தீபாவளியும் அதுவுமாக இனிப்பு வியாபாரிகளைச் சென்றடைந்துள்ள கசப்பு மாத்திரைகள்!

கடந்த மாதம், ஏலக்காய் விலை கிலோவுக்கு, 6,000 ரூபாய் வரை கிடு கிடுவென உயர்ந்தது, ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பு, அதே கிலோ ஏலக்காய் 850 ரூபாய்க்கு விற்பனையானது.
தீபாவளியும் அதுவுமாக இனிப்பு வியாபாரிகளைச் சென்றடைந்துள்ள கசப்பு மாத்திரைகள்!

தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், நெய், பால் பொருட்கள் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றின் விலை அதிகரித்திருப்பது இனிப்பு தயாரிப்பாளர்களை கவலையடையச் செய்துள்ளது. ஏனெனில், இந்திய இனிப்பு வகைகளில் சுமார் 60% இனிப்புகளுக்கேனும் செரிமான பண்புகளைக் கொண்ட நறுமண ஏலக்காயைப் பயன்படுதுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான சூழலில் தற்போது தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இனிப்பு தயாரிப்புக்கான இடுபொருட்களில் ஒன்றான ஏலக்காய் மற்றும் மூலப்பொருட்களில் ஒன்றான நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இனிப்பு வர்த்தகர்கள் தங்களுக்கான வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள லாப வரம்பைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

“கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, ஏலக்காய் சாகுபடியில் பெருமளவில் உற்பத்தி  குறைந்தது. வெள்ளச் சேதத்தை அடுத்து இப்போது தான் புதிய பயிர்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் ஏலக்காய் உள்ளிட்ட உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளின் விலையானது கிலோ ₹ 3,000  - 3,700 வரையிலாகக் குறைக்கப்படுகிறது. தீபாவளிக்குப் பிறகு, தேவை குறைவதால் விலைகள் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று உலர் பழங்களின் மொத்த விற்பனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், ஏலக்காய் விலை கிலோவுக்கு, 6,000 ரூபாய் வரை கிடு கிடுவென உயர்ந்தது, ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பு, அதே கிலோ ஏலக்காய் 850 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இப்போது திடீரென்று தீபாவளி மற்றும் கடந்த ஒருமாத காலமாகத் தொடர்ந்து ஒன்று மாற்றி ஒன்றாக வந்து கொண்டிருக்கும் விழாக்களால் ஏலக்காய் விலையேற்றத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக ஒரு தோற்றம் நிலவுகிறது. இதற்குக் காரணம், சில கடைக்காரர்கள்... செயற்கையாகத் தேவையை உருவாக்க தங்களது பங்குகளைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள், இது போன்ற செயல்களே விலை உயர்வுக்கு வழிவகுக்கின்றன. இதனால் ஏலக்காயைப் பயன்படுத்தி இனிப்புகள் தயாரிப்பதற்கு முன்பு இனி இனிப்பு உற்பத்தியாளர்கள் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டியதாக இருக்கும் என இனிப்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கருதுகிறார்கள்.

ஏலக்காயுடன், நெய் மற்றும் பால் சார்ந்த பிற பொருட்களான வெண்ணெய் மற்றும் கோவா ஆகியவற்றின் விலைகளும் சமீபத்திய பால் பொருட்களுக்கான விற்பனை மற்றும் விலை திருத்தத்திற்குப் பிறகு அதிகரித்துள்ளன. நெய் விலையானது கிலோவுக்கு 100 ரூபாய் வீதம் அதிகரித்திருக்கையில் இனிப்பு உற்பத்தியாளர்கள் தங்களது லாபத்தைக் குறைத்துக் கொண்டால் மாத்திரமே வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் நிலை நீடித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு லாபம் குறையலாம். ஆனால் முதலுக்கு மோசம் வர வாய்ப்பில்லை என்கிறார்கள் வர்த்தகர்கள்.

இச்சூழலில், தனியாக கடைகள் வைத்து இனிப்பு தயாரிப்பவர்கள் மற்றும் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்களைக் காட்டிலும் ஹோம் மேட் இனிப்புகள் தயாரித்து வழங்குபவர்களின் நிலையானது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.

எது எப்படியாயினும் ஏலக்காய் மற்றும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வானது தீபாவளி நேரத்தில் இனிப்பு தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்படும் கசப்பு மாத்திரை போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com