கின்னஸ் உலக சாதனைக்காக மாஸ்டர் செஃப் சஞ்சீவ் கபூரால் கிண்டப்பட்ட ஜெயண்ட்  கிச்சடி!

கிச்சடியை தேசிய உணவாக அறிவித்து விட்டு ஐயோ பாவம்! என்று அப்படியே விட்டு விட முடியுமா என்ன?
கின்னஸ் உலக சாதனைக்காக மாஸ்டர் செஃப் சஞ்சீவ் கபூரால் கிண்டப்பட்ட ஜெயண்ட்  கிச்சடி!

கடந்த வாரத்தில் நம்ம ஊர் உப்புமாவை பலவகை காய்கறிகளைக் கலந்து கிச்சடி என்ற பெயரில் தேசிய உணவாக அறிவித்தது மத்திய அரசு. கிச்சடியை தேசிய உணவாக அறிவித்ததை யார்
வரவேற்கிறார்களோ இல்லையோ? நிச்சயமாக இந்திய இல்லத்தரசிகள் மிகக் குதூகலமாக ஏகோபித்த ஆதரவுடன் வரவேற்பார்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனென்றால் சட்டென்று சடுதியில் தயாரித்து விடக்கூடிய வகையிலான ஈஸி ரெசிப்பி என்பதால் தேசிய உணவுத் தேர்வில் கிச்சடியை அடித்துக் கொள்ள எந்த உணவும் ஈடில்லை!

கிச்சடியை தேசிய உணவாக அறிவித்து விட்டு ஐயோ பாவம்! என்று அப்படியே விட்டு விட முடியுமா என்ன? பிறகு ஏர்டெல் வாசிங் பவுடர் விளம்பரப் புகழ் மாஸ்டர் செஃப் சஞ்சீவ் கபூர் எதற்கு இருக்கிறார்? அவரை வைத்து மொத்த இந்தியாவுக்குமாகச் சேர்த்து இந்தியக் கிச்சடி கிண்டினால் உலகம் முழுக்க நமது கிச்சடி வெகு ஜோராக வழுக்கிக் கொண்டு போய்ச் சேராதா பின்னே?! அப்படியானயான முயற்சிகளில் ஒன்றாக சஞ்சீவ் கபூர் தன் கையால் கிண்டிப்போட்ட பிரமாண்ட இந்தியக் கிச்சடி, இன்று கின்னஸ் உலக சாதனைகளில் ஒன்றாகி இருப்பது நமக்கும் பெருமை என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

வேர்ல்டு ஃபுட் இந்தியா என்பது இந்தியாவில் என்றுமில்லாத வகையில் முதன்முதலாக இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட பட்ட உணவுத் திருவிழாக்களில் ஒன்று. இந்திய உணவு வகைகளுக்கு உலக நாடுகளிடையே இருக்கும் வரவேற்பு மற்றும் வியாபார வாய்ப்புகளுக்காக இந்திய அரசால் திட்டமிடப்பட்டது இந்த உணவுத் திருவிழா. கடந்த நவம்பர் 4 ஆம் தேதி இந்த உணவுத் திருவிழா நிகழ்வில் தான் சஞீவ் கபூர் தனது மகா மெகா கிச்சடியை கிண்டத் தொடங்கினார். அந்தக் கதையை நீங்களும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். நூறு கிலோவுக்கும் அதிகமான உயரதர அரிசி, பருப்பு, கம்பு, ராகி, அமராந்த் (தண்டுக்கீரை), ஃப்ரெஷ்ஷாகப் பறுத்தெடுக்கப்பட்ட புத்தம் புது காய்கறிகள் மற்றும் சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட 1000 லிட்டர் ஆர்கானிக் நெய், உள்ளிட்ட பொருட்களுடன் 7 அடி விட்டம் கொண்ட மகாப் பெரிய ராட்ஷதக் கடாயில் தயாரிக்கப்பட்டது அந்த கிச்சடி. கிட்டத்தட்ட 918 கிலோ கிச்சடி! கிச்சடி தயாரிக்க எரிபொருளாக நெருப்பைப் பயன்படுத்தாமல் 150 மீட்டர் நீளமான குழாய் வழியாக நீராவியைப் பயன்படுத்தி இருப்பது இதில் சிறப்பான அம்சம் எனலாம். அதுமட்டுமல்ல, கிச்சடி சமைப்பது அதிலும் இப்படி ஜெயண்ட் கிச்சடி சமைப்பதென்றால் சமையலைத் தாண்டியும் சில விஷயங்களில் கவனம் செலுத்தியாக வேண்டுமே... பயன்படுத்தக் கூடிய சேர்மானப் பொருட்களின் சுத்தம் முதற்கொண்டு சமைக்கும் போது எந்த விதமான விபத்துக்களோ அல்லது அசம்பாவிதங்களோ நேர்ந்து விடக்கூடாது எனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வரை பலவிதமான புரோட்டோகால் முறைகள் இந்த கிச்சடி தயாரிப்பில் பின்பற்றப்பட்டிருக்கிறது.

சரி இப்படி தயாரான கிச்சடி யாருக்கு வழங்கப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் இல்லையா? ஜெயண்ட் கிச்சடி தயாரான நாளும் வட இந்தியர்கள் குரு பிரவாஸ் விழா கொண்டாடும் நாளும் ஒன்றாக அமைந்து விடவே அந்தக் கிச்சடியை டெல்லியிலிருக்கும் அட்சயபாத்ரா ஃபவுண்டேஷன் அமைப்பின் கீழுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது.

பிரமாண்ட உணவுத் திருவிழாவில் மெகா கிச்சடி கிண்டி முடித்து அதைக் குழந்தைகளுக்கும் வழங்கி விட்டு, இப்படி ஒரு பிரமாண்ட நிகழ்வு வெற்றிகரமாக நிகழத் துணை புரிந்த நமது இந்திய அரசுக்கும், அதன் உணவுத்துறை அமைச்சருக்கும், தனக்கு உதவி செய்த தனது சக செஃப்களுக்கும், கிச்சடியைப் பெற்றுக் கொள்ள மனமுவந்து முன் வந்த அட்ஷயபாத்ரா ஃபவுண்டேஷன் அமைப்பினருக்கும் இந்த நிகழ்வை கின்னஸ் உலக சாதனைகளில் ஒன்றாக அங்கீகரித்த கின்னஸ் சாதனை தேர்வுக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என முகநூலில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் மாஸ்டர் செஃப் சஞ்ஜீவ் கபூர்!

அதுமட்டுமல்ல, தனது பிரமாண்டமான இந்த சாதனைக் கனவு நிறைவேறத் துணையாக நின்ற அத்தனை பேருக்கும் அவர் நன்றி சொல்லியிருக்கிறார்.

வீடுகளில் மட்டுமல்ல, உணவுத் திருவிழாக்களில் மட்டுமல்ல, இனி இந்திய அரசியல் மேடைகளிலும் கூட கிச்சடி தொடர்ந்து பல விற்பன்னர்களால் கிண்டப்படலாம். அதற்கு அடிகோலிய பெருமை மத்திய அரசை மட்டுமே சாரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com