
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் அந்நாட்டின் ராணுவ மேஜர் உள்பட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தின், ஆப்கானிஸ்தான் நாட்டுடனான எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ஜன.29 நள்ளிரவு முதல் ஜன.30 அதிகாலை வரை தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தின் ராவல்பிண்டி பகுதியைச் சேர்ந்த மேஜர். ஹம்ஸா இஸ்ரார் (வயது 29) மற்றும் நசீராபாத் பகுதியைச் சேர்ந்த சிப்பாய். முஹம்மது நயீம் (26) ஆகிய இருவர் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினால் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடவடிக்கையை தற்போது கொல்லப்பட்ட மேஜர். ஹம்ஸாதான் தலைமை தாங்கியுள்ளார்.
இந்த நடவடிக்கை முடிவுற்ற பின்னர் ஏதேனும் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்று தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, அந்த இடம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இதையும் படிக்க: வனவிலங்கு பூங்காவில் புலியின் சிறுநீர் அமோக விற்பனை!
இதனைத் தொடர்ந்து, பலியான வீரர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி மரியாதை செலுத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு அண்டை நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துங்குவா மற்றும் பலோசிஸ்தான் மாகாணங்களில் போராளி குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் அந்நாட்டில் நகிழ்த்தப்பட்ட 444 பயங்கரவாத தாக்குதல்களில் சுமார் 685 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.