
புதுச்சேரி தீயணைப்புத் துறை அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸார் மோப்பநாயுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தீயணைப்புத் துறை தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் போன் மூலம் ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தாங்களாகவே அலுவலகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
இந்த நிலையில், மீண்டும் அலுவலக தொலைபேசியை தொடர்புகொண்ட மர்ம நபர், ஒரு முறை சொன்னால் புரியதா, வெடிகுண்டை தீயணைப்பு வண்டியில் வைத்துள்ளேன் என மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறை தலைமை அலுவலகத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாயுடன் வந்து தீயணைப்பு நிலையத்தை முழுமையாக சோதனையிட்டனர். தீயணைப்பு நிலைய அலுவலகம், அதிகாரிகள் அறை, தீயணைப்பு வீரர்களின் அறைகள், தீயணைப்பு வண்டிகள் அனைத்திலும் முழுமையாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் ஏதும் சிக்கவில்லை. இதனால் புரளி என தெரியவந்தது. இதன்பின் தீயணைப்பு வீரர்கள் நிம்மதியடைந்தனர். தீயணைப்பு துறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.