

மிகவும் பிரபலமாகிவரும் ரெசின் கலை பயிற்சிப் பட்டறையில், திரைப்பட நடிகைகள் குஷ்பு, சுஹாசினி, பூர்ணிமா ஆகியோர் பங்கேற்று தங்களது கைவண்ணத்தை வெளிப்படுத்தினர்.
சினிமா, அரசியல், தேசிய மகளிர் உரிமை ஆணையர் என பன்முகங்களோடு இருந்தாலும் குஷ்பு சுந்தர், எப்போதும் குடும்பத்துக்காகவும் தனக்கெனவும் நேரத்தை செலவிடுவதற்கு முக்கியத்துவம் தருபவர். இவருடன் சுஹாசினி மணிரத்னமும், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் இணைந்து, ரெசின் கலை பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட கலகலப்பான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதையும் படிக்க.. ஆண் குழந்தைக்கே இன்னமும் ஆசைப்படுகிறார்கள் இந்தியர்கள்!
வண்ணங்களைப் பார்த்ததும், குஷ்பு, சுஹாசினி, பூர்ணிமா மூவருமே குழந்தைகளாக மாறி, தங்களது கைவண்ணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டனர். தோழிகளுடன் சேர்ந்து அவரவருக்குத் தோன்றிய வடிவங்களை ரெசின் கலையில் உருவாக்கி மகிழ்ந்ததோடு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சான்றிதழையும் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டனர்.
மூவரும் இந்த நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்களையும் அனுபவங்களையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
கலைஞர் கவிதா ஆனந்த் நடத்திய இந்த கலைப் பயிற்சிப் பட்டறையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர, அதனை மூவருமே தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ரீஷேர் செய்துள்ளனர்.
ரெசின் கலை
ரெசின் கலை என்பது, வழக்கமான தூரிகைகளைக் கொண்டு பெயிண்ட் அல்லது ஆயில் பெயிண்டுகளால் உருவாக்கப்படுவதல்ல. மாறாக, எபோக்ஸி எனப்படும் ஒருவிதமான ரசாயனக் கலவையைக் கொண்டு வண்ணங்கள் உருவாக்கப்பட்டு, மிக அழகிய வடிவங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த எபோக்ஸி உலர்ந்ததும், கண்ணைக் கவரும் அழகிய வடிவங்களும் ஓவியங்களும் உருவாகின்றன.
அனுபவமுள்ள கலைஞராக இருந்தாலும் அல்லது புதியவராக இருந்தாலும், ரெசின் கலை என்பது மிகவும் வேடிக்கையான அதேவேளையில் ஆக்கப்பூர்வமான கலைகளில் ஒன்றாகும்.
ரெசின் கலையானது, ஒரு கலைஞன், தனது உணர்வை வெளிப்படுத்த விரிந்து பரந்த சாத்தியக்கூறுகளை உருவாக்குகிறது.
அதன் தனித்துவமான பண்பானது, மிக அழகான, கவனத்தை கவரக்கூடிய மற்றும் மிகச் சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்க வழிவகை செய்வதால். கலையில் ரெசின் பயன்பாடு அண்மைக் காலத்தில் வெகுவாகப் பிரபலமாகி வருகிறது, ஏனெனில், இந்த கலையின்மூலம் தனித்துவமான வடிவமைப்பை உருவாக்க முடியும்.
தற்போது, நகைகள், வீட்டு அலங்காரங்கள் போன்றவை, இந்த ரெசின் கலை மூலம் உருவாக்கப்பட்டு வந்தாலும், பாரம்பரிய கலைகளின் மூலம் தொட முடியாத எல்லைகளைத் தொட விரும்பும் கலைஞர்களுக்கு நிச்சயம் ரெசின் கலை ஒரு சிறந்த தேர்வாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.