முகப்பு லைஃப்ஸ்டைல் செய்திகள்
கூடிய விரைவில் கம்போடியப் பள்ளிகளில் பாடத்திட்டமாகி தினமும் ஒலிக்கவிருக்கிறது திருக்குறள்!
By RKV | Published On : 20th July 2019 01:29 PM | Last Updated : 20th July 2019 01:29 PM | அ+அ அ- |

கடந்த மாதம் கம்போடிய அரசு உயரதிகாரிகள் சிலர் தமிழகம் வந்து சென்றனர். அவர்கள் தமிழகம் வந்ததன் நோக்கம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த பல்லவ மன்னர்களுக்கும், கம்போடிய மன்னர்களுக்கும் இருந்ததாகக் கருதப்படும் அரசியல் மற்றும் கலாசார ரீதியிலான தோழமை உறவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளும் பொருட்டே! அப்படி அமைந்த பயணத்தில் அன்றைய பல்லவ மன்னர்களுக்கும், கம்போடிய மன்னர்களுக்கும் இருந்த நட்புறவைப் பறைசாற்றும் வண்ணம் பல சான்றுகளை அவர்கள் நேரில் கண்டு சென்றிருந்தார்கள்.
அந்தப் பயணத்தின் எதிரொலியாகக் கூடியவிரைவில் கம்போடியாவில் ரூ 25 கோடி செலவில் சோழ மன்னன் முதலாம் ராஜேந்திர சோழனுக்கும், கம்போடியாவின் கெமர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சூர்யவர்மனுக்குமான நட்பைப் பறைசாற்றும் விதமாக இருவருக்குமாக சிலைகளை உருவாக்கி அந்தச் சிலைகளை 2022 ஆம் ஆண்டில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறப்புவிழா நடத்தவிருப்பதாக கம்போடிய அரசு அறிவித்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, இந்தியாவுக்கும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் கம்போடியாவுக்குமான உறவுப்பாலத்தை மேலும் உறுதியாக்கும் விதத்தில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை கம்போடிய அரசுப் பள்ளி பாடத்திட்டங்களில் சேர்க்கவும் ஆணையிடப்பட்டிருப்பதாகத் தகவல். இந்தச் சீரிய பணியை அங்கோர் தமிழ்ச் சங்கமும், பன்னாட்டுத் தமிழர் நடுவமும் இணைந்து நடத்தவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மன்னர்களின் சிலை திறப்பு விழா நிகழ்வை கம்போடிய அரசின் கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகமும் சீனு ஞானம் ட்ராவல்ஸும் ஏற்று நடத்தவிருப்பதாக கம்போடிய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1330 குறள்களைத் தன்னகத்தே கொண்டுள்ள திருக்குறள் இதுவரை உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உலகின் எந்தப் பகுதியிலிருக்கும் மக்களுக்கும் பொருத்தமான வாழ்வியல் நீதிநெறிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்வதில் வியப்பேதும் கொள்ளத் தேவையில்லை. கூடிய விரைவில் திருக்குறள் இன்பத்தை கம்போடியர்களும் அறியவிருக்கிறார்கள் என்பது அதன் பெருமைக்கு கிடைத்த மற்றொரு வெற்றி.