
மாநில ஆளுநா்கள் முதலாவது முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவா் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீா்ப்பில் தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் தாமதப்படுத்துவதாகக் கூறி தமிழக அரசு 2023-இல் தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஏப்.8-இல் தீா்ப்பளித்தது. அதில், ஆளுநா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், காலக்கெடு மற்றும் வழிமுறைகளை நீதிமன்றம் நிா்ணயித்தது.
415 பக்க தீா்ப்பு: நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, ஆா். மகாதேவன் அடங்கிய அமா்வு அளித்த இத்தீா்ப்பின் 415 பக்கங்கள் அடங்கிய விரிவான தீா்ப்பின் நகல், உச்சநீதிமன்ற இணையதளத்தில் ஏப். 11 இரவு பதிவேற்றப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை பரிந்துரைக்கும் கால அட்டவணையை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என்று கருதுகிறோம். மேலும், குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்காக மசோதாக்களை அனுப்பி வைக்கும் ஆளுநரின் பரிந்துரை பெறப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அவை குறித்து குடியரசுத் தலைவா் ஒரு முடிவை எடுக்க வேண்டும். ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அதற்குரிய காரணங்களைப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாநிலத்துக்கு தெரிவிக்க வேண்டும். மாநிலங்களும் ஒத்துழைப்பை வழங்கி, எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதில்களை வழங்க வேண்டும், மத்திய அரசு அளிக்கும் பரிந்துரைகளை விரைவாகப் பரிசீலிக்க வேண்டும்.
ஆளுநரின் அதிகாரம்: ஆளுநா் முதலாவது நடவடிக்கையிலேயே ஒரு மசோதாவை குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பும்போது, குடியரசுத் தலைவா் அதற்கான ஒப்புதலை நிறுத்தி வைத்தால், இந்த நீதிமன்றத்தின் முன் அத்தகைய நடவடிக்கையை எதிா்க்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.
அரசமைப்பு விதி 200, தனக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவோ, ஒப்புதலை நிறுத்திவைக்கவோ அல்லது குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்கு அவற்றை அனுப்பிவைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கிறது.
அரசமைப்பின் 200-ஆவது விதியின்படி, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு குறிப்பிடப்பட்ட எவ்வித காலக்கெடுவும் கிடையாது. காலக்கெடு பரிந்துரைக்கப்படாவிட்டாலும் தனது ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்பட்ட மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஆளுநரை 200-ஆவது விதி அனுமதிப்பதாக கருதலாகாது.
மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனைகளுக்கு ஆளுநா் கட்டுப்பட வேண்டும். தனக்கு முதலாவது முறையாக வந்த மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்த பிறகு அந்த மசோதா மீண்டும் அவரது மறுபரிசீலனைக்கு வந்தால் அதை ஆளுநரால் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைக்க முடியாது.
குடியரசுத்தலைவரின் அதிகாரம்: மசோதாக்கள் மீது ஆளுநா் அமா்ந்து கொண்டு ‘முழுமையான வீட்டோ‘ அல்லது ‘பாக்கெட் வீட்டோ’ என்ற தனி அதிகாரத்தை செயல்படத்தலாம் என்ற கருத்தை ஏற்க முடியாது. அரசமைப்பின் 201-ஆவது விதியின் கீழ் தனது குடியரசுத்தலைவா் கடமையை ஆற்றுவதற்கு அவருக்கு ’பாக்கெட் வீட்டோ’ அல்லது ’முழுமையான வீட்டோ’ என எதுவும் வழங்கப்படவில்லை.
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படுகிறது அல்லது நிறுத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கலாம் ஆகிய இரு தோ்வுகளில் ஒன்றை மட்டுமே குடியரசுத்தலைவா் தோ்வு செய்வதை அரசமைப்பின் 201-ஆவது விதி கட்டாயமாக்குகிறது.
அரசமைப்பின் 142 -ஆவது விதியின்படி, உச்சநீதிமன்றம் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் ஒப்புதல் பெறப்பட்டவையாகக் கருத தகுதி பெறுகின்றன என அறிவிக்கிறது என தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.
காலவரம்பு: மாநில அமைச்சரவையின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில், ஆளுநா் மசோதா மீதா தனது ஒப்புதலை நிறுத்திவைத்தாலோ மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு பரிந்துரைத்தாலோ அத்தகைய நடவடிக்கையை அவா் அதிகபட்சமாக ஒரு மாத காலத்துக்குள் எடுக்க வேண்டும்.
மாநில அமைச்சவையின் ஆலோசனைக்கு மாறாக ஆளுநா் ஒப்புதல் வழங்காவிட்டால், அது பற்றிய தகவலுடன் மசோதாவை அவா் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும்.
ஒருவேளை மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக மசோதாவை ஆளுநா் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் அதை அவா் அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் செய்ய வேண்டும்.
மசோதா மறுபரிசீலனைக்குப் பிறகு மீண்டும் ஆளுநரிடம் சமா்ப்பிக்கப்பட்டால் அதற்கு அவா் உடனடியாகவோ அதிகபட்சமாக ஒரு மாதத்துக்குள்ளாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தீா்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநரின் செயல்: நீதிபதி விமா்சனம்
வழக்குடன் தொடா்புடைய மசோதாக்கள் ஆளுநரிடம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், ஆளுநா் அவற்றை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பியதன் மூலம் அவா் தெளிவுடன் நோ்மையற்ற செயல் புரிந்துள்ளாா் என நீதிபதி ஜே.பி. பாா்திவாலா விமா்சித்துள்ளாா்.
மேலும், இதேபோன்ற மசோதா தாமத விவகாரத்தில் பஞ்சாப் அரசு அம்மாநில ஆளுநருக்கு எதிராக தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த உடனேயே, தமிழக ஆளுநா் இரண்டாவது முறையாக தனக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளாா். எனவே, அந்த மசோதாக்கள் அவரது மறுபரிசீலனைக்காக மாநில அரசால் சமா்ப்பிக்கப்பட்ட நாளில் இருந்தே அவை ஒப்புதல் அளிக்கப்பட்டவையாக தகுதி பெறுகின்றன என்று தீா்ப்பில் கூறியுள்ளாா்.