விசித்ர மூர்த்தி சரபேஸ்வரரின் ரிஷிமூலம்!

ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள ராகு காலத்தில் இவரை வழிபடுவது சிறப்பு என்கிறார்கள். மனதை ஒருநிலைக்கு கொண்டு வந்து ‘நான்’ என்ற அகங்காரத்தை ஒழித்து, சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் சரபேஸ்
சரபேஸ்வரர் பட்சி ராஜா
சரபேஸ்வரர் பட்சி ராஜா

நமது இந்து மதத்தில் ஆயிரமாயிரம் கடவுள்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தோற்றுவாய்க் கதைகள் உண்டு. ஆதி சக்தி எப்படித் தோன்றினாள்? அவள் மும்மூர்த்திகளை எப்படிப் படைத்தாள், மகாலட்சுமி எங்கிருந்து தோன்றினாள்? சரஸ்வதி தேவி எங்கிருந்து தோன்றினாள், அவரவர்களின் பிறப்பு மூலம் என்ன? அவர்கள் வந்த காரியம் என்ன? காரணம் என்ன? கண்ணன் எப்படிப் பிறந்தான், எதற்காகப் பிறந்தான் என்றெல்லாம் கதைகள் இருப்பதைப் போல சரபேஸ்வரருக்கும் ஒரு கதை உண்டு.

அதைத் தெரிந்து கொள்ளும் முன்பு இந்துக் கடவுளரில் அரை தெய்வ அரை மிருக ரூபம் கொண்டவர்கள் யாரெல்லாம் என்று ஒரு பார்வை பார்த்து விடலாம்.

முதலில் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவரான ஆத்மசுத்தி கொண்ட ஜெய ஆஞ்சநேயரில் இருந்து தொடங்கலாம்.

அவரைப் பின்பற்றி பலர் வருகிறார்கள் இந்தப் பட்டியலில்.

வராகமூர்த்தி, நரசிம்மர், பிரத்யங்கரா தேவி, வராகி அம்மன், ஹயக்ரீவர், மச்சாவதார மூர்த்தி, நந்திகேஸ்வரர், பைரவ மூர்த்தி, சரபேஸ்வரர், ஆதிசேஷன் எனப் பெருந்தெய்வங்களையும் ராகு, கேது என நவக்ரஹங்களையும் நாம் அரை மனித, அரை மிருக ரூபத்தில் நாம் துதித்துக் கொண்டிருக்கிறோம்.

இவர்களில் சரபேஸ்வரர் உருவான கதையைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். 

ஐதீகக் கதை..

இரண்ய கசிபுவை வதம் செய்து பிரகலாதனைக் காக்க மகா விஷ்ணு நரசிம்ம மூர்த்தியாக தூணைப் பிளந்து கொண்டு அவதரித்தார். 

நரசிம்மரின் அவதார நோக்கம் முடிவடைந்த பின்னரும் கூட அவரது சினம் அடங்கவில்லை. உக்கிரமூர்த்தியாக கர்ஜித்துக் கொண்டிருந்த நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க இயலாத தேவாதி தேவர்கள் மகாதேவரைச் சரணடைந்தனர். முப்பத்து முக்கோடி தேவர்களின் கோரிக்கையை ஏற்று நரசிம்மரின் சினத்தைத் தணிக்க சிவபெருமான் சரபம் எனும் பறவையின் ரூபத்தை ஏற்று சரபேஸ்வரராகப் பூமியில் தோன்றுகிறார். 

இவரது தோற்றத்தைப் பற்றி வர்ணிக்கையில், மனித உடல், எட்டு கால்கள், நான்கு கரங்கள், கருடன் போன்ற மூக்கு, யாளியின் வாய், இரண்டு பெரிய இறக்கைகள், அவரது காலடியில் வணங்கி நிற்கும் நரசிம்மம் இதுவே சரபேஸ்வரரின் உருவமாகச் சித்தரிக்கப்படுகிறது. நாராயணன் நரசிம்மவதாரம் எடுத்த போது, அவரது உக்கிரத்தைத் தணிக்க அவரை விட உக்கிரமாக வெளிப்பட்ட சிவ வடிவமே சரபேஸ்வர வடிவம் என்கிறார்கள்.

// இதை பக்தி இலக்கிய காலத்தில் நிகழ்ந்த சைவ, வைணவ பக்திமார்க்கச் சண்டைகள் மற்றும் தர்க்கங்களுடன் வைத்து ஒப்பு நோக்கும் போது, வைணவர் போற்றும் மகா நரசிம்மரைத் தாழ்த்துவதற்காகவே சைவர்கள் கண்டறிந்த கடவுள் உருவம் தான் சரபேஸ்வரர் என்ற வாதமும் உண்டு. //

இந்த விசித்திரமான தோற்றத்துடன் சரபர் தோன்றும் போது வெளிப்பட்ட மாபெரும் ஓசையிலேயே நரசிம்மர் உக்கிரம் தணிந்து சாந்தி அடைந்து விட்டதாகச் சொல்வார்கள்.

இந்தக் கதை காஞ்சி புராணத்தில் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. அதாவது நரசிம்மரின் உக்கிரம் தணிக்க சிவபெருமான் முதலில் வீரபத்ரரை அனுப்பியதாகவும், வீரபத்ரரைக் கண்டு உக்கிரம் தணியாத நரசிம்மர் அவரைக் கட்டிப் போட்டு விட்டு வேடிக்கை பார்த்து அட்டகாசம் செய்யவே அதைப் பொறுத்துக் கொள்ள இயலாத சிவன் ரெளத்ர ஜோதி ரூபமாக வீரபத்ரரின் உடலுக்குள் புகுந்ததும் அதில் பெருவெடிப்போசையுடன் உதித்தார் சரபேஸ்வரர் என்கிறது காஞ்சி புராணம்.

சரபேஸ்வரரின் வேறு பெயர்கள்:

இவரைப் பட்சிகளின் அரசன் என்றும், நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி என்றும் சாலுவேஸ்வரன் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

சரபேஸ்வரரின் மனைவிகள்..

சரபேஸ்வரருக்கு தேவிகள் இருவர், அதில் மூத்தவர் பிரத்யங்கரா தேவி, இளையவர் சூலினி. இருவரும் இரு இறக்கைகளாக சரபருடன் சதா வாசம் செய்கிறார்கள். சரபரின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிவந்த அக்னியில் உதித்தவர் பிரத்யங்கரா தேவி என்ற கதையும் உண்டு. தேவியின் உதவியுடன் தான் சரபர், நரசிம்மரின் உக்கிரம் தணித்து சாந்தியடைய வைத்தார் என்கிறது காஞ்சி புராணம்.

சரபேஸ்வர வழிபாடு குறித்து வியாசர் சொல்வதென்ன?

தீவிரமான நோய்ப்பிணி கொண்டவர்கள் அதிலிருந்து சுகமடையவும், பயம், பீதி, இனம் காண முடியாத சஞ்சலத்தில் உழல்பவர்கள் அதிலிருந்து விடுபடவும், பகைவர்களை ஒழித்து ஜெயம் காணவும் சரபேஸ்வரரை வழிபட வேண்டும் என்கிறார் வேத வியாசர்.

சரபேஸ்வர வழிபாட்டுக்கு உகந்த காலம்...

ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள ராகு காலத்தில் இவரை வழிபடுவது சிறப்பு என்கிறார்கள். மனதை ஒருநிலைக்கு கொண்டு வந்து ‘நான்’ என்ற அகங்காரத்தை ஒழித்து, சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் சரபேஸ்வரர். அதுமட்டுமல்ல அப்படி வழிபடுபவர்களின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள், அவர்களது பிணிகள் நீங்கும், அவர்கள் எண்ணியதை எண்ணியாங்கு ஆள்வார்கள் என்கின்றன சரபேஸ்வர வழிபாட்டு நூல்கள்.

மைசூர் சாண்டல் சோப்பில் சரபரின் உருவம் லட்சிணையானது எப்படி?!

சரபரைப்பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான தகவலையும் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் குளியலுக்கு மைசூர் சாண்டல் சோப் பயன்படுத்தி இருக்கிறீர்களா? இல்லையென்றாலும் பரவாயில்லை... அந்த சோப்பின் கவரை உற்றுப் பாருங்கள். உள்ளே ஒரு விசித்திர உருவம் பொறிக்கப்பட்டிருப்பது தெரியும். அது சாட்ஷாத் நம் சரபேஸ்வரரின் உருவமே தான். 

முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய சந்தனமர ஏற்றுமதி செய்யும் பிரதேஷமாக கருநாடகம் இருந்து வந்தது. ஆனால், திடீரென போர் காரணமாக சந்தன மரங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பத் தடை ஏற்பட்டதால் கணக்கற்ற மரங்கள் தேங்கிப் போயின. அப்படி தேங்கிப் போன சந்தன மரக்கட்டைகளை லாபகரமானதாக மாற்றவே அன்றைய கர்நாடக மன்னர் கிருஷ்ண ராஜ உடையாரும், திவான் மோக்‌ஷகுண்டம் விஸ்வேரய்யாவும் இணைந்து திட்டமிட்டு 1916 ஆம் ஆண்டில் உருவாக்கியது தான் மைசூர் சாண்டல் சோப் ஃபேக்டரி. ஃபேக்டரி உருவான பின்னரும் சோப் அதன் திட்டமிட்ட வடிவை அடைய மேலும் சில காலம் ஆனது. அப்படி உருவான சோப்பின் லச்சினையாக சரப்ரை அவர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. அச்சமின்மையையும், சுதந்திர சிந்தனையையும் வெளிப்படுத்தும் விதமாக சரப லச்சினை அன்றைய மைசூர் அரசால் பொறிக்கப்பட்டதாக மைசூர் சாண்டல் சோப் உருவான வரலாறு சொல்கிறது.

Image courtesy: Google

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com