
முகத்தில் எண்ணெய் வடிகிறது; மேக்கப் போட்டு சில நிமிடங்களில் கலைந்து விடுகிறது; முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள் அடிக்கடி வந்துசெல்கிறது என்று கவலைப்படுபவர்கள் சிறிது மெனக்கெட்டாலே போதும், இந்த பிரச்னையை சரிசெய்து விடலாம். வறண்ட சருமத்தைவிட எண்ணெய் சருமப் பிரச்சனைக்கு தீர்வு எளிதானது.
ஏனெனில் வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு பிற்காலத்தில் முகச்சுருக்கம் வந்துவிடும். ஆனால், எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவர்களுக்கு முகச்சுருக்கம் எளிதில் வராது.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சில விஷயங்களை கவனத்தில் கொண்டாலே போதுமானது. முதலில் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் தங்களது முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் முகத்தில் எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகம் சுரப்பதால் இது மாசுக்களை எளிதாக ஈர்க்கும். இதனால் முகத்தில் தொடர்ந்து கரும்புள்ளிகள், முகப்பருக்கள் ஏற்படுகிறது. எனவே, முகத்தை தொடாமல் இருப்பதன் மூலம் கைகளிலுள்ள அழுக்கு முகத்தில் சேராமல் தடைபடும். இதனால் முகப்பருக்கள் அதிகமாவதைத் தடுக்க முடியும்.
இதன் பிறகு முகத்தில் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தக்கூடிய சில பொருட்களை உபயோகிக்கலாம். வீட்டில் இருக்கும் தக்காளி, உருளைக்கிழங்கு, ஆப்பிள், பப்பாளி போன்ற பழங்களை மசித்து முகத்தில் ஸ்க்ரப் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
குறிப்பாக சில பொருள்களை கூற வேண்டுமென்றால், கற்றாழை மிக முக்கியமானது. கற்றாழை ஜெல்லை நன்றாக அலசிய பின்னர் தினமும் முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
அதே போன்று ஆலிவ் எண்ணெயை இரவு தூங்கும்முன் முகத்தில் தடவிவிட்டு படுக்கச்செல்வது நல்லது. ஏற்கனவே எண்ணெய் வடியும் முகத்தில் எண்ணெய் பயன்படுத்துவதா என்று யோசிக்க வேண்டாம். ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு புத்துணர்ச்சி தருகிறது. சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது அதே நேரத்தில் எண்ணெய் சுரப்புத் தன்மையையும் கட்டுப்படுத்துகிறது.
அதேபோன்று முட்டையின் வெள்ளை கருவுடன் அரிசி மாவு அல்லது பயத்தமாவு சேர்த்து பயன்படுத்தலாம்.
இவ்வாறு செய்ய முடியாதவர்கள் தினமும் குளிக்கும்போது கடலை மாவை பயன்படுத்துவது முகத்தில் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும்.
இதுதவிர உண்ணும் உணவுகளிலும் கவனம் செலுத்துவது அவசியம். பால் பொருட்கள், சர்க்கரை, உப்பு அதிகமுள்ள பொருட்கள், கொழுப்பு நிறைந்த உணவு வகைகல், துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மாறாக காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுபொருள்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.