பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி

ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா: ரயில்வே அதிரடி
Published on
Updated on
2 min read

புதுதில்லி: ரயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

நாட்டில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் பயணம் செய்து வருகின்றனர். ஏழை எளிய, நடுத்தர மக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக ரயில்கள் விளங்குகின்றன. ரயில் பயணங்கள் போது பயணிகள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பயணிகள் ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை சோதனை முறையில் நிறுவியதன் அடிப்படையில், அதில் கிடைத்த நேர்மறையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களை பொறுத்துவதற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இந்த நடவடிக்கை பயணிகளின் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்தவும், குற்றவாளிகள், திட்டமிட்ட குற்றங்களைச் செய்யும் கும்பல்களின் மோசடிச் சம்பவங்கள் கணிசமாகக் குறையும். பயணிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக,ரயில் பெட்டியின் கதவுகளுக்கு அருகில் உள்ள பொதுவான இயக்கப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்.

ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியின் முன்னேற்றத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் சனிக்கிழமை(ஜூலை 12) ஆய்வு செய்தனர்.

ஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, வடக்கு ரயில்வேயின் ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகளில் சோதனை முறையில் நிறுவப்பட்ட கேமராக்களில் கிடைத்த நேர்மறையான விளைவுகளின் அடிப்படையில், 74 ஆயிரம் ரயில் பெட்டிகள் மற்றும் 15 ஆயிரம் லோகோமோடிவ்களில் கேமராக்களை பொறுத்துவதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

மேலும், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயில்களிலும், குறைந்த வெளிச்சம் உள்ள நிலைகளில் உயர்தர காட்சிப் பதிவுகள் கிடைக்கும் வகையில் சிறந்த உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் சிசிடிவி கேமராக்களில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 4 டோம் வகை சிசிடிவி கேமராக்களும், ஒவ்வொரு நுழைவு வழியிலும் 2 கேமராவும், ரயில் என்ஜினில் 6 கேமராக்களும் பொருத்தப்படும். இதில் ரயில் என்ஜினின் முன்புறம், பின்புறம் என இரண்டு பக்கமும் தலா 1 கேமராவும், ரயில் என்ஜினின் ஒவ்வொரு பெட்டியிலும் (முன்னும் மற்றும் பின்னும்) 1 டோம் சிசிடிவி கேமரா மற்றும் 2 மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட உள்ளன.

ரயில் பெட்டிகளில் பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்கள் நவீனமான மற்றும் எஸ்டிக்யூசி சான்றிதழ் பெற்றவையாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவே ரயில் பயணிகளின் பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், இந்த கேமராக்கள் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு உதவியாக இருக்கும். இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கல் முயற்சிகள், பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தையும், சிறந்த அனுபவத்தையும் வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாக இருக்கும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Railways to Install CCTV Cameras in Coaches to Enhance Passenger Safety

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com