‘திடீர் மாரடைப்பு’ தடுக்கக்கூடியது தான்! எப்படி?

‘திடீர் மாரடைப்பு’ தடுக்கக்கூடியது தான்! எப்படி?

அவரது மரணத்திற்குப் பிறகு அந்த வீட்டில் இப்போது சதா ஓடிக்கொண்டிருக்கிறது திடீர் மாரடைப்பை எப்படியெல்லாம் தடுக்கலாம்? எப்படியெல்லாம் தவிர்க்கலாம்? என்ற பேச்சு. கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரமே தான்.

உறவுக்காரர்களில் ஒருவர் எந்நேரமும் ‘உர்’ரென உம்மனாம்மூஞ்சியாகவே இருப்பார். மரியாதை நிமித்தம் அவரை எப்போது சந்திக்கச் சென்றாலும் முக பாவனை மாறவே மாறாது. எங்களிடம் மட்டுமல்ல, அவர் தனது சொந்தக் குடும்பத்தினரிடமும் அப்படித்தான். அவரது இந்தப்போக்கை அவரது இயல்பான குணமென்று எண்ணி அப்படியே விட்டு விட்டார்கள் எல்லோரும். வருடங்கள் கடந்தன. கடந்த முறை ஊருக்குச் சென்றிருக்கையில் அவரைப் பார்க்க முடியவில்லை. சடன் கார்டியாக் அரெஸ்ட்... ஹார்ட் அட்டாக்... சடன் டெத் என்றார்கள். வருத்தமாக இருந்தது. அவர் இறக்கும் வரையிலும் எவரொருவரிடமும் மனம் விட்டுப் பேசியிருக்கவே வாய்ப்பில்லையே! என்று தோன்றியது.

எதற்காக அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார்? துளி சிரிப்பில்லாத முகம்... பெண்டாட்டியிடம் கூட அதட்டலான எஜமான மனோபாவம்!

குழந்தைகளுக்கு அவர் அப்பாவாக இருந்தாலும் அவர் வீட்டிலிருந்தால் அது வீடல்ல... பள்ளியின் ஹெட்மாஸ்டர் அறை தான். அப்படியோர் அமைதி.. அமைதியோ அமைதி.

இத்தனைக்கும் அவரது கட்டுப்பாடான வாழ்வில் அவர் ஸ்ட்ரிக்ட்டாகப் பின்பற்றியது ஆரோக்யமான உணவுப் பழக்கங்கள், தினமும் நடைபயிற்சி உண்டு. இரண்டு வேளை வீட்டில் பூஜையும் உண்டு. காலையில் பிரும்ம முஹூர்த்தத்தில் எழுந்து கொள்வார். நாள் தவறாமல் சூர்ய நமஸ்காரம் செய்வார். அப்புறமும் ஏன் சடன் கார்டியாக் அரெஸ்ட்?!

அவர் தன் வாழ்க்கையை ரசித்து வாழத் தெரியாதவராக இருந்திருக்கிறார். எல்லாமே அவருக்கு நியமங்களாகவே கண்ணில் பட்டிருக்கின்றன. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு வாழ்ந்து தனக்குக் கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை மட்டுமல்ல தன் குடும்பத்தினரின் சந்தோஷத்திற்கும் அவர் தடையாக இருந்திருக்கிறார். இது கூட அவரது ஹார்ட் அட்டாக்குக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

‘சடன் கார்டியாக் அரெஸ்ட்’ (Sudden Cardiac Arrest) என்று சொல்லப்படக்கூடிய திடீர் மாரடைப்புக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதில் சில காரணங்களாக மன உளைச்சல், தீவிர மன அழுத்தம், நிரந்தரத் தனிமையான மனநிலை, வாழ்வில் நீடித்த விரக்தி என்பனவற்றையும் அடக்கலாம். ஆரோக்யமற்ற உணவுப் பழக்கம், கட்டுப்பாடற்ற வாழ்க்கை, என்பவற்றைத் தாண்டி கொடூரத் தனிமை கூட இம்மாதிரியான பிரச்னைகளுக்குக் காரணமாகலாம்.

ஆனால், ஒரு விஷயத்தை இங்கே நாம் மறந்து விடக்கூடாது.

நான் மேலே குறிப்பிட்ட மனிதருக்கு மட்டும் எல்லோருடனும் கலந்து ஏதோ கொஞ்சம் பேசிச் சிரிக்கும் மனநிலை இருந்திருக்குமாயின் அவரால் தனக்கு வந்த பிரச்னையைப் பற்றி குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டிருந்திருக்க முடியும். அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். எதையும், யாருடனும் பகிர்ந்து கொள்ளாமலே போய் விட்டது தான் அவருடைய பிழை.

அவரது மரணத்திற்குப் பிறகு அந்த வீட்டில் இப்போது சதா ஓடிக்கொண்டிருக்கிறது திடீர் மாரடைப்பை எப்படியெல்லாம் தடுக்கலாம்? எப்படியெல்லாம் தவிர்க்கலாம்? என்ற பேச்சு.

கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரமே தான்.

ஆயினும், இது ஒரு ஆரோக்யமான முன்னெடுப்பே.. குடும்பத்தில் அப்பாவை யாரும் பின்பற்றத் தொடங்கி இருந்தால் அவர்களுக்கு உதவுமே!

சடன் கார்டியாக் அரெஸ்ட் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு அதன் பின்னர் உடனடியாக ஸ்பெஷலிஸ்டுகளை அணுகலாம். இத்தகைய திடீர் மாரடைப்புகள் உண்டாகக் காரணங்களைப் பட்டியலிட்டால் இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்தாலோ அல்லது இதயத் தசைகளில், ரத்த நாளங்களில்  பிரச்னைகள் இருந்தாலோ வரலாம் என்கிறார்கள் இதய மருத்துவர்கள். இத்தகைய பிரச்னைகளுக்குத் தீர்வுகள் இல்லாமலில்லை. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் முடியும்.

"கரோனரி தமனி நோய், கட்டமைப்பு இதய நோய்கள் மற்றும் இதயத்தின் மின் தொந்தரவுகள் உள்ளவர்கள் திடீர் மாரடைப்புக்கு ஆளாக நேரிடலாம். ஆனால் மக்களுக்கு இதைக்குறித்த போதிய தெளிவு இருந்தால்... ஆபத்து காரணிகளைக் கட்டுப்படுத்தி தீர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால் 50% இந்த நோயைத் தடுத்து விட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் காவேரி மருத்துவமனையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மருத்துவர்கள் தெரிவித்தது தான் மேலே குறிப்பிடப்பட்டவை.

தவிர மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல கரோனரி தமனி நோய் உள்ளவர்கள், தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது, ஆரோக்யமான உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பது, அதன் மூலமாக உயர் ரத்த அழுத்தத்தையும், கொழுப்பையும் கட்டுக்குள் வைப்பது, நீரழிவு நோய் மற்றும் ஒபிசிட்டி அண்டாமல் பார்த்துக் கொள்வது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக திடீர் மாரடைப்பு உண்டாவதற்கான காரணங்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் தங்களது உரையில் குறிப்பிட்டார்கள்.

திடீர் மாரடைப்பு உண்டாவதற்கான பெரும்பான்மைக் காரணங்களில் ஒன்றாக ’அரித்மியாஸ்’ கருதப்படுகிறது. இதன் பொருள் அசாதாரணமான இதய ஓசை. ஆங்கிலத்தில் சொல்வதென்றால் Abnormal Heart Rhythms. இதில் பலவகையான ரிதங்கள் இருந்தாலும் அதில் உயிருக்கு ஆபத்தானது எது என்று பார்த்தால் வெண்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷனைச் சொல்லலாம். இது எப்படி இருக்குமென்றால்? இதயத்தின் கீழறைகளில் வெண்ட்ரிக்கிள் சுவர்களில் தொடர்ந்து அடுத்தடுத்து தாங்க முடியாத அளவுக்கு, வாய் விட்டுச் சொல்லிவிட முடியாத அளவுக்கு விட்டு விட்டு வலியை உணர்வது. 

இதற்கான அறிகுறியை நாம் இருவாரங்களுக்கு முன்னதாகவே அறிந்து கொள்ள முடியும் என்கிறார்கள் இதய மருத்துவர்கள்.

ஆண்களுக்கு எனில் முதலில் சாதாரண மார்பு வலியில் தொடங்கும். அதை வாயுக்கோளாறு என்று பெரும்பாலானோர் அசட்டை செய்து விடுகின்றனர். அதே பெண்களுக்கு எனில், மூச்சுத்திணறல், இன்னதென்று விவரிக்க முடியாத மயக்க உணர்வு, சோர்வு அல்லது இதயப் படபடப்பு போன்ற அறிகுறிகள் உணரப்படும்.

40 வயதிற்குப் பின் இம்மாதிரியான அறிகுறிகள் இருப்பின் தயவு செய்து தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று ஒருமுறை அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து கொள்வது நல்லது.

தேவைப்பட்டால் ஓபன் ஹார்ட் சர்ஜரி இன்றியே சடன் கார்டியாக் அரெஸ்ட்டைத் தடுத்துவிட முடியுமென்கிறார்கள் இதய நோய் மருத்துவர்கள். 

சரி கட்டுரையை முழுதாக வாசித்து விட்டீர்களா? இப்போது சொல்லுங்கள்.

திடீர் மாரடைப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதெல்லாம் அப்புறம்... முதலில் அப்படி ஒரு பிரச்னைக்கு நீங்களே உங்களை வலிந்து ஆளாக்கிக் கொள்ளாமல் இருக்கப் பார்ப்பீர்களா இல்லையா?

ஆம், குடும்பத்திற்குள் அலுவலக அதிகாரங்களைச் செயல்படுத்தி வீட்டையே கறார் பள்ளிக்கூடங்களாகவோ அல்லது ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸாகவோ மாற்றி விடாதீர்கள்.

சிரிக்கச் சிரிக்கப் பேசுவது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. குறைந்தபட்சம் குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசி, உங்களது பயங்களையும், பதற்றங்களையும் பகிர்ந்து கொண்டு அவற்றுக்கான தீர்வுகளை அடையப்பாருங்கள். அதுவே போதும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com