அரசு போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாகாது: அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார்மயமாகாது என கோவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
போக்குவரத்து துறை  அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்
Published on
Updated on
2 min read

கோவை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஒருபோதும் தனியார்மயமாகாது என கோவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

கோவை, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வெள்ளிக்கிழமை 13 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 41 போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கி, புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, விழாவில் பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பொதுமக்கள் பேருந்தில் மகிழ்ச்சியாக பயணம் செய்ய கடுமையாக உழைத்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட கொண்டாட்டத்தை மறந்து மக்களுக்காக உழைத்து வருகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் அரசு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்துக் கழகம் பெற்றுள்ளது. இதற்கு இடையே போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கப் போவதாக சிலர் வதந்தியையும் பரப்பி வருகிறார்கள். அது ஒரு நாளும் நடைபெறாது. அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 487 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது. 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. 1000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் விடியல் திட்டத்திற்கும், மாணவ -மாணவிகளின் இலவச பேருந்து சேவைக்கு போதிய நிதிகளை ஒதுக்கி சிறப்பாக செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ரூ. ஆயிரம் கோடி போக்குவரத்துத் துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இதற்கு முன்பு பழைய பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இப்போது 11,000 புதிய பேருந்துகள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நலிவடைந்த நிலையில் இருந்த அரசு போக்குவரத்துக் கழகம் இன்று புத்துயிர் பெற்று வருகிறது. எனவே தனியார்மயம் என்ற தகவல் தவறானது. இப்போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் பெண்களும் நடத்துநர்களாக பணியில் செயல்பட்டு வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு உயர பிரச்னை ஏற்பட்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் 10 சென்டி மீட்டர் உயரத்தை குறைத்து அவர்களும் பணியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கினார். எனவே தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் பொதுத்துறை நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும் என கூறினார்.

விழாவில், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் செல்வம், மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, ஏர்போர்ட் ராஜேந்திரன், எல்பிஎப் மண்டல தலைவர் பெரியசாமி, பொருளாளர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com