
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகள் மொபைல்போனுக்கு அடிமையாவதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து அதிகம் பேசப்படுகிறது.
சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி இப்போது விடியோ கேம்களில் குழந்தைகள், இளைஞர்கள் ஈடுபடுவதால் ஏற்படும் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் குழந்தைகளின் ஒட்டுமொத்த சரியான வளர்ச்சிக்கு அவர்களை ஆன்லைன் உலகத்தில் இருந்து தள்ளிவைக்க வேண்டும் என்று பெரும்பாலான நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடுவதால் சுதந்திரமாக தனிமையில் இருக்கின்றனர். டிவி, மொபைல் போனிலே அதிக நேரம் கழிக்கும் குழந்தைகளின் கல்வித்தரம் குறைகிறது என்றும் பெரும்பாலான ஆய்வுகளும் கூறுகின்றன. மேலும் அவர்களின் தனிப்பட்ட குணநலன்களும் மாறுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு ஆன்லைன் விளையாட்டு அல்லது மொபைல் போன் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு/பதின் வயதினருக்கு மூளைச் செயல்திறன் குறையும் 'பிரெயின் ராட்' என்ற பிரச்னை ஏற்படுகிறது.
அதிகமாக மொபைல்/கணினி பயன்படுத்துவது, ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும்போது நிஜ உலகத்தில் தொடர்பு இல்லாததால் ஏற்படும் அறிவாற்றல் குறைவே இந்த பிரெயின் ராட். இது நரம்பியல் குறைபாடு அல்ல, ஒருவகையான போதைக்கு அடிமையாவது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் அதிலிருந்து மீளலாம். எனினும் இந்த பாதிப்பில் இருந்து மீள்வது சாதாரணமானது அல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இளம்வயதினர் பலரும், இந்த பிரச்னை இருப்பது தெரியாமலும் எதிர்கால தாக்கம் குறித்து அறியாமலும் மனதளவில் போராடி வருவதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆஸ்டர் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான நரம்பியல் ஆலோசகர் டாக்டர் சி.பி. ரவிக்குமார் இதுகுறித்து விளக்கமளிக்கிறார்.
'பிரெயின் ராட்' எனும் மூளை செயல்திறன் குறைவு என்பது சிந்தனையற்ற மனத்தேக்க நிலை. அறிவாற்றல், கவனம் செலுத்தும் திறன், படைப்பாற்றல், கற்றல் திறன் உள்ளிட்டவை குறையும். மூளையில் சரியான தூண்டுதல் அல்லது சரியான மூளைப் பயன்பாடு இல்லாததால் மூளையில் ஏற்படும் செயல்திறன் குறைவு.
12 வயதுக்குள்பட்ட குழந்தைகள், குறிப்பாக சமூக ஊடகங்களில் தரம்குறைந்த, உண்மையல்லாத விடியோக்களை இரண்டு மணி நேரத்திற்கு மேல் பார்ப்பது அவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றலைத் தடுக்கிறது என்கிறார்.
அறிகுறிகள்
மூளைச் செயல்திறன் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நினைவுத் திறன் குறைதல், அமைதியின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம், அதிக உணர்ச்சியை வெளிப்படுத்துதல், கல்வி செயல்திறன் குறைதல், அறிவாற்றல், படைப்பாற்றல் குறைதல், சிந்தனையில் தெளிவின்மை, சமூக தொடர்புகளை விரும்பாமை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். இது மன நல பாதிப்புகளுக்கும் வழிவகுக்கும்.
இதையும் படிக்க | காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால்..! - ஆய்வில் முக்கிய தகவல்
காரணம்
கணினி, மொபைல் போனில் அதிக நேரம் இருப்பதுதான் மூளைச் செயல்திறன் குறைவு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.
நகர வாழ்க்கை முறை, தனிக் குடும்பங்களாக வசித்தல், கல்விக்கு அதிக முக்கியத்துவம், சமூகத் தொடர்புகள் இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்பு வாழ்க்கை, வேலைக்குச் செல்லும் பெற்றோரால் குழந்தைகள் தனித்திருத்தல் உள்ளிட்ட சூழ்நிலைக் காரணங்களால் குழந்தைகள் மொபைல்போன் அல்லது ஆன்லைன் விளையாட்டுகளில் அதிகம் ஈடுபடுகின்றனர்.
வெறுமனே மொபைல்போனை ஸ்க்ரோல் செய்வதாலோ ஆன்லைன் விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபடுவதாலோ மூளையில் டோபமைன் சுரப்பு குறைந்து எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சிந்தனைத் திறன் குறைகிறது. மேலும் ஸ்க்ரோல் செய்வதால் தற்காலிக மகிழ்ச்சி கிடைக்குமே தவிர, நமது மூளைக்கு பெரும்பாலாக தேவையில்லாதவைதான். இது மனநிலையையும் அதிகம் பாதிக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளை அதிக நேரம் கணினி/ மொபைல் திரை பார்ப்பதைக் குறைக்க வேண்டும்.
டிஜிட்டல் உலகத்தில் இருந்து அவர்களை தள்ளிவைத்திருக்க வேண்டும்.
குழந்தைகளுடன் பெற்றோர் நேரம் செலவழிக்க வேண்டும், மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது உள்ளிட்ட சமூகத் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்.
'பிரெயின் ராட்' என்ற இந்த வார்த்தை 2023-2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், 2024 ஆம் ஆண்டின் வார்த்தை 'பிரெயின் ராட்' என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் குழந்தைகள்/பதின்வயதினர் மட்டுமின்றி இளைஞர்கள், முதியவர்கள் என அனைவருக்குமே இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் இதிலிருந்து தற்காத்துக்கொள்ள கணினி, மொபைல் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.