

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து சிமென்ட் மூலப்பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்து கூடுதல் ஓட்டுநர் உள்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்தில் 33 பயணிகள், கேரளம் மாநிலம் கொச்சின் நோக்கி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர்.
பேருந்தை விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மேல கொண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த படையப்பா (எ) ராஜீவ்காந்தி (38) ஓட்டி வந்தார். விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த மாஸ் (21) கூடுதல் ஓட்டுநராக உடனிருந்தார்.
பேருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை மத்தூர் மேம்பாலத்தில் சென்ற போது, முன்னாள் சென்று கொண்டிருந்த சிமென்ட் மூலபொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தின் கூடுதல் ஓட்டுநர் மாஸ் உள்பட 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி மற்றும் ஏத்தாப்பூர் போலீசார், வாழப்பாடி தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் ஆம்னி பேருந்துக்கும் சிமென்ட் டேங்கர் லாரிக்கும் இடையில் சிக்கிய பேருந்து ஓட்டுநர் ராஜீவ்காந்தியை, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்ட நிலையில் உயிரிழந்தார். இரு வாகனங்களுக்கு இடையில் சிக்கியதால், இரு கால்களும் துண்டான நிலையில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவாறு என்னை காப்பாற்றுங்கள் என ஓட்டுநர் ராஜீவ் காந்தி கதறியது அங்கிருந்தோரின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.
இந்த விபத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.