Enable Javscript for better performance
la.sa.ra's 'abitha' novel review!|லா. ச. ராவின் ‘அபிதா’- Dinamani

சுடச்சுட

  
  la

   

  அபிதாவை எப்போதிலிருந்து எனக்குத் தெரியும்?

  பல வருடங்களுக்கு முன்பு விகடனில் வண்ணதாசன் அகம்... புறம் எழுதிக் கொண்டிருக்கையில் தவற விடாது வாசித்துக் கொண்டிருந்தேன், அன்றைய வாரங்களில் ஓர் நாள் இப்போதைப் போலவே விடுமுறைக்காக ஊருக்குப் பிரயாணப் பட்ட நாளொன்றின் இரவில் தான் பெயரளவில் அவள் அறிமுகமானாள். கதை தெரியாது... பெயர் மட்டுமே தெரியும் என்றிருந்த நிலை.

  பிறகும் அபிதாவைப் பற்றி பலர் சிலாகித்துச் சொல்லக் கேட்க நேர்ந்தது, கடந்து போன சில புத்தகத் திருவிழாவில் அபிதாவை நான் ஏன் தேடவில்லை என்ற கேள்வி அந்தப் புத்தகத்தை நான் வாங்கும் வரை எங்கேனும் யார் மூலமாகவோ அவள் பெயரை கேட்கவோ பார்க்கவோ நேர்கையில் எல்லாம் அவ்வப்போது உள்ளுக்குள் நெருடிக் கொண்டே இருந்தது.

  பிறிதொரு நாள் டாக்டர். ருத்ரனின் தளத்திலும் அபிதாவைக் கண்ட பின்பு "அபிதா" அத்தனை அதிசயமானவளா?!, எப்படி இத்தனை பேரை வசீகரித்துக் கொள்ள முடிந்தது அவளால் எனும் ஆச்சர்யம்  அவளை வாசித்து அறிந்தபின் தீர்ந்து விட்டாலும் இப்போது வேறொரு எண்ணம் உள்ளே புரண்டு கொண்டிருக்கிறது.

  லா.ச.ரா அபிதாவைக் கொன்றிருக்க வேண்டாம் எனும் ஆதங்கம் தான் அது.

  சாவித்திரியை நினைக்கையில் மனம் துக்கத்தில் ஆழ்ந்து "இவளுக்கு என்ன தலை எழுத்து இப்படி ஒரு புருஷனை அடைய!!!" என்ற கேள்வி எழும்பத் தவறவில்லை. கணவனோடு வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து நின்றாலும் அவனது செயல்பாடுகளைப் பற்றியோ உள்ளிருக்கும் பொருந்தாத எண்ணங்களைப் பற்றியோ அவளேனும் சுட்டிக் காட்டினாலும் கூட... கேட்கக் கூடியவனைப் போல அம்பியின் பாத்திரப் படைப்பு இல்லை.

  கரடி மலையில் இருந்து ரயிலுக்கு டிக்கட் எடுக்கக்கூட கதியற்றவனாய் ஊரை விட்டு ஓடிப் போன அம்பி பிறகு பல வருடங்கள் கழித்து தன் இளமை கழிந்த பின் குழந்தையற்றுப் போன வெற்று வாழ்க்கை போரடித்துப் போகவே மனைவி சாவித்திரியை அழைத்துக் கொண்டு செல்வாக்காய் பணம் படைத்தவனாய் கரடி மலைக்கு திரும்ப வருகிறான்.

  கரடிமலைக்கு அவன் வரக் காரணம் சக்கு (சகுந்தலா), அம்பியின் பால்ய கால சகி, இதை அவன் கரடிமலையில் இருந்த காலம் வரை அவன் அவளிடமோ அன்றியும் அவள் அவனிடமோ பிரியத்தை இன்னோரன்ன சொற்களால் காட்டிக் கொண்டதாகக் காணோம். ஆனாலும் அவனது விதி அவளோடே பிணைக்கப் பட்டுளதைப் போல அவனுக்கொரு பிரமை.

  அம்பிக்கு தாழ்வுணர்ச்சி. பிறந்தது முதலே உறவுகளை அண்டி வாழ்ந்து குத்தல் பேச்சில் வறண்டு இருண்டு போன பால்யத்தில் சக்குவைக் கண்டதும் பாலாற்றில் நீந்திக் குளித்த ஆசுவாசம் அவனுக்கு, அம்மாவும் அகாலமாய் இறந்து விட சக்குவின் வீடே அவனுக்கு சகலமும் என்று ஆக்கிக் கொள்ளப் பார்த்தவனை விதி விடவில்லை போலும்.

  ஆதரவளித்த மாமன் அம்பியையும் சக்குவையும் இணைத்து திண்ணையில் வம்பு பேச அவரை இழுத்துத் தள்ளி வயிற்றோடு கால் பதிய தரையோடு அழுத்தி விட்டு அன்றைக்கு கரடி மலையை விட்டு ஓடியவன் தான் மறுபடி இன்று அவன் வரும் போது அபிதா தான் வரவேற்கிறாள்.

  அடக்கி வைக்கப் பட்ட பிரியமும் காதலும் இடம் தெரியாமல் மலர்ந்து இம்சைக்குள்ளாக்குவதைப் போல... அம்பி, அபிதாவை சக்குவென்றே நம்ப முயற்சிக்கிறான். கதையோட்டம் அம்பியின் மனவோட்டம் நம்மையும் அப்படித் தான் நம்ப வைக்கப் பிரயத்தனப்படுகிறது. ஆனாலும் பொருந்தவே இல்லை, ஒரு மனைவியாக என்னால் சாவித்திரியின் மனநிலையில் இருந்தே யோசிக்க முடிகிறது.

  மகளைப் போல எண்ண வேண்டிய ஒரு பெண்ணை, இங்கவன் தான் இழந்து போன சுவர்க்கம் மீண்டு வந்ததைப் போல நம்பிக் கொண்டு அவளைப் பற்றி காதல் கசிந்து உருகுவதாக எண்ணுவது பொருத்தமாயில்லை, ஆயினும் இது நிஜ வாழ்வில் நடக்காத சங்கதி இல்லை என்பதையும் நம்பத்தான் வேண்டும்.

  வாழ்வில் திசை மாறிப் பயணித்ததில் அம்பிக்கு என்னவோ நஷ்டம் இல்லை தான், பாவம் சக்கு அழுது அழுதே உயிரை விட்டு விடுகிறாள் இக்கதையில், எந்தக் கரடி மலை திருவேலநாதர் கோயிலில் அம்பியை தினம் தினம் காண நேர்ந்ததோ அங்கேயே அவன் ஊரை விட்டு ஓடிய பின் சக்கு தன் உயிரையும் விடுகிறாள். சும்மா இல்லை ஒரு அப்பாவிக் கணவனையும் அறியாத மகளான அபிதாவையும் அனாதைகளாக இவ்வுலகில் விட்டு விட்டு அம்பியின் பொருட்டு நிறைவேறாத அவள் ஆசையின் பொருட்டு உயிரை விடுகிறாள்.

  சக்குவின் மகள் என்றால் அம்பி அவளைத் தானும் தன் மகள் போலத் தானே எண்ணியிருக்க வேண்டும் என்ற கேள்வி வாசிக்கும் போது எழாமல் இல்லை (போதாக் குறைக்கு அவனுக்கும் சாவித்திரிக்கும் பிள்ளையில்லாக் குறை வேறு!?), ஆனால் அது நாடகத்தனம் என்றாகி விடுகிறதே, அபிதா, சக்குவின் மகளானதில் பிழை இல்லை, சக்குவாகவே தான் விட்டுப் போன சக்குவாகவே முதல் பார்வையிலேயே அம்பியின் மனதில் பதிந்து போனதால் அவனைச் சொல்லியும் குற்றமில்லை.

  வாழ்கை எப்படியெல்லாம் மனித வாழ்வைப் புரட்டிப் போடுகின்றது என்பதற்கு அபிதா ஒரு உதாரணம். அவளுக்கு இன்பமான நினைவுகள் இல்லாமல் இல்லை அப்பாவின் மறுதாரமாய் வந்த சித்தியின் தம்பி அவளுக்கொரு பிரியமான கணவனாகியிருக்கக் கூடும், எங்கே அதற்குள் தான் அம்மாவைப் போலவே இவளும் இறந்து விடுகிறாளே.

  எனக்கென்னவோ அம்பியின் அழுத்தமான பொறாமையும் அபிதா தனக்கே உரியவள் எனும் அசைக்க முடியாத வன்மமும் தான் அபிதாவை கரடி மலை உடைந்த சிற்பத்தில் தள்ளி கொன்று விட்டதோ என்ற எண்ணமே இன்னும் கூட உள்ளுக்குள் குளத்தில் தவறி விழுந்து முழுகியும் முழுகாமலும் ஒளியைச் சிதறடித்துக் கொண்டிருக்கும் வைர மோதிரம் போல ஆழ்மனதில் மின்னி மின்னி மறைந்து கொண்டிருக்கிறது.

  அபிதாவை லா.ச.ரா கொன்றிருக்கக் கூடாது. ஆனால் அவள் இறந்திருக்காவிட்டால் கதை இத்தனை பேரால் பேசப்பட்டு சிலாகிக்கப் படவும் வாய்ப்பில்லை. பத்மினி என்றொரு சினேகிதி முன்னெப்போதோ இருந்தாள் எனக்கு , அபிதாவும் அவளும் வேறு வேறல்ல, அபிதா இறந்து விட்டாள்,அவள் இன்னும் இருக்கிறாள் என்பதைத் தவிர பெரிய முரண்கள் இல்லை.

  வாழ்வியல் மனச்சிக்கல்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டிப் பார்த்து கதை எழுதினால் அந்தக் கதைகள் பெரும்பாலும் தி.ஜா வின் ‘அம்மாவந்தாளாகவோ, லா.சா.ரா வின் அபிதாவாகவோ’ இருக்கக் கூடும். வாசிப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள் இது விஷயம் இப்படித் தான் எனச் சொல்லியும் சொல்லாமலும் கதையை முடிக்கும் லாவகம் சபாஷ் வரிசை.

  நூல்- அபிதா
  ஆசிரியர் - லா.ச.ராமாமிர்தம்
  காலச் சுவடு கிளாசிக் வரிசை வெளியீடு
  விலை- ரூ 80
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai