காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கூடாது: அண்ணாமலை

சென்னை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்கக்கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.
annamalai
அண்ணாமலை(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

சென்னை அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு வழங்கக்கூடாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்திற்கு உணவு தயாரிக்கும் பணியினை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி முயற்சி செய்து வருகிறது.

இதற்கு பாமக கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,

'சென்னையில் உள்ள சுமார் 350- க்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 65,000- க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த முடிவைக் கைவிட்டனர்.

தற்போது, மீண்டும் தனியாருக்குத் தாரைவார்க்க, ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது திமுக அரசு.

அப்படி மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரைவார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?

கண்துடைப்புக்காகத் திட்டங்கள் அறிவிப்பது அல்லது தங்கள் லாப நோக்கங்களுக்காகத் திட்டங்களை மடைமாற்றுவது என, நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தொடர்ந்து அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிடவேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.