பரோட்டா போட பயிற்சி மையமா? புதுசா இருக்கே!

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரையிலும் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக பரோட்டா மாஸ்டர் தொழில் இருந்து வருகிறது.
Parotta coching centre
Parotta coching centre

படித்த இளைஞர்கள் தாங்கள் பெற்ற பட்டப்படிப்புக்குப் பொருத்தமான வேலையில் தான் சேருவோம் என்று பிடிவாதமாகக் காத்திருந்தது ஒருகாலம். அதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் கால தாமதம் நேர்ந்து பல்வேறு விதமான உளச்சிக்கல்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை நிராசையாகக் கடத்தியதெல்லாம் அந்தக் காலம் என்றாகி விட்டது இப்போது. ஆனால் பாருங்கள்... இன்றைய இளைஞர்கள் அப்படி இல்லை. அவர்கள் தாங்கள் படித்து வாங்கிய பட்டத்திற்கு ஏற்ற வேலை கிடைக்காவிட்டால் அதற்காக நெடுங்காலம் காத்திருக்க விரும்புவதில்லை. வருமானம் ஈட்டித்தரக்கூடிய எந்த வேலையாக இருந்தால் என்ன? அதைக் கெளரவமாகக் கற்றுக் கொண்டு  செய்யத் துடிக்கும் ஆர்வம் இளைஞர்களிடையே மிகுந்து வருகிறது. அதற்கொரு உதாரணம் தான் இந்த பரோட்ட பயிற்சி மையம்.

மதுரையைச் சேர்ந்த முகமது காசிம் எனும் இளைஞர் ‘செல்பி கோச்சிங் சென்டர்’ என்ற பெயரில் பரோட்டா போடக் கற்றுத்தரும் பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவரிடம் பரோட்டா போடுவது எப்படி எனப் பயிற்சி பெற பல இளைஞர்கள் முட்டி மோதுகிறார்கள். அவர்களில் வெளியூர் இளைஞர்கள் அதிகம் என்கிறார் முகமது காசிம். பி எஸ் சி, பி ஏ என கலை மற்றும் அறிவியல் கற்ற பட்டதாரி இளைஞர்கள் மட்டுமல்ல பொறியியல் பட்டதாரிகளும் கூட இவரிடம் வந்து பரோட்டா போடக் கற்றுக் கொள்கிறார்களாம். காரணம் இந்தத் தொழிலுக்கு இருக்கும் தேவையை முன்னிட்டுத்தான். மதுரை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதிலுமே பரோட்டா பிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள். தமிழகம் தாண்டி சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய நாடுகள், கனடா, வளைகுடா நாடுகள் என உலகெங்கும் பரோட்டா மாஸ்டர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1000 வரையிலும் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக பரோட்டா மாஸ்டர் தொழில் இருந்து வருகிறது. இதுவே வெளிநாடு என்றால் மாதம் ரூ.40,000 முதல் ரூ.80,000 வரையிலும் வருமானம் ஈட்டித்தரும் தொழிலாக இது விளங்குகிறது. 

இதன் காரணமாக இளைஞர்கள் பெருவாரியாக இந்த பயிற்சி மையத்தில் இணைந்து கற்றுக் கொள்ள விரும்பி முன் வருகிறார்கள் என்கிறார் பயிற்சி மையத்தை நடத்தி வரும் முகமது காசிம்.

காசிமின் மாணவர்களில் ஒருவர் பேசுகையில், ‘நான் பி எஸ் சி பட்டதாரி, படித்த படிப்பைக் கொண்டு லேப் டெக்னீசியனாகச் சில காலம் வேலை பார்த்தேன். ஆனால், அதில் கிடைத்த வருமானம் போதவில்லை. அதனால் வேறு ஏதாவது நல்ல வருமானம் ஈட்டித்தரும் வேலையைச் செய்யலாமே என்று தான் பரோட்டா பயிற்சி மையத்தில் சேர்ந்தேன்’ என்கிறார்.

ஆக, பரோட்டா மாஸ்டர் வேலை என்பது இப்போது படித்த இளைஞர்களிடையே பரவலான வரவேற்பைப் பெறும் வேலைவாய்ப்புகளில் ஒன்றாகி வருவது கண்கூடு.

‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் 
கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்’ - என்றார் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. ஆன்றோர் வாக்குக்கு என்றுமே மதிப்புண்டு. அதை மெய்ப்பிக்கிறார் போலிருக்கிறது இளைஞர்களின் பரோட்டா பயிற்சி மைய ஆர்வம்.

நன்றி: பி பி சி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com