முந்தைய பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து, மோசமான நிலையை அடைந்திருந்தது. அதை சரி செய்தாக வேண்டும். அடுத்து, நமக்கு மேலிருக்கக்கூடிய மத்திய அரசு அது ஒத்துழைக்காத, ஒரு ஓரவஞ்சனை அரசாக இருந்தது. இந்த இரண்டு நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டுமென்பதுதான் எனது கவலைக்கு மிக முக்கியமான காரணங்கள். இடியாப்பச் சிக்கல் என்று சொல்வார்களே, அப்படியான சூழலில்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். அதனால்தான் கவலை கொண்டவனாக நான் இருந்தேன். ஆனால், இப்போது 5 ஆண்டுகள் கடந்த நிலையில் நான் சொல்றேன்; நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்னும் சொல்லவேண்டுமென்றால் மிக, மிக, மகிழ்ச்சியாக இருக்கின்றேன். என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள். என்னுடைய இலக்கில் நான் வென்றுவிட்டேன். திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்துவிட்டது. மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.