காவலர்கள் முன்பே மகளை ஆணவக் கொலை செய்த தந்தை கைது!

மத்தியப் பிரதேசத்தில் திருமணத்திற்கு மறுத்த பெண் தந்தையால் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றி...
கைது செய்யப்பட்ட தந்தை மஹேஷ் குர்ஜார் மற்றும் கொலை செய்யப்பட்ட அவரது மகளான தணு குர்ஜார்
கைது செய்யப்பட்ட தந்தை மஹேஷ் குர்ஜார் மற்றும் கொலை செய்யப்பட்ட அவரது மகளான தணு குர்ஜார்
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் திருமணம் செய்ய மறுத்த மகளை காவலர்கள் முன்னிலையில் அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.

குவாலியர் மாவட்டம் கோலா கா மந்திர் எனும் பகுதியைச் சேர்ந்த தணு குர்ஜார் (வயது 20) எனும் பெண் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த விக்கி மாவாய் எனும் நபரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தந்தை மஹேஷ் குர்ஜார் அந்த பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் வருகின்ற ஜன.18 அன்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த திருமணத்திற்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே இருந்த நிலையில் நேற்று (ஜன.14) அந்த பெண் தனது சமூக ஊடகத்தில் 52 நொடி விடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். அந்த விடியோவில், தான் விக்கியை காதலிப்பதாகவும், தனது குடும்பத்தினர் தன்னை வற்புறுத்தி இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு தனது தந்தை மஹேஷ்தான் காரணம் எனவும் அவர் கூறியிருந்தார்.

அந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, நேற்று இரவு 9 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற காவல் துறை அதிகாரிகள் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அப்பகுதி பஞ்சாயத்து அதிகாரிகள் முன்னிலையில் இருத்தரப்புக்கும் சமரசம் செய்ய முற்பட்டனர். அப்போது, அந்த பெண் தனது உயிரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவரது வீட்டில் தங்குவதற்கு மறுத்து அரசின் பெண்கள் நலக்கூடத்தில் சேர விரும்புவதாக கூறியுள்ளார்.

இதையும் படிக்க: திருக்குறள் தமிழ்க் கலாசாரம், பாரம்பரியத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது! -பிரதமர் மோடி

இதனைத் தொடர்ந்து, அவரது தந்தை தனது மகளிடம் பேச வேண்டும் எனக் கூறி அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர் தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் தணுவின் நெஞ்சில் சுட்டுள்ளார். அவருடன் உறவினரான ராஹுல் என்பவரும் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அந்த பெண்ணின் உடலில் பல இடங்களில் குண்டுகள் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இந்நிலையில், குற்றவாளிகள் இருவரும் காவல்துறையினர் மற்றும் தங்களது குடும்பத்தினரை நோக்கி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். இதில், மஹேஷ் காவல் துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட, அவரது உறவினரான ராஹுல் தப்பித்து சென்றுள்ளார்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய மற்றொரு குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த பெண்ணின் சமூக ஊடக கணக்குகளை சோதனை செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணத்திற்கு சில நாள்கள் மட்டுமே இருந்த நிலையில், இளம் பெண் ஒருவர் தனது தந்தையால் ஆணவக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com