மும்பை: மகாராஷ்டிரம் முழுவதும் நடைபெறவுள்ள நீட் மறுதேர்வை வெளிப்படையாக, சுமூகமான மற்றும் மன அழுத்தமற்ற முறையில் நடத்துவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
வினாத்தாள் கசிவு விவகாரம் காரணமாக மே 3-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) காணப்பட்ட குளறுபடிகள், மாணவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீட் மறுதேர்வை குளறுபடிகளின்றி நேர்மையாக நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மகாராஷ்டிரம் மாநில முதல்வர் ஃபட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய முதல்வர் ஃபட்னாவிஸ், தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்துத் துறைகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
அனைத்துத் தேர்வு மையங்களிலும் சிசிடிவி கேமரா முழுமையாக செயல்படுகிறது என்பதை கண்காணிப்பு அமைப்புகள் உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்க இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், தேர்வர்களின் அடையாளத்தைச் சரிபார்த்தல் மற்றும் சோதனை நடைமுறைகள் ஆகியவை மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
சமூக ஊடகங்கள் மற்றும் பிற வழிகள் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுடன் பயனுள்ள வகையில் தகவல் தொடர்பை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
தேர்வர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க, தேர்வு தொடர்பான வதந்திகள் அல்லது தவறான தகவல்களுக்கு உடனடியாகப் பதிலளித்து அவற்றை முறியடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
நீட் தேர்வுக்குத் தயாராகும் ஏராளமான மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் புணே மற்றும் லாத்தூர் ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஃபட்னாவிஸ் கேட்டுக்கொண்டார்.
"மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை, கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பிற அமைப்புகள் அனைத்தும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மேலாண்மை, தடையற்ற மின்சாரம், குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை அனைத்து மையங்களிலும் உறுதி செய்ய வேண்டும்," என்று ஃபட்னாவிஸ் கூறினார்.
மேலும், தேர்வு நாளன்று தேர்வர்கள் எந்தவித சிரமத்திற்கும் ஆளாகாத வகையில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் திறம்படச் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த கூட்டத்தின்போது, மகாராஷ்டிரத்தில் உள்ள தேர்வு மையங்களின் எண்ணிக்கை, அங்குள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வைச் சுமூகமாக நடத்துவதற்கான ஒட்டுமொத்தத் தயார்நிலைத் திட்டம் ஆகியவை குறித்து தேசியத் தேர்வுகள் முகமையின் தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் விளக்கமளித்தார்.
Summary
CM Devendra Fadnavis has directed all concerned agencies to ensure the upcoming National Eligibility-cum-Entrance Test (NEET) retest is conducted in a transparent, smooth and stress-free manner across the state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









