சென்னை: அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டாா். பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டார். அவரது செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இறுதி நாளான சனிக்கிழமை(ஜன.11) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
திட்டமிட்டு விதிமீறலில் ஈடுபடுகிறார் ஆளுநர்
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ஆளுநரின் செயலில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. அரசு தயாரித்துத் தரும் உரையை வாசிக்க வேண்டிய கடமை ஆளுநருக்கு உள்ளது. ஆனால் திட்டமிட்டு ஆளுநர் விதிமீறலில் ஈடுபடுவதிலேயே ஆளுநர் குறியாக இருக்கிறார். அபத்தமான காரணங்களை சொல்லி உரையை படிக்க மறுத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் ஆளுநர்
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டார். சட்டப்பேரவை மாண்புகளை மதிக்காமல் மக்களின் எண்ணங்களுக்கும் மதிப்பு தராமல் பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்த துணிந்ததன் மூலம் ஆளுநருக்கு இழுக்கு. இதுபோன்று அரசியல் உள்நோக்கத்தோடு ஆளுநர் செய்வது இந்த மன்றம் காணதது. இனியும் காண கூடாது. தமிழகம் வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என தெரிகிறது. மேலும் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
தீண்டாமையை தகர்த்து நூற்றாண்டை கண்டுள்ளோம்
எங்களை புறக்கணிப்பதாக நினைக்கும் ஆளுநரின் நடவடிக்கை குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஏனெனில், புறக்கணிப்புகள், அவமானங்கள் ஒடுக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிராக உதயமானதுதான் திமுக. எங்கள் இயக்கம் மீது கடைபிடிக்கப்பட்ட தீண்டாமையை தகர்த்துதான் நூற்றாண்டை கண்டிடுள்ளோம்.
அஞ்சுகிறார்கள்
தமிழக மக்கள் நேரடியாக பயனடையும் வகையில் திட்டங்களை தீட்டும் ஆட்சிதான் திமுக ஆட்சி. எங்களின் சாதனை திட்டங்களை பட்டியலிட்டால் எதிர்க்கட்சிகள் அதிகமாகவே வேதனை அடைவார்கள். திராவிட மாடல் என்று சொன்னால் சிலருக்கு வயிறு எறிகிறது, திராவிட மாடல் என்றால் சிலர் அஞ்சுகிறார்கள்.
சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம், விளிம்பு நிலை மக்களின் நலன், தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரத்தில் பங்கு, ரத்த பேதமில்லை, பாலின பேதமில்லை, தொழில் வளர்ச்சி, கூட்டாட்சி கருத்தியல், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம், தமிழுக்கு உரிய இடம், அனைத்து தேசிய இனங்களுக்கும் சம உரிமை, சமூகவளர்ச்சி குறியீடு என அனைத்திலும் முதன்மை இடம் இவைகள்தான் திராவிட மாடல் அரசின் உள்ளடக்கம் என்றார்.
விடியல் அரசு
விடியல் பயண திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்றவற்றை சுட்டிக் காட்டி இவற்றை எல்லாம் அனுபவிக்கும் மக்கள் தான் விடியல் அரசின் சாட்சி. அவர்களுக்காகத் தான் விடியல் அரசே தவிர இருளில் இருக்கும் எதிர்க்கட்சிகளுகாக அல்ல என்றார்.
மாநிலத்தில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது
தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. ரௌடிசம் செய்வோர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் ரௌடிகள் தொடர்புடைய சாதிய கொலை சம்பவங்கள் குறைந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு பராமரிப்பால் தமிழகம் முழுவதும் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. குற்றங்கள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.
12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்து
சட்டம்-ஒழுங்கு மாநிலத்தில் சீராக இருப்பதாகவும், 3 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காக 12 ஆயிரம் கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்த முதல்வர், இன்னும் வரும் கோரிக்கைகளை நிறைவேற்றும் கருணை இருந்தாலும் அதற்கான நிதி இல்லை என்று மாநில நிதி நிலைமை குறித்து பேசினார்.
மத்திய அரசுக்கு எதிராக அதிமுகவினர் கருப்புச்சட்டை அணியாதது ஏன்?
தமிழக சட்டப்பேரவையின் மாண்பை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநர், வஞ்சிக்கும் மத்திய அரசு,புதிய கல்விக் கொள்கை, யுஜிசி விதிகள் திருத்தத்தால் கல்வியை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து கருப்புச் சட்டை போராட்டம் நடத்தியிருந்தால் பாராட்டி, வரவேற்றிருப்பேன், அதைவிடுத்து இவர்கள் கருப்புச் சட்டை போராட்டம் நடத்திய காரணம் சிரிப்பு வரவழைக்கிறது என தெரிவித்தார்.
1 லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி
நான் அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக இருப்பதாக சிலர் என்னை விமர்சனம் செய்கிறார்கள். என்னை சர்வாதிகாரி என்று யாரும் சொல்லமாட்டார்கள். அதுதான் எனது இயல்பு. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளும் போராட்டம் நடத்தலாம் என்று சொல்லுபவன் நான். போராடுவது தவறு இல்லை. போராட்டம் நடத்தவேண்டிய இடத்தில் நடத்தினால் எந்த தவறும் இல்லை. ஆட்சிக்கு வந்ததில் இருந்து 1 லட்சம் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளோம் என்றார்.
டங்க்ஸ்டன் திட்டம் வராது
டங்க்ஸ்டன் திட்டம் தமிழகத்தில் வராது. மீறி வந்தால் நான் முதல்வர் பதவியிலேயே இருக்க மாட்டேன் என்று ஏற்கெனவே சட்டப்பேரவையில் கூறியிருந்தேன். அதையும் மீறி சிலர் இதில் அரசியல் செய்து குளிர் காய நினைக்கிறார்கள் என்றார்.
நிச்சயம் 7 ஆவது முறையாக ஆட்சியமைப்போம்
சமூக சீர்திருத்த இயக்கமாக உருவாகி, அரசியல் கட்சியாக மாறி 6 ஆவது முறையாக ஆட்சியமைத்த வரலாறு திமுகவிற்கு மட்டுமே உண்டு. நிச்சயமாக சொல்கிறேன் 7 ஆவது முறையாகவும் ஆட்சியமைத்து, மக்கள் ஏற்றம் காணும் அரசாக திமுக அரசு அமையும் என்றார்.
பெண்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேறியது
தமிழக பேரவையில் வெள்ளிக்கிழமை 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், தவறான நோக்கத்துடன் பெண்களைப் பின்தொடா்ந்து சென்றால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்கள் சனிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.