தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: விசாரணை பிப். 19-க்கு மாற்றம்!

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு தொடர்பாக...
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Published on
Updated on
2 min read

தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பிப். 19 ஆம் தேதிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர், 2 தேர்தல் ஆணையர்கள் இடம்பெற்றிருப்பர். தேர்தல் ஆணையா்களை மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில், குடியரசுத் தலைவர் நியமனம் செய்து வந்தார். இரு தேர்தல் ஆணையர்களில் பணி மூப்பு பெற்றவர், தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு வந்தார்.

இந்த நடைமுறைக்கு எதிராக ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், தலைமை தோ்தல் ஆணையா், 2 தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோா் அடங்கிய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

தோ்தல் ஆணையா்கள் நியமனம் தொடா்பாக நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்படுகிற வரை, இந்தக் குழு மூலமே தோ்தல் ஆணையா்கள் தோ்வு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டுவந்த மத்திய அரசு, பிரதமா் தலைமையிலான தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவில் ஒரு மத்திய அமைச்சா் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெறும் வகையில் மாற்றியமைத்து, காலியாக இருந்த 2 தோ்தல் ஆணையா் பணியிடங்களையும் நிரப்பியது.

இதற்கு எதிராக ஜனநாய சீா்திருத்தத்துக்கான சங்கம், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த வழக்கு, அரசமைப்புச் சட்டப் பிரிவு 141-இன் கீழ் நீதிமன்றம் தெரிவிக்கும் அறிவுறுத்தலுக்கும், நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்துக்கும் இடைப்பட்ட விவகாரம். இதில் எது மேலானது என்பதை ஆராய வேண்டும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனா்.

இதையும் படிக்க: ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் முன்வைத்த 12 கேள்விகள்!

இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஆஜரான ஜனநாய சீா்திருத்தத்துக்கான சங்கம் தரப்பு வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘ தற்போது தலைமை தோ்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி, அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையா் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் விரைந்து தீா்வளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல், ‘இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் மனுக்களை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு விசாரணைக்குப் பட்டியலிட்டு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை பிப். 19 ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்து மீண்டும் ஒத்திவைத்துள்ளது.

தற்போது தலைமை தோ்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிப். 19 ஆம் தேதி இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com