவரது கணவர், மூன்று முறை தலாக் கூறி தங்களுடைய திருமண வாழ்க்கை முடிந்து விட்டதாகக் கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து, அவரது கணவன் மீது இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது கணவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த நபர் தலாக் கூறிய அழைப்பானது செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதை பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க:தட்கல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நேரம் மாற்றப்படவில்லை: ஐஆர்சிடிசி விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.